எஸ்.எல்.டி மொபிடெல் ஈகல்ஸ் அணி மற்றும் புனித பீட்டர்ஸ் கல்லூரி சூப்பர் 7s போட்டிகளில் வெற்றி

222

இலங்கை ரக்பி சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சூப்பர் 7s போட்டிகள் இவ்வாரம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் நடைபெற்றது. இவ்வார போட்டிகளில் எஸ்.எல்.டி மொபிடெல் ஈகல்ஸ் அணி மற்றும் பாடசாலை பிரிவில் புனித பீட்டர்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றன.

முதல் நாள்

முதல் நாளான 5ஆம் திகதி எஸ்.எல்.டி மொபிடெல் ஈகல்ஸ் அணியானது எக்ஸஸ்  கிங்ஸ் அணியை எதிர்கொண்டு 32-12 என்று வெற்றியீட்டியது.மேலும் 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் எஸ்.எல்.டி மொபிடெல் ஈகல்ஸ் அணி குழு A யில் முன்னிலைகொண்டது.

குழு A வில் நடைபெற்ற மற்ற போட்டிகளில் தலா இரண்டு போட்டிகள் வீதம் வெற்றிகொண்ட சொப்ட்லொஜிக் வொரியர்ஸ் மற்றும் கெ.பி.எஸ்.எல் ட்ராகன் அணிகள் புள்ளி வித்தியாசம் காரணாமாக முறையே 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.

எக்ஸஸ் கிங்ஸ் அணியானது எந்த ஒரு போட்டியையும் வெற்றிகொள்ளாது 4ஆம் இடத்தை பிடித்துக்கொண்டது.

ஈ.ஸி.வை வூல்வ்ஸ் அணி போட்டியிட்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று குழு Bயில் முதல் இடத்தைப் பிடித்துக்கொண்டது.

ரிச்சர்ட் தர்மபால வழி  நடத்தும் கார்கில்ஸ் க்லெடியேட்டர்ஸ் அணி முதலாம் நாளின் அதி கூடிய புள்ளிகள் பெற்ற சாதனையை, எடிசலாட் பெந்தர்ஸ் அணியை 40-7 என்று வெற்றிக்கொண்டதன் மூலம் பெற்றுக்கொண்டது.

இதனால் கார்கில்ஸ் க்லெடியேட்டர்ஸ் அணி குழு B யில் 2ஆம் இடத்தைத் தக்கவைத்தது .

எடிசலாட் பெந்தர்ஸ் அணி வாக்கர்ஸ் சி.எம்.எல் வைப்பர்ஸ் அணியை வெற்றிக்கொண்டதன் மூலம் 3ஆம் இடத்தையும், வாக்கர்ஸ் சி.எம்.எல் வைப்பர்ஸ் அணி அணைத்து போட்டிகளிலும் தோல்வியுற்று 4ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

பாடசாலை மட்டத்திலான போட்டிகளில் லீக் வெற்றியாளர்களாகிய இசிபதன அணி மற்றும் புனித பீட்டர்ஸ் அணி முன்னிலை பெற்றது.

முதலாம் குழுவில் முதல் போட்டியில் புனித வெஸ்லி கல்லூரியை  விறுவிறுப்பான போட்டியின் பின் வெற்றிகொண்ட இசிபதன கல்லூரி தொடர்ந்து புனித தோமஸ் கல்லூரி மற்றும் டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரிகளை வெற்றிகொண்டு ஒரு போட்டியிலேனும் தோல்வியடையாது குழுவில் 1ஆம் இடத்தை பிடித்தது.

ஆரம்பப் போட்டியில் தோல்வியுற்ற போதிலும் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியை 34-14 என வெற்றிக்கொண்டும், புனித தோமஸ் கல்லூரியுடனான போட்டியில் இறுதி நேரத்தில் ட்ரை வைத்து போட்டியை வெற்றிகொண்டும் 2ஆம் இடத்தைப் பிடித்தனர்.

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியை மட்டுமே வெற்றிகொண்ட புனித தோமஸ் கல்லூரி 3ஆம் இடத்தையும், டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி 4ஆம் இடத்தையும் பிடித்தது.

இரண்டாம் குழுவில் தான் போட்டியிட்ட அனைத்து போட்டிகளையும் இலகுவாக வெற்றிகொண்ட புனித பீட்டர்ஸ் கல்லூரி முதல் இடத்தைப் பிடித்தது.

பீட்டர்ஸ் அணியுடன் மட்டுமே 26-5 என தோல்வியடைந்த புனித ஜோசப் கல்லூரி இரண்டாம் இடத்தை பிடித்தது.

சாஹிரா  கல்லூரியை வெற்றிகொண்ட பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 3ஆம் இடத்தையும், எந்தப் போட்டியிலும் வெற்றிகொள்ளாது சாஹிரா கல்லூரி 4ஆம் இடத்தையும் தக்கவைத்து.

2ஆம் நாள்

2ஆம் நாளான  6ஆம் திகதியானது காலிறுதிப் போட்டிகளுடன் ஆரம்பமானது.

கழகங்களுக்கான காலிறுதிப் போட்டிகளில் மொபிடெல் ஈகல்ஸ் அணி எதிர்பார்த்தது போலவே வாக்கர்ஸ் சி.எம்.எல் வைப்பர்ஸ் அணியை 22-7  என்று வெற்றிகொண்டது. இரண்டாவது காலிறுதிப் போட்டியில் கார்கில்ஸ்  க்லெடியேட்டர்ஸ்,கே.பி.எஸ்.எல் டிராகன்ஸ் அணியை 36-10 என்று இலகுவாக வெற்றிகொண்டு அரையிறுதிக்கு முன்னேறியது.

சாப்ட்லாஜிக் வொரியர்ஸ், எடிசலாட் பெந்தர்ஸ் அணியை 22- 07 என இலகுவாக வெற்றிகொண்டு அரையிறுதிக்கு முன்னேற இறுதி காலிறுதிப் போட்டியில் முன்னைய நாளில் அனைத்துப் போட்டிகளிலும் தோற்றது போலவே இப்போட்டியிழும் எக்ஸஸ் கிங்ஸ் அணியானது ஈ.சி.வை வூல்வ்ஸ் உடன் தோல்வியுற்றதன் மூலம் ஈ.சி.வை வூல்வ்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

அரை இறுதிப் போட்டியில் மொபிடெல் ஈகல்ஸ் அணியுடன் தோல்வியுற்ற கார்கில்ஸ் க்லெடியேட்டர்ஸ் அணியானது பிளேட் கிண்ணத்தை ஈ.சி.வை வூல்வ்ஸ் அணியை 28-7 எனத் தோற்கடித்து பெற்றுக்கொண்டது.

1ஆம் நாளில் சிறப்பாக விளையாடிய ஈ.சி.வை வூல்வ்ஸ் அணி இரண்டாம் நாளில் தோல்விகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

சி.எம்.எல் வைப்பர்ஸ் அணியானது எக்ஸஸ் கிங்ஸ் அணியை ஷீல்ட் கிண்ண இறுதிப் போட்டியில் 22-7 என வெற்றிகொண்டு ஷீல்ட் கிண்ணத்தை வென்றது. எக்ஸஸ் அணியானது இரு நாட்களிலும் ஒரு போட்டியேனும் வெற்றிபெறாமல் வெளியேறியது.

சாம்பியன்ஷிப் கிண்ணத்திற்காக இறுதிப் போட்டிகளில் மொபிடெல் ஈகல்ஸ் அணி மற்றும் சாப்ட்லாஜிக் வொரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.

புள்ளிகள் சமமாக இருக்கும் பொழுது தரிந்த ரத்வத்தவின் இறுதி நிமிட ட்ரை மூலம் முதல் பாக சாம்பியன்ஸ் கிண்ணத்தை மொபிடெல் ஈகல்ஸ் அணி சுவீகரித்தது .

பாடசாலை மட்டம்

கப் இறுதிப் போட்டியில் புனித பீட்டர்ஸ் கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரிகள் மோதிகொண்டன. தீக்ஷண தசாநாயக பீட்டர்ஸ் அணி சார்பாக 4 ட்ரை வைக்க பீட்டர்ஸ் அணி 31-12 என்ற புள்ளி அடிப்படையில் இறுதிப் போட்டியில் இலகுவான வெற்றியைப்பெற்று கப் கிண்ணத்தை சுவீகரித்தது.

ஜோசப் அணியானது அரையிறுதிப் போட்டியில் லீக் சாம்பியன்ஸ் இசிபதன கல்லூரியை விறுவிறுப்பான போட்டியில் 2புள்ளிகளால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

திறமை மிக்க இசிபதன கல்லூரி அரை இறுதிப் போட்டியின் தோல்வியின் பின்னர் பிளேட் இறுதி போட்டியில் வெஸ்லி அணியை 29-00 என்று தோற்கடித்து பிளேட் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.

சாஹிரா கல்லூரி காலிறுதிப் போட்டியில் புனித தோமஸ் கல்லூரியுடன் யாரும் எதிர்பார்க்காதவாறு 17-12 என்று அதிர்ச்சி வெற்றியைப்பெற்று போவ்ல் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

போவ்ல் கிண்ண இறுதிப் போட்டியில் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியை 29-05 என்று வெற்றிகொண்டு போவ்ல் கிண்ணத்தை வென்றது.

இரண்டு நாட்களிலும் திறமையை வெளிக்காட்டத் தவறிய புனித தோமஸ் கல்லூரி ஷீல்ட் கிண்ண இறுதிப் போட்டியில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் அணியை 31-05 என்று வெற்றிகொண்டு ஷீல்ட் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது.

சூப்பர் 7s போட்டிகளின் இரண்டாம் பாகம் 12 மற்றும் 13 திகதிகளில் கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் நடைபெறும்.