பங்களாதேஷூடன் சுபர் 4 சுற்றில் மீண்டும் மோதும் இலங்கை கிரிக்கெட் அணி

288

ஆசியக் கிண்ணத் தொடரில் குழு B இல் காணப்பட்ட ஆப்கான் அணியை வீழ்த்திய இலங்கை அணி, இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் சுபர் 4 வாய்ப்பினைப் பெற்றிருந்தது.

>> நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு

இந்த நிலையில் ஆசியக் கிண்ணத் தொடரில் குழு B இல் காணப்படும் இலங்கை கிரிக்கெட் அணியானது சுபர் 4 சுற்றில் விளையாடும் முதல் போட்டி நாளை (09) பங்களாதேஷ் அணியுடன் ஆரம்பமாகின்றது.

இலங்கை அணி

இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் இறுதியாக ஆப்கானை எதிர்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அப்போட்டியில் தப்பி பிழைத்திருந்தது என்றே குறிப்பிட முடியும். இலங்கை வீரர்கள் ஆப்கான் மோதலில் இலகுவாக வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும் ஆப்கான் வீரர்களின் துடுப்பாட்டம் போட்டியின் போக்கினை மாற்றியிருந்ததோடு இலங்கை கிரிக்கெட் அணி தொடரில் இருந்து வெளியேறும் நிலையொன்றினையும் ஏற்படுத்தியிருந்தது. எனினும் இலங்கை அணிக்கு ஆப்கான் போட்டியில் கிடைத்த த்ரில்லரான வெற்றி சுபர் 4 சுற்று வாய்ப்பினை உறுதி செய்திருந்தது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆப்கான் போட்டியில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல காணப்பட்டிருந்தன. அதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாக இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை குறிப்பிட முடியும். துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆடுகளம் ஒன்றில் இலங்கையின் முன்வரிசை வீரர்கள் சிறந்த ஆரம்பம் ஒன்றைப் பெற்ற போதும் மிக இலகுவான முறையில் தங்களது விக்கெட்டுக்களை எதிரணி வீரர்களுக்கு

தாரை வார்த்திருந்தனர். இந்த விடயங்கள் காரணமாக ஒரு கட்டத்தில் முதல் இன்னிங்ஸில் பெரும் ஓட்ட எண்ணிக்கையினை பெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த இலங்கை அணி தொடர்ச்சியான விக்கெட்டுக்களால் 291 ஓட்டங்களையே எடுத்தது. இந்த தவறுகள் பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

>> மழைக்காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை – மே.தீவுகள் இளையோர் போட்டி

அதேநேரம் இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தினை தமது ஆளுகைக்குள் கொண்டிருக்கும் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் இதுவரை எதிர்பார்த்த துடுப்பாட்டத்தினை வழங்கத் தவறியிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க அண்மைய ஒருநாள் போட்டிகளில் மோசமான துடுப்பாட்டத்தினையே வெளிப்படுத்தியிருந்தார். ஷானக தனது துடுப்பாட்டத்தில் பிரத்தியேகமாக கவனம் செலுத்துவது இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறைக்கு இன்னும் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

மறுமுனையில் ஆப்கான் அணியுடனான போட்டியில் ஆரம்பத்தில் இலங்கை அணி களத்தடுப்பிலும் சில தவறுகளை மேற்கொண்டிருந்தது. இந்த விடயங்களிலும் மாற்றங்கள் இடம்பெறும் பட்சத்தில் இலங்கை அணி எதிரணியின் ஓட்டங்கள் பெறுவதனை கட்டுப்படுத்த முடியும்.

இலங்கை அணியின் பந்துவீச்சு ஒப்பிட்டளவில் கடந்த போட்டியில் சிறப்பாக இருந்த போதும் மொஹமட் நபியின் துடுப்பாட்டம் விடயங்களை புரட்டிப் போட்டிருந்தது. இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் ஓய்வு பெற்றிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அடுத்த போட்டியில் இருக்கும் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களை வைத்து பங்களாதேஷ் அணியினை சமாளிக்க வேண்டிய பொறுப்பு

இலங்கை வீரர்களுக்கு காணப்படுகின்றது. இலங்கை மாற்றங்களின்றி பங்களாதேஷ் போட்டியில் களமிறங்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை எதிர்பார்க்கை குழாம்

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, மகீஷ் தீக்ஷன, மதீஷ பதிரன, கசுன் ராஜித

>> இந்திய அணியுடன் இணையும் கேஎல் ராகுல்

பங்களாதேஷ் அணி

ஆசியக் கிண்ணத் தொடரின் சுபர் 4 சுற்றுக்கு குழு B இல் இருந்து முதல் அணியாக தெரிவாகிய பங்களாதேஷ் சுபர் 4 சுற்றில் லாஹூரில் வைத்து பாகிஸ்தான் அணியுடன் ஒரு போட்டியில் விளையாடியிருப்பதோடு அப்போட்டியில் தோல்வியினையும் தழுவியிருந்தது. எனவே இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை தக்கவைக்க பங்களாதேஷ் அணிக்கு இலங்கை மோதலில் கட்டாய வெற்றிய பெற வேண்டியது அவசியமாகும்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஏற்கனவே குழுநிலை மோதலில் இலங்கை அணியுடன் தோல்வியினைத் தழுவிய போதும் அதனை வைத்து பங்களாதேஷை குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. அவ்வணிக்காக ஆசியக் கிண்ணத் தொடரில் சிறப்பாக துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த நஜ்முல் ஹொசைன் ஷன்டோ தொடரில் இருந்து வெளியேறியிருக்கின்றார். எனினும் அணியின் நம்பிக்கைகுரிய துடுப்பாட்டவீரரான லிடன் தாஸ் அணிக்குள் மீண்டிருக்கின்றார். இதேநேரம் அணியின் அனுபவமிக்க வீரர்களான முஷ்பிகுர் ரஹீம், சகீப் அல் ஹசன் ஆகிய இருவரும் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் பொறுப்புடன் ஆடியிருந்தது துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி இன்னும் பலம் பெற்றிருப்பதனை வெளிப்படுத்துகின்றது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது முஷ்தபிசுர் ரஹ்மான் மற்றும் தஸ்கின் அஹ்மட் ஆகியோர் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களாக நம்பிக்கை வழங்க, சகீப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹஸன் சுழல்வீரர்களாகவும் சகலதுறைவீரர்களாகவும் தமது தரப்பிற்கு நம்பிக்கை சேர்க்கின்றனர்.

எதிர்பார்க்கை பங்களாதேஷ் குழாம்

மொஹமட் நயீம், லிடன் தாஸ், தௌகீத் ரிதோய், சகீப் அல் ஹசன் (தலைவர்), முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹஸன், சமிம் ஹொசைன், தஸ்கின் அஹ்மட், ஹசன் மஹ்மூட், முஸ்தபிசுர் ரஹ்மான்

மழையின் தாக்கம்

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான போட்டி நாளை (09) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது. போட்டி நடைபெறும் நகரமான கொழும்பில் அதிக மழைவீழ்ச்சி கடந்த சில நாட்களாக பதிவாகியுள்ள நிலையில், இலங்கை – பங்களாதேஷ் போட்டியிலும் மழையின் பாதிப்பு இருக்க முடியும் என நம்பப்படுகின்றது. எனவே போட்டியின் நாணய சுழற்சியின் போது இரு அணிகளும் மழையின் பாதிப்பினை கருத்திற் கொண்டு முடிவுகளை மேற்கொள்வது சிறந்தது.

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<