நெதர்லாந்தை வீழ்த்திய நமீபியாவுக்கு வரலாற்று வெற்றி

ICC T20 World Cup – 2021

118
Getty
 

T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் நமீபியா அணி நெதர்லாந்து அணிக்கெதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.

தனது ஆரம்பப் போட்டியில் இலங்கையிடம் படுதோல்வி அடைந்த நமீபியா அணி, நெதர்லாந்து அணி விடுத்த 165 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை இலகுவாக அடைந்து மிகவும் அவசியமான வெற்றியைப் பெற்றுக்கொண்டது. இந்த வெற்றியின் மூலம் சுப்பர் 12 சுற்றுக்கு செல்ல முடியும் என்ற தனது நம்பிக்கையை நமீபியா அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது.

T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றின் 7ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து – நமீபியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

>> இலகு வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தினை ஆரம்பித்த இலங்கை

அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு ஆரம்ப வீரர்களான மெக்ஸ் ஓடவுட் – ஸ்டெபான் மைபெர்க் ஜோடி அதிரடியான ஆரம்பத்தைக் கொடுத்தது. இதில் மைபெர்க் 17 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வென்டெர் மெர்வே 6 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார்.

இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மெக்ஸ் ஓடவுட் அரைச் சதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 70 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.

இறுதியில் நெதர்லாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நமீபியா அணி தரப்பில் ஜன் பிரைலிங் 2 விக்கெட்டுகளை அதிபட்சமாகக் கைப்பற்றினார்.

இதையடுத்து 165 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நமீபியா அணி முதல் 3 விக்கெட்களை குறைந்த எண்ணிக்கைக்கு இழந்ததால் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

>> T20 உலகக் கிண்ணம்; தகுதி சுற்றில் இலங்கைக்கு எதிரான சவால்கள்

இதில் சேன் கிறீன் (15), கிரெய்க் வில்லியம்ஸ் (11), ஸ்டெபான் பார்ட் (19) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த அணித் தலைவர் கெஹார்ட் எரஸ்மஸ், தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேவிட் வீஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து நமீபியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

டேவிட் வீஸ் 40 பந்துகளில் 4 பௌண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும் கெர்ஹார்ட் எரஸ்மஸ் 22 பந்துகளில் 4 பௌண்டரிகள், 2 சிக்ஸருடன் 32 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதியில் நமீபியா அணி, 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் 166 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

ஐசிசி இன் T20 உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக பங்குகொண்டுள்ள நமீபியா, இந்த வெற்றியின் மூலம் தமது முதல் உலகக் கிண்ண வெற்றியைப் பதிவு செய்தது. இதேவேளை, இந்த தோல்வியின் மூலம் நெதர்லாந்து அணி T20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

போட்டியின் ஆட்டநாயகன் விருது டேவிட் வீஸுக்கு வழங்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

நெதர்லாந்து அணி – 164/4 (20) – மெக்ஸ் ஓடவுட் 70, கொலின் அக்கட்மென் 36, ஸ்கொட் எட்வர்ட்ஸ் 21, ஜன் பிரைலிங் 36/2

நமீபியா அணி – 166/4 (19) – டேவிட் வீஸ் 66, கெர்ஹார்ட் எரஸ்மஸ் 32, ப்ரெட் களாஸன் 14/1

முடிவு – நமீபியா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

>> Click here to view Full Scorecard