முதல் LPL பட்டத்தை குறிவைத்துள்ள கோல் கிளேடியேட்டர்ஸ்

Lanka Premier League – 2021

206

கடந்த ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இறுதிப் போட்டி வரை முன்னேறி சம்பியன் பட்டத்தை தவறவிட்ட கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, இம்முறை இரண்டாவது பருவத்தில் மேலும் சில பிரபலமிக்க உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களுடன் பலமிக்க அணியாக களமிறங்கவுள்ளது.

அண்மையில் நிறைவுக்கு வந்த T20 உலகக் கிண்ணத்தில் பிரகாசித்த இலங்கை அணியின் மத்திய வரிசை அதிரடி ஆட்டக்காரரான பானுக ராஜபக்ஷ, கடந்த பருவத்தினைப் போல இம்முறை LPL தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை வழிநடத்தவுள்ளார்.

அத்துடன், கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, முன்னாள் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் உமர் குல் செயல்படவுள்ளதுடன், உதவி பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வீரர் இந்திக டி சேரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் இசுரு உதான, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் மொஹமட் ஹபீஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான சமித் படேல் ஆகிய மூவரும் இம்முறை LPL தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு வலுச்சேர்க்கவுள்ளளர்.

LPL தொடரின் இரண்டாவது கிண்ணத்தை குறிவைக்கும் ஜப்னா!

அதேபோல பிக் பாஷ், பாகிஸ்தான் சுப்பர் லீக் உள்ளிட்ட தொடர்களில் திறமைகளை வெளிப்படுத்திய பென் டன்ங்க், இம்முறை LPL தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியுடன் இணையவுள்ளமை அந்த அணிக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுக்கவுள்ளது.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான சர்பராஸ் அஹமட், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான T20 தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தில் இடம்பிடித்துள்ள காரணத்தினாலும், தென்னாபிரிக்காவின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் தப்ரிஸ் ஷம்ஸி, ஒமிக்ரோன் வைரஸ் பரவல் காரணமாகவும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியுடன் இணைந்துகொள்ள மட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் போட்டித்தடைக்குள்ளாகிய ஆரம்ப வீரர் தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 6 மாத இடைவெளியின் பிறகு முதல் முறையாக LPL தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளதனால் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இதில் கடந்த ஆண்டு LPL தொடரில் வெற்றிகரமான துடுப்பாட்ட வீரராகவும், அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும் இடம்பிடித்த தனுஷ்க குணதிலக்க, கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வருவதில் முக்கிய பங்குவகித்தார்.

கடந்த ஆண்டு 10 போட்டிகளில் விளையாடி 476 ஓட்டங்களைக் குவித்த அவர், நான்கு அரைச்சதங்களை எடுத்து முதல் பருவத்தில் அதிக அரைச்சதங்கள் பெற்ற வீரராகவும் இடம்பிடித்தார்.

எனவே, கடந்த 6 மாதங்களாக எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத தனுஷ்க குணதிலக்கவுக்கு, கடந்த ஆண்டைப் போல இம்முறை LPL தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க முடியுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவரது அண்மைக்கால திறமைகள் நிச்சயம் அந்த அணிக்கு இம்முறை தொடரிலும் நம்பிக்கையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல, கடந்த ஆண்டு கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடிய குசல் மெண்டிஸ், இம்முறை பருவத்தில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியில் களமிறங்கி தனது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளார்.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சை பார்க்கும் போது, முதல் சீசனில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ஐந்து வீரர்களில் மூவர் இம்முறை சீசனில் அந்த அணிக்காக விளையாடவுள்ளனர்.

இதில் கடந்த பருவத்தில் 13 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுக்களை எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த தனன்ஜய லக்ஷான், இம்முறையும் அந்த அணிக்காக பந்துவீச்சைப் போல, துடுப்பாட்டத்திலும் பங்களிப்புச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல, கடந்த பருவத்தில் கோல் அணிக்கு சுழல் பந்துவீச்சில் கைகொடுத்திருந்த லக்ஷான் சந்தகென், இம்முறை பருவத்தில் அந்த அணிக்காக மீண்டும் களமிறங்கவுள்ளார். கடந்த முறை 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி, அதிக விக்கெட்டுக்களை எடுத்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தையும் அவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LPL டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வது எப்படி?

இதனிடையே, கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் மொஹமட் ஆமிர், இம்முறை பருவத்தில் அந்த அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சையும் தாங்கிப் பிடிக்கவுள்ளார். கடந்த பருவத்தில் 11 விக்கெட்டுக்களைப் கைப்பற்றிய அவரது அனுபவம், இம்முறை பருவத்திலும் கோல் அணிக்கு பலத்தைக் கொடுக்கவுள்ளது.

மொஹமட் ஆமீரை தவிர்த்து பாகிஸ்தானின் அன்வர் அலி, இங்கிலாந்தின் சமித் படேல் போன்ற அனுபவ வீரர்களும் அந்த அணிக்கு பந்துவீச்சில் நம்பிக்கை கொடுக்கவுள்ளனர்.

அதுமாத்திரமின்றி, கடந்த முறை பருவத்தில் விளையாடிய மாலிங்கவின் பாணியில் பந்துவீசுகின்ற நுவன் துஷார, உள்ளூர் T20 போட்டிகளில் பிரகாசித்த புலின தரங்க மற்றும் லஹிரு மதுஷங்க ஆகிய வீரர்களும் இம்முறை LPL தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு வலுச்சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, முதல் பருவத்தைப் போல கோல் கிளேடியேட்டர்ஸ் அணி அதிகமாக துடுப்பாட்ட வீரர்களை சார்ந்திருக்காமல், அனுபவமிக்க பந்துவீச்சு மற்றும் சகலதுறை வீரர்களின் உள்ளடக்கமும் அந்த அணிக்கு இம்முறை சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு மிகப் பெரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணி

உள்ளூர் வீரர்கள் – பானுக ராஜபக்ஷ (தலைவர்), தனுஷ்க குணதிலக்க, இசுரு உதான, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, தனன்ஜய லக்ஷான், சுமிந்த லக்ஷான், புலின தரங்க, லஹிரு மதுஷங்க, மொஹமட் ஷமாஸ், அஷைன் டேனியல், கெவின் கொத்திகொட, நுவன் துஷார, அஞ்செலோ ஜயசிங்க, பிரமோத் மதுஷான்

வெளிநாட்டு வீரர்கள் – மொஹமட் ஹபீஸ் (பாகிஸ்தான்), மொஹமட் ஆமிர் (பாகிஸ்தான்), அன்வர் அலி (பாகிஸ்தான்), சமித் படேல் (இங்கிலாந்து), பென் டன்ங்க் (அவுஸ்திரேலியா), நூர் அஹ்மட் (ஆப்கானிஸ்தான்)

உத்தேச முதல் பதினொருவர் – தனுஷ்க குணதிலக்க, பென் டன்ங்க், குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, மொஹமட் ஹபீஸ், லஹிரு மதுஷங்க, தனன்ஜய லக்ஷான், புலின தரங்க, மொஹமட் ஆமிர், நூர் அஹ்மட், அஷைன் டேனியல்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<