வடக்கு அயர்லாந்து அணியிடமும் போராடி தோல்வியினை தழுவிய இலங்கை

549

வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் தமது இரண்டாவது போட்டியில் வடக்கு அயர்லாந்து அணியினை இன்று (13) எதிர்கொண்ட இலங்கை வலைப்பந்து அணி 67-50 என்கிற புள்ளிகள் கணக்கில் தோல்வியினை தழுவியுள்ளது. 

உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கைக்குத் தோல்வி

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் இன்று………..

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் 15 ஆவது முறையாக இடம்பெறும் வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் 16 நாடுகளின் வலைப்பந்து அணிகள் நான்கு குழுக்களாக பங்கெடுக்கின்றன. 

இதில் குழு A இல் பங்கேற்கும் இலங்கை வலைப்பந்து அணி தமது முதல் குழுநிலை போட்டியில் நேற்று (12) ஜிம்பாப்வே அணியினை எதிர்கொண்டு அதில் 79-49 என்கிற புள்ளிகள் கணக்கில் தோல்வியினை தழுவியிருந்தது. 

இதேநேரம் வடக்கு அயர்லாந்து அணியும் வலைப்பந்து உலகக் கிண்ணத்தின் நடப்புச் சம்பியன்களான அவுஸ்திரேலிய வலைப்பந்து அணியிடம் தமது முதல் போட்டியில் 88-24 என்கிற புள்ளிகள் கணக்கில் அதிர்ச்சி தோல்வியினை பெற்றிருந்தது. 

இந்நிலையில் வலைப்பந்து உலகக் கிண்ணத்தில் தத்தமது முதல் போட்டிகளில் தோல்வியினை தழுவிய இலங்கை வலைப்பந்து அணியும் வடக்கு அயர்லாந்து அணியும் தத்தமது முதல் வெற்றிகளை எதிர்பார்த்து மோதியிருந்த இப்போட்டி லிவர்பூலின் எம்&எஸ் வங்கி அரங்கில் ஆரம்பமாகியது. 

பலத்த எதிர்பார்ப்புக்களுடன் தொடங்கிய இப்போட்டியில் இலங்கை வலைப்பந்து அணி சார்பாக வடக்கு மாகாணத்தை சேர்ந்த எழிலேந்தினி சேதுகாவலர் தனது கன்னி வலைப்பந்து உலகக் கிண்ணத்தில் ஆடும் சந்தர்ப்பத்தினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து போட்டியில் இலங்கை வலைப்பந்து அணி மெதுவான ஆரம்பத்தையே காண்பித்தது. இதேநேரம் வடக்கு அயர்லாந்து வலைப்பந்து அணி தமது சிறப்பான பந்துப் பரிமாற்றம் காரணமாக போட்டியின் முதல் கால்பகுதியினை 18-13 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தம்வசப்படுத்தியது. 

பின்னர் இரண்டாம் கால்பகுதியில் இலங்கை மங்கைகளின் தடுப்பு முயற்சிகள் சிறந்த விதத்தில் அமைந்திருக்கவில்லை. இதனால், இலங்கை வலைப்பந்து அணி போட்டியின் இரண்டாம் கால்பகுதியினையும் வடக்கு அயர்லாந்து வலைப்பந்து அணியிடம் 16-12 புள்ளிகள் கணக்கில் பறிகொடுத்தது. 

அதன்படி, போட்டியின் முதல் அரைப்பகுதியில் வடக்கு அயர்லாந்து அணி 34-25 என்கிற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றுக் கொண்டது. 

தொடர்ந்து போட்டியின் மூன்றாம் கால்பகுதியிலும் இலங்கை மங்கைகள் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறியிருந்தனர். அதனால் போட்டியின் மூன்றாம் கால்பகுதியினையும் வடக்கு அயர்லாந்து அணி 17-12 என்கிற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிக் கொண்டது. 

இதேநேரம் மூன்றாம் கால்பகுதியில் பெற்றுக் கொண்ட புள்ளிகள் மூலம் வடக்கு அயர்லாந்து அணி போட்டியிலும் 51-37 என்கிற புள்ளிகள் கணக்கில் தொடர்ந்தும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. 

இதன் பின்னர் போட்டியின் இறுதிக் கால்பகுதியினையும் தமது ஏனைய கால்பகுதிகளில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய வடக்கு அயர்லாந்து அணியே 16-13 என்கிற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி போட்டியில் 67-50 என்கிற புள்ளிகள் கணக்கில் இலங்கை வலைப்பந்து அணியினை தோற்கடித்தது. 

இந்த போட்டியில் இலங்கை வலைப்பந்து அணியின் சார்பாக தர்ஜினி சிவலிங்கம் 52 முயற்சிகளில் 47 புள்ளிகளை பெற்று போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனையாக மாறியிருந்தார். எனினும், இலங்கை வலைப்பந்து அணியின் தோல்வியின் காரணமாக தர்ஜினி பெற்ற புள்ளிகள் அனைத்தும் வீணாகியிருந்தன. 

அதேநேரம் வடக்கு அயர்லாந்து வலைப்பந்து அணி சார்பாக எம்மா மாக்கி 29 புள்ளிகளுடன் தனது தரப்பில் அதிக புள்ளிகள் பெற்றிருந்தார். 

போட்டியின் சிறந்த வீராங்கனையாக வடக்கு அயர்லாந்து அணியின் கரோலின் ஓ”ஹென்லோன் தெரிவாகினார். 

இப்போட்டியின் மூலம் இந்த வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது தோல்வியினை தழுவியிருக்கும் இலங்கை வலைப்பந்து அணி, தமது அடுத்த போட்டியில் வலைப்பந்து உலகக் கிண்ண நடப்புச் சம்பியன்களான அவுஸ்திரேலிய வலைப்பந்து அணியினை நாளை (14) எதிர்கொள்கின்றது. 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<