சதீரவின் அபார சதத்துடன் ஜப்னா அணிக்கு 2ஆவது வெற்றி

National Super League 2023

91

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் நேற்று (14) நடைபெற்ற போட்டிகளில் ஜப்னா மற்றும் தம்புள்ள அணிகள் வெற்றிகளை பதிவுசெய்துள்ளன.

இம்முறை போட்டித்தொடரில் இந்த இரண்டு அணிகளும் தத்தமது 2ஆவது வெற்றிகளை பதிவுசெய்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

போட்டித்தொடரின் முதலாவது சதத்தை நேற்றைய தினம் ஜப்னா அணிக்காக விளையாடிய அதன் தலைவர் சதீர சமரவிக்ரம பதிவுசெய்ய, தம்புள்ள அணியின் ரனித லியனாரச்சி அரைச் சதம் அடித்து அசத்தியிருந்தார்.

அதேபோல, ஜப்னா அணிக்கெதிரான போட்டியில் காலி அணியின் லஹிரு மதுசங்க 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார்.

ஜப்னா எதிர் கண்டி

தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சகலதுறையிலும் பிரகாசித சதீர சமரவிக்ரம தலைமையிலான ஜப்னா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொண்டது. இதன் மூலம் இம்முறை போட்டித் தொடரில் தொடர்ச்சியாக 2ஆவது வெற்றியை அந்த அணி பதிவுசெய்தது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி, 49.3 ஓவர்களில் 227 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

கண்டி அணி சார்பில் அதிகபட்சமாக சஹன் ஆரச்சிகே 40 ஓட்டங்களையும், லஹிரு உதார 36 ஓட்டங்களையும், லசித் குரூஸ்புள்ளே 31 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கவில்லை.

ஜப்னா அணியின் பந்துவீச்சை பொருத்தவரை திலும் சதீர 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷான் மற்றும் நவோத் பரனவிதான தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

NSL ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த ஜப்னா, தம்புள்ள

இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணி, சதீர சமரவிக்ரமவின் அபார சதத்தின் உதவியுடன் 48.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அந்த அணிக்காக வேகமாக துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம 7 பௌண்டரிகள் அடங்கலாக 113 பந்துகளில் 107 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் தனுக தாபரே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

எனவே, தங்களுடைய 2ஆவது போட்டியிலும் ஜப்னா அணி வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க, கண்டி அணி தங்களுடைய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

தம்புள்ள எதிர் காலி

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ள அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தம்புள்ள அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மினோத் பானுக 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து வேகமாக ஓட்டங்களைக் குவித்தாலும், ஏனைய முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களை எடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இவ்வாறான நிலையில், சகலதுறை வீரர்களான ரனித லியனாரச்சி அரைச் சதம் கடந்து 69 ஓட்டங்களையும், வனிந்து ஹஸரங்க 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து வலுச்சேர்த்தனர். இருப்பினும் தம்புள்ள அணியால், 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. காலி அணியின் பந்துவீச்சில் சுமிந்த லக்ஷான், மஹீஷ் தீக்ஷன மற்றும் கவிஷ்க அன்ஜுல ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

ஷெவோன் டேனியல் தலைமையில் UAE செல்லும் இலங்கை U19 அணி!

இதனையடுத்து 234 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி, ஜப்னா அணிக்கு எதிரான முதல் போட்டியைப் போல இந்தப் போட்டியிலும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 35.5 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

காலி அணிசார்பில் அதிகபட்சமாக துனித் வெல்லாலகே 38 ஓட்டங்களையும், கவிஷ்க அன்ஜுல 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கவில்லை. பந்துவீச்சை பொருத்தவரை நுவன் துஷார மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இதன்மூலம், போட்டித்தொடரில் தங்களுடைய 2ஆவது போட்டியில் விளையாடி தம்புள்ள அணி 2ஆவது வெற்றியை பதிவுசெய்ய, காலி அணி 2ஆவது தோல்வியை சந்தித்தது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<