9ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் 28ஆவது போட்டி இன்று மாலை ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் சுரேஷ் ரயினா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி முரளி விஜெய்  தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர் கொண்டது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்ஸ் அணியின் தலைவர் சுரேஷ் ரயினா முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணித் தரப்பில் அதிகபட்ச ஓட்டமாகத் தலைவர் முரளி விஜய் 41 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களையும், சஹா 33 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 31 ஓட்டங்களையும் எடுத்தனர். குஜராத்அணியின் பந்து வீச்சாளர்களில் ஷிவில் கவுசிக் 3 விக்கட்டுகளை வீழ்த்த, பிரவீண் குமார் மற்றும் டுவயின் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினார்கள்.

இதனை அடுத்து 155 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில்  9 விக்கட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை  மட்டுமே எடுத்தது, இதனால் இப்போட்டியில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.  குஜராத் அணி தரப்பில் ஜெம்ஸ் பால்க்னர் 32 ஓட்டங்களையும் இஷான் கிஷான் 27 ஓட்டங்களையும், சுரேஷ் ரயினா 18 ஓட்டங்களையும் பெற்றனர். மற்ற துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களோடு ஆட்டமிழந்தனர். பஞ்சாப் தரப்பில் பந்து வீச்சில் அக்ஸார் படேல் இவ்வருட ஐ.பி.எல் தொடரில் முதல் ஹெட்ரிக்கைப் பெற்ற வீரர் என்ற பெருமையை தன் வசப்படுத்தி 4 விக்கட்டுகளை வீழ்த்தினார். அவரோடு  மொஹித் சர்மா 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அக்ஸார் படேல் தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்