ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றுக்கான இலங்கை உத்தேச குழாம் அறிவிப்பு

AFC Cup 2023

970

அடுத்த மாதம் உஸ்பகிஸ்தானில் இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிகளில் ஆடுவதற்கான இலங்கை உத்தேச குழாம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் (FFSL) செவ்வாய்க்கிழமை (24) வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிய கிண்ண போட்டிகளுக்கான மூன்றாம் கட்ட தகுதிச் சுற்றில் C குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, குறித்த குழுவுக்கான போட்டிகளை நடாத்தும் உஸ்பகிஸ்தான், தாய்லாந்து மற்றும் தெற்காசிய நாடான மாலைதீவுகள் ஆகிய அணிகளுடன் போட்டியிடவுள்ளன. இந்த போட்டிகள் அனைத்தும் ஜூன் மாதம் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

குறித்த தொடருக்கான இலங்கை அணியினை தயார்படுத்தும் நோக்கில் 30 இற்கும் அதிகமான வீரர்கள் கடந்த சில வாரமாக கொழும்பில் முகாமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடினர்.

இந்த நிலையில், தற்போது இந்த உத்தேச குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள், சாப் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத் தொடர் ஆகியவற்றில் உள்ளடங்கிய வீரர்கள் பலருடன், அண்மையில் நிறைவுற்ற மாகாண அணிகளுக்கு இடையிலான தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களும், 23 வயதின்கீழ் தேசிய அணியில் இடம்பெற்ற வீரர்கள் சிலரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தேச குழாத்தில் அணியின் தலைவரும் சிரேஷ்ட வீரருமான சுஜான் பெரேராவுடன் சேர்த்து ஆறு கோல் காப்பாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதில் இளம் வீரர்களான மொஹமட் முர்ஷித் மற்றும் நுவன் கிம்ஹான ஆகியோரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த குழாம் புதன்கிழமை (25)  விஷேட பயிற்சிகளுக்காக கட்டார் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதன் பின்னர் எதிர்வரும் 4ஆம் திகதி கட்டாரில் இருந்து உஸ்பகிஸ்தான் நோக்கி இலங்கை அணி பயணம் மேற்கொள்ளும்.

எனினும், உஸ்பகிஸ்தான் செல்லும் முன்னர் ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான 23 பேர் அடங்கிய இறுதிக் குழாம் தெரிவு செய்யப்படும் என இலங்கை கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட அமிர் அலர்ஜிக் அண்மையில் தனது சேவையை நிறைவு செய்துள்ளமையினால் இந்த தொடருக்கு இலங்கை அணி புதிய பயிற்றுவிப்பாளர் குழாத்துடன் இந்த தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை உத்தேச குழாம்  

T கஜகோபன், அசிகுர் ரஹ்மான், ஷரித்த ரத்னாயக்க, ஹர்ஷ பெர்னாண்டோ, ஷலன சமீர, சுஜான் பெரேரா, மெஹமட் பசால், மொஹமட் ஆகிப், கவீஷ் லக்பிரிய, பிரபாத் அறுனசிறி, ஷமோத் டில்ஷான், அப்துல் பாசித், மொஹமட் பயாஸ், மரியதாஸ் நிதர்சன், மொஹமட் முர்ஷித், ஷதுரங்க மதுஷான், நுவன் கிம்ஹான, S ஜேசுதாசன், T கிளிண்டன், மொஹமட் சபீர், ராசிக் றிஷாட், திலிப் பீரிஸ், அபீல் மொஹமட், மொஹமட் சிபான், ஷெனால் சந்தேஷ், லசித்த பெர்னாண்டோ, சசன்க டில்ஹார, மொஹமட் அமான், மொஹமட் ஹஸ்மீர், தரிந்து தனுஷ்க, வின்சண்ட் கீதன், மொஹமட் முதஸ்தாக், ஜூட் சுபன், டிலன் டி சில்வா, வசீம் ராசிக்

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<