இலங்கையின் கால்பந்து முன்னேற்றத்திற்கு கட்டாரின் புதிய திட்டம்

National Football

247

கத்தார் கால்பந்து சங்கம் மற்றும் கத்தாரின் அஸ்பயர் அகடமி ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை கால்பந்து சம்மேளனம் மேற்கொள்ளவுள்ள கால்பந்து முன்னேற்றத்திற்கான 3 வருட அபிவிருத்தி திட்டமொன்று உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள பயிற்றுவிப்பாளர் குழாம் மற்றும் இந்த புதிய திட்டம் என்பவற்றை அறிமுகம் செய்யும் ஊடக சந்திப்பு வெள்ளிக்கிழமை (20) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த புதிய திட்டத்தில், எதிர்காலத்தில் விளையாடவுள்ள இலங்கை கால்பந்து வியூக முறைமையை உருவாக்கும் வகையில் மகளிர் அணி, இளையோர் அணிகள் உட்பட சகல தேசிய அணிகளும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு ஒரே உத்திகளுடன் பயிற்சிகள் அளிக்கப்படும்.

புதிதாக நியமனம் பெற்று இந்த வாரம் இலங்கை வந்தடைந்த தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அண்ட்ரூ மொர்ரிஸன் மற்றும் உதவிப் பயிற்றுவிப்பாளர் கெய்த் ஸ்டீவன்ஸ் ஆகியோர் தேசிய அணி வீரர்களைக் கண்காணித்து அவர்களது ஆற்றல்களை ஆய்வு செய்துள்ளதுடன் தற்போதைய தேசிய அணியின் பயிற்சி நிலையங்களையும் பார்வையிட்டனர். அணியைத் தயார் செய்யும் பணியில் அவர்கள் இருவரும் உள்ளூர் பயிற்றுவிப்பாளர் குழாத்துக்கு ஆலோசனை மற்றும் ஆதரவு வழங்கிவருகின்றனர்.

1995 தங்கக் கிண்ண வெற்றியின்போது இலங்கை அணியின் உடற்தகுதி பயிற்றுவிப்பாளராக இருந்த மார்க்கஸ் பெரெய்ரா, இந்த திட்டத்திலும் உடற்தகுதி பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் உலகக் கிண்ண அணித் தலைவரான டிம் காஹில் இந்த திட்டத்தின் தலைமை கால்பந்து அதிகாரி மற்றும் திட்டப் பணிப்பாளராக செயற்படவுள்ளதுடன் முழுத் திட்டத்தையும் அஸ்பயர் அகடமி சார்பாக மேற்பார்வை செய்யவுள்ளார்.

தேசிய அணிகளின் மேம்பாட்டு மூலோபாயங்களில் பல கூறுகளை இந்தத் திட்டம் கொண்டிருக்கும். போட்டி கட்டமைப்பில் சீர்திருத்தங்கள், அதிசிறப்பு பயிற்சிக் கல்வி மற்றும் ஆலோசனை, அடிமட்ட மற்றும் இளையோருக்கான உறுதியான கால்பந்தாட்ட கட்டமைப்பை ஸ்தாபித்தல், மிகச் சிறந்த வீரர்களுக்கு வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான நிபுணத்துவ பரிமாற்றங்களையும் புலமைப்பரிசில்களையும் வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

இடைக்கால ஏற்பாடாக போட்டிக்கான திட்டங்களை வகுத்தல் , வீரர்கள் தொடர்பான மதிப்பீடுகள், போட்டிகளை ஆய்வு செய்தல் போன்ற உதவிகளும் உள்ளூர் பயிற்றுவிப்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

மேலும், உஸ்பெகிஸ்தானில் இடம்பெறவுள்ள AFC கிண்ண தகுதிகாண் சுற்று நிறைவுபெற்றதும் இரண்டு பயிற்றுவிப்பாளர்களும் தாங்கள் கண்டறிந்தவை தொடர்பான பூரண அறிக்கை ஒன்றை இலங்கை கால்பந்து நிருவாகத்திற்கும் கத்தார் கால்பந்தாட்ட சங்கத்திற்கும் சமர்ப்பிப்பார்கள். அதில் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளையும் அவர்கள் முன்வைப்பார்கள்.

சர்வதேச தரவரிசையில் தற்போது 205ஆம் இடத்தில் உள்ள இலங்கைக்கு குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைய இந்தத் திட்டம் வழிவகுக்கும் என்று இலங்கை கால்பந்து சம்மேளனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் “எனது வாழ்நாளில் நான் நேசித்த விளையாட்டை மேம்படுத்தும் எனது கடப்பாட்டின் ஓர் அங்கமாக இலங்கை மக்களுக்கு இந்த விசேட திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய சகல செலவினங்களையும் ஏற்று உதவ முன்வந்துள்ள கத்தார் கால்பந்தாட்ட சங்கத் தலைவர் ஷெய்க் ஹமாத் பின் அல் கலீபா அல் தானி, அஸ்பயர் அகடமி மற்றும் அஸ்பயர் மன்றம் ஆகியவற்றின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் காஹில் ஆகியோருக்கு நான் நன்றி கூறுகிறேன். மிகவும் இக்கட்டான இந்த காலகட்டத்தில் இலங்கைமக்களுக்கு உதவி வரும் கத்தார் மக்களுக்கு எனது விசேட நன்றிகள்” என்று தெரிவித்தார்.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<