கடற்படை அணியை அபாரமாக வெற்றி கொண்டது சொலிட்

345

டயலொக் சம்பியன்ஸ் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் சுப்பர் 8 சுற்று சனிக்கிழமை (3ஆம் திகதி) கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

சுப்பர் 8 சுற்றின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை (4ஆம் திகதி) நடைப்பெற்ற போட்டிகளில், முதல் போட்டியில் கடற்படை அணியை சொலிட் அணி வென்றதோடு, கொழும்பு அணிக்கும் நியூ யங்ஸ் அணிக்கும் இடையிலான இரண்டாவது போட்டி சமநிலையில் முடிந்தது.

முதல் சுற்றில் A குழுவில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட சொலிட் அணியும், B குழுவில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட கடற்படை அணியும் சூப்பர் 8 சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்வதற்காக இப்போட்டியில் மோதின.

போட்டியின் ஆரம்பத்தில் கடற்படை அணியின் கிரிஷாந்த பெரேரா தலைனால் முட்டி கோல் அடிக்க முனைய சொலிட் அணியின் கோல் காப்பாளர் அதனை சிறப்பாக தடுத்து அணியை காப்பாற்றினார். கடற்படை அணியினர் வேகமாக விளையாட, சொலிட் அணியினர் அதனை நிதானமாக கட்டுப்படுத்தி வந்தனர்.

கடற்படை அணி போட்டியில் கட்டுப்பாட்டை தமக்குள் கொண்டிருந்தாலும், அதிர்ச்சி கொடுத்த சொலிட் அணி 25ஆவது நிமிடத்தில் அபூமரே மூலமாக முதலாவது கோலை அடித்தது. கோல் காப்பாளர் இல்லாத சந்தர்ப்பத்தில் கம்பத்தினுள் இலகுவாக கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார் அபூமரே. முதலாவது பாதியின் இறுதி கட்டத்தில் கடற்படை அணியின் பின் வரிசை வீரர்கள் செய்த தவறினை பயன்படுத்திக் கொண்ட சொலிட் அணியின் பிரபோத் பெனால்டி பகுதியிலிருந்து இலகுவாக கோல் அடித்தார்.

முதல் பாதி : சொலிட் 02 – 00 கடற்படை அணி

இரண்டாவது பாதியில் கடற்படை அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இரண்டாவது பாதியிலும் சொலிட் அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. போட்டியின் 72ஆவது நிமிடத்தில் சொலிட் அணி வீரர் தக்ஷில தனோஜ் மூலமாக மற்றுமொரு கோலை அவ்வணி பெற்றது. அதனை கடற்படை அணியின் கோல் காப்பாளர் தடுக்க முனைந்த போதும் அவரால் அது முடியாமல் போனது.

கடற்படை அணி புதிய வீரர்களை அணியினுள் கொண்டுவந்த பொழுதும் சொலிட் அணியே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. சொலிட் அணி சார்பாக மாற்று வீரர் சஜீவன் 88ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 4-0 என சொலிட் அணி முன்னிலை வகிக்க உதவினார். 4 கோல்களுடன் முடித்து விடாமல் மேலதிக நேரமான 90+2ஆவது நிமிடத்தில் சஜீவன் மீண்டும் ஒரு கோல் அடித்து தனது அணியை 5-0 என முன்னிலையடைய செய்தார்.

இறுதியில் சொலிட் அணி திறமை வாய்ந்த கடற்படை அணியை 5-0 என்று வென்று சூப்பர் 8 சுற்றில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் ஆட்ட நாயகனாக சொலிட் அணியின் பிரபோத் தெரிவு செய்யப்பட்டார்.

முழு நேரம் : சொலிட் 02 – 00 கடற்படை அணி


நியூ யங்ஸ் மற்றும் கொழும்பு கழகத்திற்கு இடையிலான போட்டி

இந்தப் போட்டியில் இரு அணிகளும் ஆரம்பத்தில் இருந்தே நிதானமாக விளையாடி வந்தன. போட்டியின் 8ஆவது நிமிடத்தில் கொழும்பு அணியின் யாபோ அடித்த பந்தை தடுத்து நிறுத்திய நியூ யங்ஸ் அணியின் கோல் காப்பாளர் ஆரம்ப கட்டத்திலேயே தனது அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினார். போட்டியின் 17ஆவது நிமிடத்தில் நியூ யங்ஸ் அணியின் பிரியங்கர மற்றும் கொழும்பு அணியின் ஹபீல் ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் பிரியங்கரவிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

19ஆவது நிமிடத்தில் கொழும்பு அணியின் சர்வான் அடித்த கோல் ஓப் சைட் காட்டப்பட்டமை கொழும்பு அணிக்கு ஏமாற்றம் அளித்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் கோல்களைப் பெறுவதற்கான பல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் இரு அணிகளும் அவற்றை பயன்படுத்திக்கொள்ள தவறின. இரு அணியனரதும் அனைத்து முயற்சிகளும் தடுக்கப்பட்ட நிலையில் முதல் பாதி கோல்கள் இன்றி சமநிலையில் முடிந்தது.

முதல் பாதி : கொழும்பு அணி 00 – 00 நியூ யங்ஸ்

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே கொழும்பு அணிக்கு சில கோர்னர் கிக் வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் அதன்போது கோல்கள் அடிக்க அவ்வணி தவறியது. போட்டியின் 57ஆவது நிமிடத்தில் சர்வானிற்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அவர் அதனை தலையால் முட்டி கோல் அடிக்க முயன்ற போதும் பந்து கோல் கம்பத்தில் மோதி திரும்பி வந்தது. இரண்டாவது பாதியில் கொழும்பு அணி அதிக ஆதிக்கம் செலுத்தியது. தமக்கு தொடர்ந்து பல கோர்னர் கிக் வாய்ப்புகள் கிடைத்தாலும் அவற்றின்மூலம் பயனடைய அவ்வணி தவறியது.

80ஆவது நிமிடத்தில் நியூ யங்ஸ் அணிக்கு கோர்னர் கிக் வாய்ப்பு கிடைத்த பொழுது அதுவும் தவறவிடப்பட்டது. பின்னரும் நியூ யங்ஸ் அணிக்கு கோல்களைப் பெறுவதற்கான பல வாய்ப்புகள் கிடைத்தன. எனினும், அவ்வணி கோல் அடிக்க தவறியது. 86ஆவது நிமிடத்தில் கொழும்பு அணி தமக்கு கிடைத்த தண்ட உதையையும் சரியாகப் பயன்படுத்தத் தவறியது. 92ஆவது நிமிடத்தில் சர்வானிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த வாய்ப்பும் எதிர் தரப்பினரால் தடுக்கப்பட்டது.

இறுதியில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் அடிக்காத நிலையில் போட்டி 0-0 என்று சமநிலையில் முடிந்தது. போட்டியின் ஆட்ட நாயகனாக நியூ யங்ஸ் அணியின் அஜய் ரிச்சர்ட் தெரிவு செய்யப்பட்டார்.

முழு நேரம்: கொழும்பு அணி 00 – 00 நியூ யங்ஸ்