தேசிய விளையாட்டு விழா மரதனில் சிவராஜன், கிருஷாந்தினி தங்கம் வென்று சாதனை

631
SIivarajan, Welu Krishanthini

46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் முத்துசாமி சிவராஜனும், பெண்கள் பிரிவில் வேலு கிருஷாந்தினியும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இலங்கையின் 46 வருடகால தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டிகள் வரலாற்றில் தமிழர்கள் இருவர் ஒரே தடவையில் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் தடவையாகும்.

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 46 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான சைக்கிளோட்டம், மரதன் ஓட்டம் மற்றும் வேகநடை உள்ளிட்ட மூன்று போட்டிகளும் இன்று முதல் கதிர்காமத்தில் ஆரம்பமாகியது.

>> தேசிய நகர்வல ஓட்டத்தில் மலையக வீரர் சிவராஜனுக்கு வெண்கலப் பதக்கம்

இந்த நிலையில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டி கதிர்காமம் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் இன்று (26) காலை நடைபெற்றது.

42.195 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக நடைபெற்ற இந்தப் போட்டிக்கு நாடளாவிய ரீதியிலிருந்து 72 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர். இதில் ஆண்கள் பிரிவில் 50 பேரும், பெண்கள் பிரிவில் 22 பேரும் பங்குபற்றினர்.

இதன் ஆண்கள் பிரிவில் முதலிடத்தை மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் பெற்றுக்கொண்டார்.

போட்டியை அவர் இரண்டு மணித்தியாலங்கள், 29 நிமிடங்கள், 29 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் மரதன் ஓட்டப் போட்டியில் தமிழ் பேசுகின்ற வீரரொருவர் பெற்றுக்கொண்ட முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்

>> மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் சபான், சபியாவுக்கு வெற்றி

கடந்த வருடம் நுவரெலியாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவுக்கான நகர்வல ஓட்டப் போட்டியில் முதல்தடவையாக வெண்கலப் பதக்கம் வென்ற சிவராஜன், இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

அதன்பிறகு இலங்கை விமானப்படையில் இணைந்துகொண்ட அவர், தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் தொடர்ச்சியாக பங்குபற்றி வெற்றிகளையும் பதிவு செய்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதான முத்துசாமி சிவராஜன், நுவரெலியா மாவட்டம் சாந்திபுர ஒலிபென்ட் தோட்டத்தைச் சேர்ந்தவராவார்.

இதனிடையே, ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த ரி. குணசேகர (2:32:14) வெள்ளிப் பதக்கத்தையும், வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த எஸ். குமார (2:33:45) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதுஇவ்வாறிருக்க, பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடத்தை உடபுசல்லாவையைச் சேர்ந்த வேலு கிருஷாந்தினி பெற்றுக்கொண்டார்

பல முன்னணி வீராங்களைகள் பங்குகொண்ட இப்போட்டியை, இரண்டு மணித்தியாலங்கள் 55 நிமிடங்கள், 30 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை அவர் சுவீகரித்தார்.

இறுதியாக, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவிலும் கிருஷாந்தினி தங்கப் பதக்கம் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

>> தேசிய விளையாட்டு விழா மரதனில் வேலு கிருஷாந்தினிக்கு இரண்டாமிடம்

கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வேலு கிருஷாந்தினி வெற்றி கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மத்திய மாகாணத்தைச் சேர்ந்த எம். ஹேரத் (2:57:15) வெள்ளிப் பதக்கத்தையும், சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த
டி. லியனகே (3:00:19) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேநேரம், குறித்த போட்டியில் பங்குகொண்ட வட மாகாணம், வவுனியாவைச் சேர்ந்த எஸ். ஹேமப்பிரியா (3 மணி. 40:00 செக்.) எட்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<