மெக்ஸ்வெல், கெரியின் இணைப்பாட்டத்தால் ஆஸி. அபார வெற்றி

129
England v Australia - 3rd Royal London Series One Day International
(Photo by Gareth Copley/Getty Images for ECB)

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

மேலும், இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் 2-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

>> அபார வெற்றியினைப் பதிவு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இந்த ஒருநாள் தொடரின் முன்னைய இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி வீதம் பெற்று, தொடர் 1-1 என சமநிலையான நிலையில் மூன்றாவது போட்டி புதன்கிழமை (16) மன்செஸ்டர் நகரில் தொடங்கியது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காகப் பெற்றார். இதன்படி, இங்கிலாந்து அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 302 ஓட்டங்கள் குவித்தது. 

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பாக, ஜொன்னி பெயார்ஸ்டோவ் தன்னுடைய 10ஆவது ஒருநாள் சதத்துடன் 2 சிக்ஸர்கள் மற்றும் 12 பெளண்டரிகள் அடங்கலாக 126 பந்துகளுக்கு 112 ஓட்டங்கள் பெற்றார். இதன்மூலம், அவர் ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் (76) 10 சதம் பெற்ற உலகின் நான்காவது வீரர் என்ன சாதனைக்கு சொந்தக்காரரானார். 

இதேநேரம், அரைச்சதங்களை பூர்த்தி செய்த துடுப்பாட்ட வீரர்களில் சேம் பில்லிங்ஸ் 58 ஓட்டங்களையும், கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி ஓட்டங்கள் எதுவும் பெறாமல் முதல் இரண்டு விக்கெட்டுக்களையும் இழந்தது. எனினும், தமது இன்னிங்ஸ் நிறைவில் 302 ஓட்டங்களை பெற்றது. எனவே, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஓட்டம் எதுவும் பெறாமல் முதல் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து, இன்னிங்ஸ் நிறைவில் 300+ ஓட்டங்களைப் பெற்ற முதல் அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்தது.

>> பாகிஸ்தான் செல்ல விரும்பும் மூன்று நாடுகள்

மறுமுனையில், அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் அடம் ஷம்பா மற்றும் மிச்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக தீர்மானிக்கப்பட்ட 303 ஓட்டங்களை அடைய அவுஸ்திரேலிய அணி தமது பதில் துடுப்பாட்டத்தினை தொடங்கியது.

எனினும், அவுஸ்திரேலிய வெற்றி இலக்கிற்கான தமது பயணத்தில் ஆரம்பத்தில் இருந்து தடுமாற்றம் ஒன்றை காண்பித்தது. அந்தவகையில், தமது முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரினையும் பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 73 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்குச் சென்றது.

எனினும், இத்தருணத்தில் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய கிளேன் மெக்ஸ்வெல் மற்றும் அலெக்ஸ் கெரி ஆகியோர் அவுஸ்திரேலிய அணியின் 6ஆம் விக்கெட்டுக்காக 212 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். இதனால், அவுஸ்திரேலிய அணி போட்டியின் வெற்றி இலக்கினை 49.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களுடன் அடைந்தது.

அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இணைப்பாட்டத்தினை பகிர்ந்த வீரர்களில் கிளேன் மெக்ஸ்வெல் தன்னுடைய இரண்டாவது ஒருநாள் சதத்துடன் 90 பந்துகளுக்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில், தன்னுடைய கன்னி ஒருநாள் சதத்தினைப் பதிவு செய்த, அலெக்ஸ் கெரி 114 பந்துகளுக்கு 106 ஓட்டங்களை எடுத்தார்.

>> Video – கொரோனாவினால் மீண்டும் தள்ளிப் போகும் பங்களாதேஷ் தொடர்? |Sports RoundUp – Epi 132

இந்த இணைப்பாட்டமானது, ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் 6ஆம் விக்கெட்டிற்றாகக் பதியப்பட்ட மூன்றாவது சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், ஜோ ரூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும் அவர்களது பந்துவீச்சு வீணானது.

போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் கிளேன் மெக்ஸ்வெல் தெரிவு செய்யப்பட்டார்.

முன்னர் இடம்பெற்ற T20i தொடரினை 21 என இழந்த அவுஸ்திரேலிய அணி, இப்போட்டியின் வெற்றியுடன் ஒருநாள் தொடரினை கைப்பற்றிய நிலையில்  தமது இங்கிலாந்து சுற்றுப் பயணத்தினை நிறைவு செய்து கொள்கின்றது. 

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 302/7 (50) ஜொன்னி பெயர்ஸ்டோவ் 112, சேம் பில்லிங்ஸ் 57, கிறிஸ் வோக்ஸ் 53, அடம் ஷம்பா 51/3, மிச்செல் ஸ்டார்க் 74/3 

அவுஸ்திரேலியா – 305/7 (49.4) கிளேன் மெக்ஸ்வெல் 108, அலெக்ஸ் கெரி 106, கிறிஸ் வோக்ஸ் 46/2, ஜோ ரூட் 46/2 

முடிவு – அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<