இலங்கை லெஜண்ட்ஸ் வீரர்களுக்கு மத்தியில் ஜொலிக்கும் சமரி அதபத்து!

211
Most T20I Runs for Sri Lanka Cricket

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி மற்றும் இலங்கை வீரர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியமையையும், புதிய மைல்கல்களை எட்டியதையும் பார்த்திருக்கிறோம், பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இலங்கை கிரிக்கெட்டில் மகளிர் கிரிக்கெட்டும் உள்ளடங்கும் போது, எம்முடைய அதிகமானோருக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் பதிவுசெய்யப்படும் சாதனைகளும், மைல்கல்களும் அதிகமாக அறியப்படாத விடயங்களில் ஒன்றாகவே மாறியிருக்கின்றது.

>> தமிழ் யூனியன் கழகத்துக்காக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய டில்ருவன்

அவ்வாறிருக்கும் நிலையில் இலங்கை மகளிர் அணியின் தலைவியும், முன்னணி வீராங்கனையுமான சமரி அதபத்து கடந்த மைல்கல்லானது இலங்கை ஆடவர் அணியின் முன்னணி வீரர்களின் பதிவுகளையும் முந்தியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாக மாறியுள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா போன்ற அணிகள் முன்னணி அணிகளாக தங்களுடைய பெயர்களை நிலைநிறுத்திவரும் நிலையில், இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் அடையாளமாக மாறிவருகின்றவர் சமரி அதபத்து.

அந்தவகையில் இந்திய மகளிர் அணிக்கு எதிராக கடந்த மாத இறுதியில் நடைபெற்ற T20I தொடரின் போது, சமரி அதபத்து T20I போட்டிகளில் 2000ம் ஓட்டங்களை கடந்த முதல் இலங்கை வீராங்கனை என்ற சாதனையை பதிவுசெய்தார். சமரி அதபத்து முதல் மகளிர் வீராங்கனையாக மாத்திரமின்றி, இலங்கை ஆடவர் மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட்டை பொருத்தவரை 2000ம் ஓட்டங்களை முதன் முதலாக கடந்தவர் என்ற சாதனையையும் பதிவுசெய்தார்.

இவ்வாறு இலங்கையின் முன்னணி வீரர்களின் ஓட்டக்குவிப்பை கடந்து சாமரி அதபத்து சாதனையை பதிவுசெய்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக இலங்கை கிரிக்கெட்டை பொருத்தவரை அதிகூடிய ஓட்டங்களை பெற்றுள்ளவர்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சமரி அதபத்து

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களுக்கு மத்தியில், இலங்கை மகளிர் அணியில் அதிகமான கவனத்தை ஈர்த்துள்ள வீராங்கனை சமரி அதபத்து.

இதுவரையில் இலங்கையின் முன்னணி வீரர்கள் கடக்காத மைல்கல்லை மகளிர் கிரிக்கெட்டில் சமரி அதபத்து எட்டியுள்ளார். இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் எந்தவொரு வீரர்களும் T20I கிரிக்கெட்டில் 2000ம் ஓட்டங்களை கடக்காத நிலையில், சமரி அதபத்து இந்த மைல்கல்லை முதல் இலங்கையாராக அடைந்து சாதித்துள்ளார்.

ஆடவர் கிரிக்கெட்டில் திலகரட்ன டில்ஷான் மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் T20I சதங்களை பதிவுசெய்துள்ள நிலையில், சமரி அதபத்து மகளிர் T20I போட்டிகளில் சதம் பெற்ற ஒரே இலங்கை வீராங்கனை என்ற பதிவையும் கொண்டிருக்கிறார்.

சமரி அதபத்து 2009ம் ஆண்டு முதல் இன்றுவரை மகளிர் T20I போட்டிகளில் விளையாடிவரும் நிலையில், 93 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 5 அரைச்சதங்கள் அடங்கலாக 2054 ஓட்டங்களை குவித்துள்ளார்.

திலகரட்ன டில்ஷான்

இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷான் இலங்கை ஆடவர் அணிக்காக அதிகூடிய T20I ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஆரம்ப காலத்தில் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரராக இருந்த திலகரட்ன டில்ஷான், பின்நாளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கப்பட்டார். தன்னுடைய வேகமான ஓட்டக்குவிப்பின் மூலம் தொடர்ந்தும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர், இலங்கை அணியின் மறக்கமுடியாத ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகவும் மாறியிருக்கிறார்.

இவர் 2006ம் ஆண்டு தொடக்கம் 2016ம் ஆண்டுவரை 80 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 79 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 13 அரைச்சதங்களின் உதவியுடன் 1889 ஓட்டங்களை குவித்துள்ளார்.

குசல் பெரேரா

சர்வதேச கிரிக்கெட்டில் சனத் ஜயசூரியவின் துடுப்பாட்ட பாணியில் ஓட்டங்களை குவித்து அதிகமான கவனத்தை ஈர்த்தவர் குசல் ஜனித் பெரேரா.

தற்போதுவரை அடுத்து வரும் T20I உலகக்கிண்ணத்துக்கான அணியில் இடம்பெறக்கூடிய வீரராக பார்க்கப்படும் இவர், உபாதை காரணமாக கடந்த சில மாதங்களாக போட்டிகளில் விளையாடவில்லை.

குசல் பெரேரா 2013ம் ஆண்டு முதல் T20I போட்டிகளில் விளையாடி வருவதுடன், 59 இன்னிங்ஸ்களில் 12 அரைச்சதங்கள் அடங்கலாக 1539 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார். எனவே, ஆடவர் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிகூடிய T20I ஓட்டங்களை பெற்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டிருக்கிறார்.

மஹேல ஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன T20I போட்டிகளில் இலங்கை அணிக்காக மூன்றாவது  அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரராவார்.

மஹேல ஜயவர்தன இலங்கை அணியின் மத்தியவரிசை வீரராக மாத்திரமின்றி, ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் செயற்பட்டுள்ளார். இவர் 55 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி ஒரு சதம் மற்றும் 9 அரைச்சதங்கள் அடங்கலாக 1493 ஓட்டங்களை குவித்துள்ளார்.

குறிப்பாக இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியை பொருத்தவரை திலகரட்ன டில்ஷான் மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் மாத்திரமே T20I போட்டியில் சதங்களை பெற்றுள்ளனர். இவர்களை தவிர்த்து இன்றுவரையும் ஏனைய எந்தவொரு வீரரும் T20I போட்டிகளில் சதங்களை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குமார் சங்கக்கார

குமார் சங்கக்கார இலங்கை கிரிக்கெட்டில் மறக்கமுடியாத துடுப்பாட்ட வீரர் மற்றும் முன்னாள் தலைவர். சர்வதேச கிரிக்கெட்டில் இவருடைய துடுப்பாட்ட பாணி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த துடுப்பாட்ட பாணியாகும்.

ஆரம்பத்தில் ஓட்டங்களை வேகமாக குவிக்கத்தடுமாறியவராக இருந்தாலும், T20I கிரிக்கெட்டின் அறிமுகத்தின் பின்னர் தன்னுடய துடுப்பாட்ட பாணியுடன் வேகமாக ஓட்டங்களை குவிக்க தொடங்கியிருந்தார்.

இவர் மொத்தமாக 53 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 8 அரைச்சதங்கள் அடங்கலாக 1382 ஓட்டங்களை பெற்றுள்ளார். குமார் சங்கக்கார 2006ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டுவரை T20I போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குமார் சங்கக்காரவுக்கு அடுத்தப்படியாக அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், திசர பெரேரா மற்றும் தற்போதைய அணித்தலைவர் தசுன் ஷானக ஆகியோர் ஆடவர் அணிக்காக T20I போட்டிகளில் 1000ம் ஓட்டங்களை கடந்துள்ளதுடன், இலங்கை மகளிர் அணியை பொருத்தவரை ஓய்வுபெற்ற வீராங்கனை சசிகலா ஸ்ரீவர்தன 1000 ஓட்டங்களை கடந்துள்ளார்.

T20I கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் தமிம் இக்பால்

இதேவேளை இவ்வாறான முன்னணி வீரர்கள் வரிசையில் பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மெண்டிஸ் போன்றவர்கள் 1000 ஓட்டங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்வரும் காலங்களில் இந்த ஓட்ட சாதனைகளில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் 2000ம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ள சமரி அதபத்து மேலும் பல சாதனைகளை குவிக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களை எமது இணையத்தளம் சார்பாக கூறிக்கொள்கின்றோம்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<