”த ஹன்ரட்” கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் விலைபோகாத மாலிங்க, கெயில்

58
BCB

இங்கிலாந்து கிரிக்கெட் சபை நடாத்தவுள்ள அணிக்கு 100 பந்துகள் கொண்ட ”த ஹன்ரட்” கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம், நேற்று (20) நிறைவுக்கு வந்திருந்தது. 

இந்த வீரர்கள் ஏலத்தில் லசித் மாலிங்க உட்பட இலங்கையை சேர்ந்த 24 கிரிக்கெட் வீரர்கள் பங்கெடுத்த நிலையில், இலங்கையை சேர்ந்த ஒரு வீரர் கூட தொடரில் பங்கெடுக்கும் எட்டு அணிகளினாலும் கொள்வனவு செய்யப்படவில்லை. 

த ஹன்ரட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் 24 இலங்கை வீரர்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் சபை, அணிக்கு 100 பந்துகள் கொண்ட….LASITH MALINGA

வீரர்கள் ஏலத்தில் முதலாவது கொள்வனவு செய்யப்பட்ட முதல் வீரராக ஆப்கானிஸ்தான் சுழல் நட்சத்திரமான ரஷீத் கான் அமைந்திருந்தார். T20 சர்வதேச போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ரஷீத் கானினை 125,000 யூரோக்களுக்கு (இலங்கை நாணயப்படி 2.5 கோடி ரூபா) நொட்டிங்கம் பிராந்தியத்தை சேர்ந்த  ட்ரென்ட்ஸ் ரொக்கட்ஸ் அணி கொள்வனவு செய்திருந்தது.

அதேநேரம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிச்செல் ஸ்டார்க் ஆகியோர் கார்டிப் பிராந்தியத்தை சேர்ந்த வேல்ஸ் பையர் அணிக்காக வாங்கப்பட்டிருந்தனர். இதேவேளை, அவுஸ்திரேலியாவின் மற்றுமொரு அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் சௌத்தம்ப்டன் பிராந்தியத்தை சேர்ந்த சௌத்தர்ன் பிரேவ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தார். 

சௌத்தர்ன் பிரேவ் அணி மேற்கிந்திய தீவுகளின் அதிரடி சகலதுறை வீரர்களில் ஒருவரான அன்ட்ரூ ரசலினையும் டேவிட் வோர்னருடன் சேர்த்து கொள்வனவு செய்திருந்தது. ரசல் அவரது அடிப்படை விலையான 125,000 யூரோக்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தார்.

ஆஸி. வீரர்களான ஆரோன் பின்ச், கிளென் மெக்ஸ்வெல் மற்றும் டார்சி சோர்ட் ஆகியோரை நொத்தர்ன் சுபர் சார்ஜர்ஸ், லண்டன் ஸ்பிரிட் மற்றும் ட்ரென்ட் ரொக்கட்ஸ் ஆகிய அணிகள் முறையே அவர்களது அடிப்படை விலைக்கு (125,000 யூரோக்கள்) கொள்வனவு செய்திருக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் 18 வயது நிரம்பிய மற்றுமொரு சுழல் நட்சத்திரமான முஜிபுர் ரஹ்மான் நொத்தர்ன் சுபர் சார்ஜர்ஸ் அணிக்காக ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட, மொஹமட் நபி லண்டன் ஸ்பிரிட் அணிக்காக வாங்கப்பட்டிருந்தார்.

நேபாள் சுழல் வீரரான சந்தீப் லமிச்சானே மற்றும் சுனீல் நரேன் ஆகியோர் ஓவல் இன்விசிப்பல் அணி கொள்வனவு செய்திருந்தது. இவர்கள் தவிர பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் ஆமீர் லண்டன் ஸ்பிரிட் அணிக்காக வாங்கப்பட, நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் பர்மிங்கம் பீனிக்ஸ் அணியினால் வாங்கப்பட்டிருந்தார். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களில் லியம் லிவிங்ஸ்டோன் பர்மிங்கம் பீனிக்ஸ் தரப்பினால் வீரர்கள் ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில், அலெக்ஸ் ஹேல்ஸ் ட்ரென்ட் ரொக்கட்ஸ் அணியினால் வாங்கப்பட்டிருந்தார். 

அதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயில், பாபர் அசாம், தென்னாபிரிக்க வேகப்புயல் ககிஸோ றபாடா ஆகியோர் எந்த அணிகளினாலும் த ஹன்ரட் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தில் கொள்வனவு செய்யப்படவில்லை.

த ஹன்ரட் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தில் மொத்தமாக 96 கிரிக்கெட் வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில், 474 வீரர்கள் விலைபோகாது விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. த ஹன்ரட் கிரிக்கெட் தொடர், அடுத்த ஆண்டின் (2020) கோடை காலத்தில் இங்கிலாந்தின் பல்வேறு மைதானங்களில் இடம்பெறவுள்ளது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க