ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்துக்காக நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான குழு நிலைப் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டது.

இன்றைய தினம் குழு A இல் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான குழு நிலைப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

ஜோ ரூட்டின் அபார துடுப்பாட்டத்தினால் பங்களாதேஷை வீழ்த்திய இங்கிலாந்து

அதற்கமைய துடுப்பாடக் களமிறங்கிய மார்டின் கப்டில் மற்றும் லூக் ரோஞ்சி ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 40 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்ட அதேவேளை சிறந்த ஆரம்பத்தை நியூசிலாந்து அணிக்கு பெற்றுக்கொடுத்தனர். அதிரடியாக துடுப்பாடிய மார்டின் கப்டில் 22 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 26 ஓட்டங்களை பதிவு செய்திருந்த வேளை ஜோஷ் ஹேசல்வூட்டின் பந்து வீச்சில் கிளென் மெக்ஸ்வெல்லிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் கேன் வில்லியம்சன், லூக் ரோஞ்சியோடு இணைந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். எனினும் மழை காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட 50 ஓவர்கள் கொண்ட போட்டி 46 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

தொடர்ந்தும் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இவ்விருவரும்,  இரண்டாவது விக்கெட்டுக்காக 77 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட நிலையில்  லூக் ரோஞ்சி 43 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 65 ஓட்டங்களுடன் ஜோன் ஹெஸ்டிங்ஸ்க்சின் பந்து வீச்சில் கிளென் மெக்ஸ்வெல்லிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பாக துடுப்பாடிய அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 97 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 100 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

[rev_slider ct17-dsccricket]
.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பியதால் நியூசிலாந்து அணி, 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 291 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அதேநேரம் அவுஸ்திரேலிய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஜோஷ் ஹேசல்வூட் 52 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், ஜோன் ஹேஸ்டிங்ஸ் 69 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மீண்டும் போட்டியில் மழை குறுக்கிட்டதால் குறித்த போட்டி 33 ஓவர்களாக குறைக்கப்பட்டு வெற்றி இலக்காக 235 ஓட்டங்கள் அவுஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதனையடுத்து துடுப்பாடக் களமிறங்கிய அவுஸ்திரலிய அணி ஆரம்பம் முதலே சற்று தடுமாறத்தொடங்கியது. அவ்வணி 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் கனத்த மழை காரணமாக போட்டி மறுபடியும் நிறுத்தப்பட்டது. சீரற்ற காலநிலை தொடர்ந்து காணப்பட்டதால் போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

இலங்கை அணி பங்குகொள்ளும் சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான முதலாவது குழு நிலைப் போட்டி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதல்தர தென்னாபிரிக்காவுக்கு முட்டுக்கட்டையாக இருக்குமா இலங்கை?

போட்டியின் சுருக்கம்

நியூசிலாந்து – 291 (45) – கேன் வில்லியம்சன் 100, லூக் ரோஞ்சி 65, ரோஸ் டெய்லர் 46, மார்டின் கப்டில் 26, ஜோஷ் ஹேசல்வூட் 52/6, ஜோன் ஹேஸ்டிங்ஸ் 69/2, பெட் கம்மின்ஸ் 67/1

அவுஸ்திரேலியா – இலக்கு 235 (33 ஓவர்கள்) – 53/3 (9) டேவிட் வோர்னர் 18, மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 18, அடம் மில்னே 9/2, ட்ரென்ட் போல்ட் 28/1

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.