IPL தொடருக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆஸி. வீரர்கள்

Indian Premier League 2021

127
IPLT20.COM

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கின் மிகுதிப்போட்டிகளில், அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான வீரர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL தொடர் எதிர்வரும் செப்டம்பர் 18ம் திகதி முதல் ஒக்டோபர் 15ம் திகதிகளுக்குள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் நிறைவடைந்த சில நாட்களில் ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

UAE மற்றும் ஓமானுக்கு மாற்றப்பட்ட ICC T20I உலகக் கிண்ணம்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பெட் கம்மின்ஸ், தேசிய அணிக்கான போட்டிகளிலிருந்து சற்று விடுமுறை பெற்றுள்ளார். எனவே, இவர் IPL தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர்களில் இருந்தும் சில வீரர்கள் வெளியேறியுள்ளனர்.

குறிப்பாக 20 வீரர்கள் அளவில் மேற்கிந்திய தீவுகள் தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டிருந்த போதும், அதிகமான வீரர்கள் மாற்று வீரர்காளகவே இணைக்கப்பட்டனர். இதில், கிளேன் மெக்ஸ்வேல், ஜெய் ரிச்சட்சன், கேன் ரிச்சட்சன், மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் டேனியல் சேம்ஸ் ஆகியோர் விலகியிருந்தனர். இந்தநிலையில், இவர்களும் IPL தொடரில் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில், அவுஸ்திரேலிய அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணிகளுக்கான தலைவர் ஆரோன் பின்ச், அணி வீரர்கள் தேசிய அணியின் போட்டிகளை கவனத்தில் கொள்ளாமல், IPL தொடரில் விளையாட எதிர்பார்ப்பதை விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருந்தார்.

எனினும், உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளதால், அதற்கு முதலில் நடைபெறவுள்ள IPL தொடரில் விளையாடுவது அவுஸ்திரேலிய வீரர்களுக்கு மேலும் பலனை தரும் என்ற எண்ணம் தற்போது உருவாகியுள்ளது.

அத்துடன், இந்திய கிரிக்கெட் சபையானது, வெளிநாட்டு வீரர்களை அழைத்துவரும் செயற்பாட்டில் கடுமையாக உழைத்து வருகின்றது. அதற்காக அணிகளிடம் தொடர்ந்தும் கலந்துரையாடி வரும் இந்திய கிரிக்கெட் சபை, வெளிநாட்டு வீரர்களின் வருகையை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களை அழைத்து வருவது தொடர்பிலும், இந்திய கிரிக்கெட் சபை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபைகளிடம் கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…