T20I உலகக் கிண்ணத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் – சமரி நம்பிக்கை

145

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ஆறாவது மகளிர் T20I உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள சாமரி அத்தபத்து தலைமையிலான 15 பேர்கொண்ட இலங்கை மகளிர் அணி, இன்றைய தினம் (31) நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் நவம்பர் மாதம் 9ம் திகதி முதல் 24ம் திகதிவரை நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரின் A குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, முதலில் அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளது.

T20 உலக சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

எதிர்வரும் நவம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ள மகளிர்..

பின்னர், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகும் மகளிர் T20I உலகக் கிண்ணத்தில், இலங்கை அணி 11ம் திகதி தங்களுடைய முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

அதனைத் தொடர்ந்து, தங்களது குழுவில் இடம்பெற்றுள்ள தென்னாபிரிக்க அணியை 13ம் திகதி எதிர்கொள்ளும் இலங்கை அணி, 15ம் திகதி பங்களாதேஷ் அணியையும், 17ம் திகதி போட்டியை நடாத்தும் மேற்கிந்திய தீவுகள் அணியையும் எதிர்கொள்ளவுள்ளது.  

தொடரின் அரையிறுதிப் போட்டிகள் 22ம் திகதி (இலங்கை 23ம் திகதி) நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி 24ம் திகதி (இலங்கை 25ம் திகதி) நடைபெறவுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற T20I உலகக் கிண்ணத் தொடரில், இலங்கை மகளிர் அணி நான்கு போட்டிகளில் விளையாடி தென்னாபிரிக்கா, அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. எனினும், அரையிறுதிக்கான வாய்ப்பை இலங்கை மகளிர் அணி தவறவிட்டிருந்தது.

இந்த நிலையில் இம்முறை தொடரில் முதல் போட்டியிலிருந்து ஒவ்வொரு போட்டியாக வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதே தங்களுடைய நிலைப்பாடாக இருப்பதாக அணித் தலைவி சமரி அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளை நோக்கி பயணிப்பதற்கு முன்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“T20I உலகக் கிண்ணம் என்பது மிகப்பெரிய தொடராகும். அணி வீராங்கனைகள் அதற்காக தங்களை முழுமையாக தயார்படுத்திக் கொண்டுள்ளனர். நாம் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிபெற வேண்டும். அதன்மூலம் அடுத்தப் போட்டிகளை எதிர்கொள்வதற்கான உத்வேகம் அணிக்கு கிடைக்கும்.

புதிய பயிற்றுவிப்பாளராக ஹர்ச டி சில்வா வருகைதந்த பின்னர் அணியில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறன. உலகக் கிண்ண போட்டிகளுக்காக அதிக பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். அனைத்து போட்டிகளையும் வெல்வதற்கான திறமை அணியிடம் இருக்கிறது. எனினும், T20I போட்டிகளை பொருத்தவரை அன்றைய தினம் முழுத் திறமையை வெளிப்படுத்தும் அணியே வெற்றிபெற முடியும். இதனை நம்பிக்கையைாக கொண்டு நாம் விளையாடவுள்ளோம்.

தரப்படுத்தல் என்பது இலக்கங்கள் மட்டுமே. நாம் தரவரிசையில் பின்னடைவில் இருந்தாலும், எம்மால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதுஎன்றார்.

T20I தரவரிசையில் பாபர் அசாமுக்கு முதலிடம்; திசர முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) நேற்று (29) வெளியிட்டுள்ள சர்வதேச T20..

இதேவேளை அணி வீராங்கனைகள் மற்றும் உலகக் கிண்ண T20Iக்கான  தயார்படுத்தல் தொடர்பில் பயிற்றுவிப்பாளர் ஹர்ச டி சில்வா குறிப்பிடுகையில்,

உலகக் கிண்ண T20I தொடரில் விளையாடும் 10 அணிகளும் மிகச்சிறந்த அணிகள். நாம் அதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். நடந்து முடிந்த ஆசியக் கிண்ணத் தொடரில் சம்பியனாகிய பங்களாதேஷ் அணி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியிருந்தது. குறித்த தொடரில் எமது அணி மாத்திரமே பங்களாதேஷ் அணியை தோல்வியடையச் செய்திருந்தது. அதனால் எமது அணியில் திறமைகள் இருப்பதை மறுக்க முடியாது.

நான் பயிற்றுவிப்பாளராக வந்த பின்னர், வீராங்கனைகளின் நம்பிக்கை மட்டத்தை உயர்த்துவதற்கான செயற்பாட்டில் கவனம் செலுத்தினேன். அதுமாத்திரமின்றி காணொளி ஆராய்வுகளை மேற்கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டோம். அதேவேளை, ஏனைய நாடுகளில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் உள்ளதால், எமது இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களை வரவழைத்து துடுப்பாட்ட பயிற்சிகளில் ஈடுபட்டோம்.

>> பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்

அணி கட்டமைப்பை பொருத்தவரை வேகப்பந்து வீச்சாளர்கள் 4 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் சகலதுறை வீராங்கனைகள். சுழற்பந்து வீச்சாளர்கள் 5 பேர் உள்ளனர். அத்துடன் சமரி அத்தப்பத்து, சஷிகலா சிறிவர்தன மற்றும் ஓசதி ஆகியோர் துடுப்பெடுத்தாடக் கூடியவர்கள். இவர்களால் சுழற்பந்து வீசவும் முடியும். அதேநேரம் இரண்டு விக்கெட் காப்பாளர்களை இணைத்துள்ளோம்.

இவ்வாறு தற்போது உலகக் கிண்ணத்துக்கு செல்லும் அணியை பலம் நிறைந்த அணியாக உருவாக்கியுள்ளோம். T20I போட்டிகளை பொருத்தவரை அன்றைய தினம் எந்த அணி சிறப்பாக விளையாடுகின்றதோ? அந்த அணி வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே, எமது அணியால் இம்முறை தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதுஎன்றார்.

உலகக் கிண்ண T20 போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை மகளிர் அணியின் 15 பேர்கொண்ட குழாம் இன்று (31) இரவு நாட்டிலிருந்து புறப்பட்டு, மேற்கிந்திய தீவுகள் நோக்கிச் செல்கிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<