பாக். வீரர்களுக்கு பிரியாணி, பர்கர் சாப்பிடத் தடை

96
©PCB Twitter

உள்நாட்டு தொடரில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்கள் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவு வகைகள் தவிர்க்க வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் தலைவர் மிஸ்பா உல் ஹக் அண்மையில் நியமிக்கப்பட்டார். அத்துடன், தேர்வுக் குழுவின் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார்

இந்த நிலையில், தனது முதல் பணியாக வீரர்களின் உடற்தகுதியில் கவனம் செலுத்தியுள்ள அவர், தேசிய அணி மற்றும் உள்ளூர் மட்டப் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களுக்கு ஒருசில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

இதன் முதல் படியாக அந்நாட்டு வீரர்கள் பிரியாணி, எண்ணெய்யில் பொறித்த உணவுகள், பீட்சா, இனிப்பு வகைகள் மற்றும் அதிக கொழுப்புள்ள மாமிசம் உள்ளிட்ட உணவுகள் எடுப்பதற்கு தடை விதித்துள்ளார்.  

அண்மையில் நிறைவுக்குவந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின்போது பாகிஸ்தான் வீரர்களின் உடற்தகுதியில் பல சர்ச்சைகள் எழுந்தன. இந்தத் தொடரில் பாகிஸ்தான் வீரர்களின் செயல்பாடுகள் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.  

போட்டிக்கு முதல்நாள், வீரர்கள் அனைவரும் ஹோட்டலில் இருந்து வெளியில் சென்றதாகவும், இரவெல்லாம் உறங்காமல் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.  

பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயவுள்ள ஐ.சி.சி

பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடையில் இந்த மாத …….

இதில், பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் கொட்டாவி விட்டுக்கொண்டு நிற்கும் புகைப்படம் வைரலானது. இது வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல, களத்தடுப்பிலும் அந்த வீரர்கள் மோசமாக செயற்பட்டிருந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி வெறும் கையோடு நாடு திரும்பியது.   

இதுஇவ்வாறிருக்க, உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் முக்கிய சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. பாகிஸ்தான் பயிற்சியாளராக முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் பந்துவீச்சு பயிற்சியாளராக வக்கார் யூனிஸ் மீண்டும் நியமிக்கப்பட்டார்.  

இந்த நிலையில், இலங்கையுடனான சுற்றுப்பயணத்துக்கு முன் ஆயத்தமாக பாகிஸ்தான் வீரர்களுக்கான விசேட பயிற்சி முகாமும், பயிற்சிப் போட்டிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன

இதில் பயிற்சியாளராக மிஸ்பா எடுத்துள்ள அதிரடி முடிவு தற்போது பேசும் பொருளாகியிருக்கிறது. வீரர்களின் உடல்தகுதியை முதல் பிரச்சினையாகக் கையில் எடுத்துள்ள மிஸ்பா, தேசிய அணி வீரர்களுக்கும் உள்ளூர் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கும் அதிரடியான உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.   

இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் உத்தேச குழாம் அறிவிப்பு

இம்மாத இறுதியில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் …

அதன்படி, பயிற்சி முகாம்களில் பங்குகொள்ளும் வீரர்கள் பிரியாணி, எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகள், இனிப்புகள் உள்ளிட்டவற்றை உண்ணக் கூடாது என்றும், அதேநேரம் பார்பிகியூ உணவு வகைகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளைத் தவிர்க்கவே இந்த உத்தரவு எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.  

மேலும், வீரர்களது உணவுமுறையை ஒழுங்குப்படுத்த குறிப்புப் புத்தகம் ஒன்று பராமரிக்கப்பட உள்ளது. அதனை கடைப்பிடிக்காதவர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என மிஸ்பா எச்சரிக்கை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதுகுறித்து பாகிஸ்தானின் முன்னணி பத்திரிகையாளர்களில் ஒருவரான சஜ் சாதிக் தனது டுவிட்டரில் கூறுகையில், “மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக வந்தபின் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   

குறிப்பாக, வீரர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தேசிய அணிக்கு மட்டுமல்லாமல், உள்ளூர் போட்டிகளிலும் நடைமுறைப்படுத்துப்பட்டுள்ளது. வீரர்களுக்கு பிரியாணி, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள், அதிக கொழுப்பு கொண்ட இறைச்சி போன்றவை வீரர்கள் சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது என அந்தப் பதிவில் தெரிவித்தார். 

இதேவேளை, மிஸ்பா உல் ஹக்கின் பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகளைக் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் டி-20 போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<