கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் வெளியாகின ; 2வது T20I இன்று!

India tour of Sri Lanka 2021

534
Krunal Pandya
 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் சகலதுறை வீரர் குர்னால் பாண்டியாவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, நேற்று நடைபெறவிருந்த இரண்டாவது T20I போட்டி இன்றைய தினத்துக்கு (28) ஒத்திவைக்கப்பட்டது.

>> குர்னாலுக்கு கொவிட்-19; 2வது T20I போட்டி ஒத்திவைப்பு

எனினும், குர்னால் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்புடைய 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், குழாத்தின் அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில் எந்தவொரு வீரருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 வீரர்கள் இன்றைய போட்டியில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள குர்னால் பாண்டியா, கல்கிஸை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு இடமாற்றப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் கட்டாயம் இருக்கவேண்டிய நிலையில், எதிர்வரும் 30ம் திகதி இவர் இந்திய அணி வீரர்களுடன் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு இவருக்கு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குர்னால் பாண்டியாவுக்கு எற்பட்டுள்ள கொவிட்-19 தொற்றானது, அறிகுறிகளை கொண்ட கொவிட்-19 தொற்று எனவும், அவரின் தொண்டை பகுதியில் வலி ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், 2வது T20I போட்டியானது, இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளைய தினம் (28) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<