இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் மிக்கி ஆர்தர்

Sri Lanka Cricket

525

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தரின், பயிற்றுவிப்பு காலம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருடன் நிறைவுக்கு வரவுள்ளது.

குறித்த விடயத்தினை மிக்கி ஆர்தர் தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டதுடன், தனது இரண்டு வருடகால பயிற்றுவிப்புக்கு உதவிசெய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

>>கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் உரிமையாளர்களாக Softlogic ஹோல்டிங்ஸ்

இதுதொடர்பில் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்து பதிவிட்டிருந்த மிக்கி ஆர்தர், மேற்கிந்திய தீவுகள் தொடருடன் இலங்கை அணியுடனான பயணம் முடிவடைவது கவலையளிக்கிறது. இந்த மிகச்சிறந்த நாட்டில் பயிற்சியளித்த ஒவ்வொரு நிமிடத்தையும் விரும்புகிறேன்.

வீரர்கள் மற்றும் மக்களுக்கு எனது மிகப்பெரிய நன்றிகள். நான் வருகைத்தந்த ஆரம்பத்தைவிட, இப்போது இலங்கை கிரிக்கெட் சிறந்த இடத்தில் இருக்கின்றது என்பதை அறிகிறேன்என பதிவிட்டுள்ளார்.

மிக்கி ஆர்தரின் 16 வருட பயிற்றுவிப்பு காலத்தில், நான்காவது தடவையாக இலங்கைக்கு பயிற்சியளித்திருந்தார். தொழில்முறை கிரிக்கெட் வீரராக செயற்பட்டதையும் விட, பயிற்றுவிப்பாளராக அதிக காலத்தை செலவிட்டுள்ளார். இவர், இதற்கு முன்னர் தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார்.

மிக்கி ஆர்தர் கடந்த 2019ம் ஆண்டு இரண்டு வருட ஒப்பந்தத்தில் இலங்கை அணியுடன் இணைந்தார். குறித்த காலப்பகுதியிலிருந்து அனுபவமற்ற புதிய வீரர்களுடன் இவரது காலம் அனைத்துவகை போட்டிகளிலும் கடினமான ஒன்றாக அமைந்திருந்தது.  ஒட்டுமொத்தமாக 25 T20I போட்டிகளில் 8 வெற்றிகள், 18 ஒருநாள் போட்டிகளில் 7 வெற்றிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மாத்திரமே பெற்றிருக்கிறது. இதில், பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக வெற்றிபெற்றுள்ளதுடன், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது.

குறிப்பாக மிக்கி ஆர்தரின் பயிற்றுவிப்பு காலமான 2020 மற்றும் 2021ம் ஆண்டுகள் கொவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இளம் வீரர்களுடன் அடுத்தக்கட்ட பணிகளை தொடர்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நடைபெற்றுமுடிந்த T20 உலகக்கிண்ணத்தில், முதல் சுற்றில் விளையாடவேண்டிய நிலையில் களமிறங்கிய இலங்கை அணி, அரையிறுதிக்காக போட்டியிட்டதுடன், 8 போட்டிகளில் 5 வெற்றிகளையும் பெற்று, சிறந்த முறையில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியிருந்தது.

மிக்கி ஆர்தரின் இறுதி தொடரான மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், குறித்த தொடரின் இரண்டு போட்டிகளும்  காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<