பயிற்சிப் போட்டியில் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய திமுத், ஷானக

Sri Lanka tour of West Indies 2021

982
SLC

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான தயார்படுத்தல் T20 போட்டி, இன்றைய தினம் (20) எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றதுடன், இந்தப்போட்டியில் திமுத் கருணாரத்ன, தசுன் ஷானக, தினேஷ் சந்திமால் மற்றும் துஸ்மந்த சமீர ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

போட்டியில் இலங்கை T20I அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட தசுன் ஷானக பதினொருவர் அணி மற்றும் திமுத் கருணாரத்ன பதினொருவர் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய தசுன் ஷானக பதினொருவர் அணி 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு, 194 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை T20 அணியின் புதிய தலைவராக தசுன் ஷானக!

அணித்தலைவர் தசுன் ஷானக அபாரமாக ஆடி, நான்கு சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவருக்கு அடுத்தப்படியாக ஒருநாள் பயிற்சிப்போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களை விளாசினார். இவர்களுக்கு உதவியாக, பெதும் நிசங்க 27 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களை பெற்றக்கொடுத்தார்.

திமுத் கருணாரத்ன பதினொருவர் அணிசார்பாக லஹிரு குமார 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், லக்ஷான் சந்தகன் மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய திமுத் கருணாரத்ன பதினொருவர் அணிசார்பாக அணித்தலைவர் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்திருந்தார். திமுத் கருணாரத்ன தான் எதிர்கொண்ட 29வது பந்தில் அரைச்சதம் கடந்ததுடன், 53 பந்துகளை எதிர்கொண்டு 89 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். இவர், துஸ்மந்த சமீரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார்.

திமுத் கருணாரத்னவின் ஆட்டமிழப்பை தொடர்ந்து, அஷேன் பண்டார 31 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெறத்தவறினர். இதன்காரணமாக திமுத் கருணாரத்ன பதினொருவர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அதன்படி, 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தசுன் ஷானக பதினொருவர் அணி வெற்றியை தக்கவைத்துக்கொண்டது.

இலங்கை அணியானது, மேற்கிந்திய தீவுகள் தொடருக்காக எதிர்வரும் 23ம் திகதி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி சுருக்கம்

தசுன் ஷானக XI 194/4 (20) – (தசுன் ஷானக 62*, தினேஷ் சந்திமல் 55, பெதும் நிசங்க 41, தனுஷ்க குணதிலக்க 14, கமிந்து மெண்டிஸ் 13, லஹிரு குமார 35/2, லக்ஷான் சந்தகன் 24/1, விஸ்வ பெர்னாண்டோ 32/1

திமுத் கருணாரத்ன XI 175/8 (20) திமுத் கருணாரத்ன 89, அஷேன் பண்டார 41, ஓசத பெர்னாண்டோ 10, திசர பெரேரா 14, துஸ்மந்த சமீர 23/4, நுவான் பிரதீப் 19/2, வணிந்து ஹசரங்க 39/1

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<