புனித பேதுரு கல்லூரியினை வீழ்த்திய சென்.ஜோன்ஸ் கல்லூரி

268

19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன் – II பாடசாலை அணிகள் இடையே ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (14) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி, நீர்கொழும்பு புனித பேதுரு கல்லூரி அணியினை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>>கொக்குவில் இந்துக் கல்லூரியை வீழ்த்திய ஸ்கந்தவரோதய கல்லூரி

சென். ஜோன்ஸ் கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, புனித பேதுரு கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித பேதுரு கல்லூரி அணி வீரர்கள், 35.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தனர்.

புனித பேதுரு கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் எரன்ஜன அலோக்க 49 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறினார்.

மறுமுனையில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் அன்டொன் அபிஷேக் மற்றும் கிருபானந்தன் கஜகர்ணன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருக்க, ஜெயச்சந்திரன் அஷ்னாத் மற்றும் யோகதாஸ் விதுஷன் ஆகியோர் 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 158 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி போட்டியின் வெற்றி இலக்கினை 32.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களுடன் அடைந்தது.

>>மீண்டும் பந்துவீச்சில் பிரகாசித்த தீசன் விதுசன்!

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியினை உறுதி செய்த சச்சின் அண்டர்சன் 64 ஓட்டங்களை எடுத்திருக்க, நேசகுமார் ஏபன்சர் 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி, நீர்கொழும்பு – 157 (35.1) எரஞ்சன அலோக்க 49, தினேத் தத்சார 36, கிருபானந்தன் கஜகர்ணன் 3/21, ஜெயச்சந்திரன் அஸ்னாத் 2/39, யோகதாஸ் விதுஷன் 2/40

சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் – 158/2 (32.4) அண்டர்சன் சச்சின் 64, நேசக்குமார் எபன்சர் 39

முடிவு – சென். ஜோன்ஸ் கல்லூரி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<