இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் மொஹமட் சிராஸ்

Sri Lanka tour of Bangladesh 2022

3753

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்காக 23 வீரர்கள் அடங்கிய உத்தேச இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னே மற்றும் இளம் வீரர் சரித் அசலங்க ஆகியோர் பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான உத்தேச அணியில் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி 304 ஓட்டங்ளைக் குவித்து மீண்டும் போர்முக்கு திரும்பிய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் ரொஷேன் சில்வா மீண்டும் தேர்வாளர்களின் கவனத்தைப் பெற்று இலங்கை டெஸ்ட் குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

அதேபோல, இறுதியாக நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் இடம்பெறாத ஓஷத பெர்னாண்டோவும் மீண்டும் பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான உத்தேச குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார். அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை அவர் தட்டிச்சென்றார்.

கண்டி அணிக்காக 3ஆம் இலக்க வீரராகக் களமிறங்கிய ஓஷத பெர்னாண்டோ, ஆறு போட்டிகளில் 721 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 4 சதங்களும், 3 அரைச்சதங்களும் அடங்கும்.

மேலும், அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் கொழும்பு அணிக்காக விளையாடிய 22 வயதான சகலதுறை வீரர் லக்ஷித மனசிங்க முதன் முறையாக இலங்கை டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர், கொழும்பு அணிக்காக நான்கு போட்டிகளில் 26.40 என்ற சராசரியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், துடுப்பாட்டத்தில் அரைச்சதம் ஒன்றையும் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே, கொழும்பு அணிக்காக 4 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளர் கசுன் ராஜிதவும் மீண்டும் டெஸ்ட் உத்தேச குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

இதேவேளை, 27 வயதான வலதுகை மித வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் சிராஸ் மீண்டும் இலங்கை டெஸ்ட் குழாத்தில் இடம்பிடித்துள்ளார். அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் காலி அணிக்காக ஒரேயொரு போட்டியில் சிராஸ் விளையாடியிருந்தார். யாழ்ப்பாண அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கிய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனிடையே, கோல்ட்ஸ் கழகத்துக்காக விளையாடி வருகின்ற அவர், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற வளர்ந்துவரும் கழக அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் களமிறங்கியதுடன், ஏசிஇ கேபிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

எனவே, தொடர்ச்சியாக உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் விளையாடி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மொஹமட் சிராஸுக்கு பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான உத்தேச குழாத்தில் வாய்ப்பு வழங்க தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஐசிசி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஓர் அங்கமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி மே 8ஆம் திகதி பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளது.

பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான இலங்கை உத்தேச குழாம்:

திமுத் கருணாரத்ன (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, ஓஷத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, ரொஷேன் சில்வா, கமில் மிஷார, ரமேஷ் மெண்டிஸ், சாமிக கருணாரத்ன, கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, ஷிரான் பெர்னாண்டோ, மொஹமட் சிராஸ், பிரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய, ஜெப்ரி வெண்டர்சே, லக்ஷித மனசிங்க, சுமிந்த லக்ஷான்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<