வர்த்தக ஒரு நாள் தொடரின் அரையிறுதியில் மாஸ் சிலுவேட்டா, கொமர்ஷல் கிரடிட் அணிகள்

167

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்று வரும் பிரிவு A அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இன்று (22) நடைபெற்று முடிந்த காலிறுதிப் போட்டி ஒன்றில் மாஸ் சிலுவேட்டா அணி எல்.பி. பினான்ஸ் அணியினை 6 விக்கெட்டுக்களால் தோற்கடித்ததுடன் அரையிறுதிப் போட்டிக்கும் தெரிவாகியது.

கொழும்பு BRC மைதானத்தில் தொடங்கிய தீர்மானமிக்க இந்த காலிறுதிப் போட்டி மழை காரணமாக அணிக்கு 42 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக அமைந்திருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மாஸ் சிலுவேட்டா அணி எல்.பி. பினான்ஸ் அணியை முதலில் துடுப்பாடுமாறு பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய எல்.பி. பினான்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களை குவித்தனர்.

இலங்கை T20 அணியின் தலைவராக மீண்டும் திசர பெரேரா 

எல்.பி. பினான்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் சஹான் ஆராச்சிகே அரைச்சதம் ஒன்றினை தாண்டி 70 ஓட்டங்களையும், அஞ்செலோ பெரேரா 35 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இதேநேரம் மாஸ்சிலுவேட்டா அணியின் பந்துவீச்சு சார்பாக அஞ்செலோ இமானுவேல், அவிந்து தீக்ஷன மற்றும் புத்திக்க சஞ்சீவ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 231 ஓட்டங்களை அடைவதற்காக பதிலுக்கு துடுப்பாடிய மாஸ் சிலுவேட்டா அணி தனஞ்சய லக்ஷான், அஞ்செலோ இமானுவேல், ஜெஹான் பெர்னாந்து ஆகியோர் பெற்ற அரைச்சதங்களோடு போட்டியின் வெற்றி இலக்கை வெறும் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 232 ஓட்டங்களுடன் அடைந்தது.

மாஸ் சிலுவேட்டா அணியின் துடுப்பாட்டம் சார்பாக  அரைச்சதம் தாண்டிய தனஞ்சய லக்ஷன் 67 ஓட்டங்களையும், அஞ்செலோ இமானுவேல் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களையும், ஜெஹான் பெர்னாந்து ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களையும் பெற்றவாறு தமது தரப்பின் வெற்றியைனை ஊர்ஜிதம் செய்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

எல்.பி. பினான்ஸ் – 230/8 (42) – சஹான் ஆராச்சிகே 70, அஞ்செலோ பெரேரா 35, அஞ்செலோ இமானுவேல் 2/11, அவிந்து தீக்ஷன 2/32, புத்திக்க சஞ்சீவ 2/37

மாஸ் சிலுவேட்டா – 232/4 (38.1) – தனஞ்சய லக்ஷன் 67, அஞ்செலோ இமானுவேல் 65*, ஜெஹான் பெர்னாந்து 60*

முடிவு – மாஸ் சிலுவேட்டா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

இதேநேரம் இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு காலிறுதிப் போட்டியில் கொமர்ஷல் கிரடிட் அணி மற்றும் டீஜேய் லங்கா அணி ஆகியவற்றுக்கு இடையில் இன்றைய நாளில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், குறித்த போட்டி மழையினால் கைவிடப்பட லீக் சுற்று அடிப்படையில் கொமர்ஷல் கிரடிட் அணி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<