எனது தந்தையே எனது நாயகன்; முன்னாள் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம்

1104

முன்னாள் கிரிக்கெட் வீரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியோடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள “எனது தந்தையே, எனது நாயகன் (My Dad, My Superstar)“ கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (நவம்பர்) 03 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

கிரிக்கெட்டை விரும்பும் குழந்தைகளுக்கிடைய தந்தைமார்களின் நினைவுக்காக நாடத்தப்படும் இந்த கிரிக்கெட் தொடரில், இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவம் செய்த முன்னாள் வீரர்கள் பங்கெடுக்கின்றனர். அடுத்த தலைமுறையினரை ஊக்கப்படுத்துவதே இந்த கிரிக்கெட் தொடரை நடாத்துவதன் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

தென்னாபிரிக்க உள்ளூர் T20 தொடரில் விளையாடவுள்ள ஜீவன் மெண்டிஸ்

ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தவிதத்தில் …

பாடசாலை அணிகளுக்கு இடையில் இந்த கிரிக்கெட் தொடர் இடம்பெறுவதோடு பாடசாலை அணி ஒன்றினை தொடரில் பிரதிநிதித்துவம் செய்யும் முன்னாள் கிரிக்கெட் வீரர் குறித்த பாடசாலையின் பழைய மாணவராக இருத்தல் வேண்டும் என போட்டித் தொடரின் ஏற்பாட்டாளர்கள் நிபந்தனை வைத்துள்ளனர். எனினும், இந்த நிபந்தனைக்கு உட்படாத முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது குழந்தை தற்போது படித்து வரும் பாடசாலையை தொடரில் பிரதிநிதித்துவம் செய்ய முடியும்.

இதன்படி, 18 பாடசாலை அணிகள் தொடரில் பங்கெடுப்பதோடு அவை ஒவ்வொன்றினதும் அணித்தலைவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடசாலையினதும் அணித்தலைவர்கள் விபரம் கீழே வருமாறு,

ஆனந்த கல்லூரி – அவிஷ்க குணவர்தன, மஹிந்த கல்லூரி – உபுல் சந்தன, மலியதேவ கல்லூரி – அஜித் ஏக்கநாயக்க, றிச்மண்ட் கல்லூரி – சமில கமகே, றோயல் கல்லூரி – நல்லையா தேவராஜன், புனித ஏன்ஸ் கல்லூரி – லங்கா டி சில்வா, நாலந்த கல்லூரி –  ஹேமந்த தேவப்பிரிய, D.S. சேனநாயக்க கல்லூரி – ஹஷான் திலகரட்ன, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் – ஹசந்த பெர்னாந்து, றாகுல கல்லூரி – ப்ரோமதய விக்கிரமசிங்க, புனித அந்தோனியர் கல்லூரி – சஜித் பெர்னாந்து, புனித ஜோசப் கல்லூரி – சமிந்த வாஸ், புனித பேதுரு கல்லூரி – ரிஜேஷ் ஜெகநாதன், புனித செபஸ்டியன் கல்லூரி – ரவி ரத்நாயக்க, இசிபதன கல்லூரி – நுவன் சொய்ஸா, கொழும்பு இணைந்த கல்லூரிகள் பதினொருவன் அணி – சனத் ஜயசூரிய.

இத்தொடரில் பங்குபற்றும் 18 பாடசாலை அணிகளும் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதல்கள் நடைபெறவுள்ளதோடு, ஒவ்வொரு குழுக்களிலும் 6 பாடசாலை அணிகள் இடம்பெற்றுள்ளன.

இது ஒரு வித்தியாசமான கிரிக்கெட் தொடர் என்பதால், தொடரில் மூன்று இறுதிப் போட்டிகள் மூன்று கிண்ணங்களுக்காக நடைபெறவுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகள் இரண்டு லீக் போட்டிகளில் ஆடுவதோடு லீக் போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் ஒவ்வொரு குழுக்களிலும் முதல் இடத்தினைப் பெறும் பாடசாலை அணிகள் “சிறந்த தந்தை (Super-Dads)” கிண்ணத்திற்காகவும், புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தினைப் பெறும் அணிகள் “சம்பியன் தந்தை (Champion-dads)” கிண்ணத்திற்காகவும், மூன்றாவது இடத்தினைப் பெறும் பாடசாலை அணிகள் “சவாலான தந்தை (Challenger-dads)” கிண்ணத்திற்காகவும் தமக்கிடையே மோதவுள்ளன.

இத்தொடரில் உள்ள பாடசாலை அணிகளுக்கு இடையில் ஆறு அரையிறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளதோடு, இத்தொடரின் மூன்று இறுதிப் போட்டிகளும்  நவம்பர் மாதம் 18 ஆம் திகதி காலை தொடக்கம் இரவு (மின்னொளி வசதியோடு) மொரட்டுவ மைதானத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடரில் பங்குபெறும் பாடசாலை அணிகள் குறிப்பிட்ட வயதுப்பிரிவுக்கு அமைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கொண்டிருக்க வேண்டும் என்பதும் நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு அணியும் 35 தொடக்கம் 40 வயது வரையிலான வீரர்கள் 5 பேரினையும், 40 தொடக்கம் 45 வயது வரையிலான வீரர்கள் 2 பேரினையும், 45 தொடக்கம் 50 வயது வரையிலான வீரர்கள் 2 பேரினையும், 50 வயதிற்கு மேற்பட்ட வீரர்கள் 2 பேரினையும் கொண்டிருப்பது அத்தியாவசியமாக ஆக்கப்பட்டுள்ளது.

Photo Album: My Dad My Superstar – Dad’s Cricket Tournament | Press Conference

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை மீண்டும் கிரிக்கெட் அரங்கில் காண்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இத்தொடரில் உருவாக்கப்பட்டுள்ள இதேநேரம், கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்களாக கருதப்படும் அர்ஜூன ரணதுங்க, முத்தையா முரளிதரன், ஹஷான் திலகரட்ன போன்றோர் தொடரில் விளையாடவுள்ளதால் இத்தொடர் மிகவும் பெறுமதி வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.

முன்னாள் வீரர்கள் பங்குபெறும் இத்தொடரினை ஆரம்பிக்க முன்னோடியாக அர்ஜூன ரணதுங்கவும், இணை முன்னோடியாக அரவிந்த டி சில்வாவும் இருந்ததோடு, தொடரின் இயக்குனராக ரவிந்திர புஷ்பகுமார பொறுப்பேற்றுள்ளார்.

“எனது தந்தையே எனது நாயகன் கிரிக்கெட் தொடர் பிரபல பாடசாலைகளையும், தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களையும், முன்னுதாரணமான தந்தைமார்களையும், இளைஞர்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு பாலம். இத்தொடர் மூலம் உண்மை நாயகர்களான தந்தைமார்களும், தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களும் ஒழுக்க விழுமியங்களையும், உண்மையான தலைமைத்துவத்தினையும் இன்றைய சமுதாயத்திற்கு எடுத்து காட்ட முடியும். இதேநேரம், கல்லூரிகளுக்கு வகுப்பறைகளுக்கு அப்பாற்பட்ட கல்வி ஒன்றினை பெற்றுக் கொள்ளவும், புதிய அத்தியாயம் ஒன்றினை எழுதவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.“

~ அர்ஜூன ரணதுங்க

இந்த கிரிக்கெட் தொடர், கிரிக்கெட் விளையாட்டை நேசிக்கும் இளம் சமூதாயத்தினரிடமும் 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெல்லும் போது அதன் ரசிகர்களாக காணப்பட்டவர்களிடமும் ஒரு நல்ல அபிப்பிராயத்தினை உண்டு பண்ணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு தங்களது கடந்த காலங்களில் கிரிக்கெட் நாயகர்களாக இருந்த வீரர்களை மீண்டும் அரங்கில் காண்பதற்கும், பழைய நினைவுகளை புதுப்பித்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தினையும்  “எனது தந்தையே, எனது நாயகன்” கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க போகின்றது.

இத் தொடர் பற்றிய மேலதிக விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள ThePapare.com  உடன் இணைந்திருங்கள்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…