தசுனின் கருத்துக்கு மைதானத்தில் பதிலடி கொடுக்கவுள்ள பங்களாதேஷ்

Asia Cup 2022

2681

பங்களாதேஷ் அணியில் உலகத்தரமிக்க பந்துவீச்சாளர்கள் இல்லையெனவும், ஆப்கானிஸ்தான் அணியை விட பங்களாதேஷ் அணியை வீழ்த்துவது மிகவும் இலகுவானது எனவும் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக தெரிவித்த கருத்துக்கு பேச்சளவில் அல்லாமல் செயல்பாட்டு ரீதியாக மைதானத்தில் வைத்து பதிலடி கொடுப்போம் என பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் மெஹெதி ஹசன் சவால் விடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆசியக் கிண்ண ஆரம்பப் போட்டியில் இலங்கை அணி முற்றிலும் எதிர்பாராத விதமாக ஆப்கானிஸ்தானிடம் 8 விக்கெட்டுகளால் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில் குறித்த போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தசுன் ஷானக,

“ஆப்கானிஸ்தான் அணியில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். முஸ்தபிசுர் ரஹ்மான் ஒரு நல்ல பந்துவீச்சாளர் மற்றும் சகிப் அல் ஹசன் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்பதை நாம் அறிவோம். ஆனால் அதைத் தவிர பங்களாதேஷ் அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பங்களாதேஷ் அணியை வீழ்த்துவது எளிதாகும்” என அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்குமிடையில் இதுவரை நடைபெற்றுள்ள 12 T20 போட்டியில் 8 இல் தோல்வியடைந்துள்ள பங்களாதேஷ் அணியின் பலம் மற்றும் பலவீனம் தனக்கு நன்கு தெரியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தசுன் ஷானகவின் இந்த கருத்துக்கு பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரரான மெஹெதி ஹசன் பதிலளிக்கையில், “இது குறித்து வார்த்தைகளில் எந்த கருத்தையும் கூறமாட்டேன். அதற்கான பதிலை மைதானத்தில் வைத்து செயல்பாட்டின் மூலம் கொடுப்போம்” என்றும் கூறியுள்ளார்.

“இந்த அணி நல்லது அல்லது இந்த அணி மோசமானது என்று நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஒரு அணியின் பலம் அல்லது பலவீனம் மைதானத்தில் தீர்மானிக்கப்படுகிறது என்று நான் நம்புகிறேன். ஒரு நல்ல அணி மோசமான ஒரு நாளில் தோற்பது போல், பலவீனமான அணியும் நல்ல நாளில் வெற்றி பெறலாம்.

போட்டிக்கு முன் மேற்கொள்கின்ற பயிற்சியை விட அன்றைய நாளில் நன்றாக விளையாடுவது முக்கியம். எனவே நாங்கள் மைதானத்தில் சந்திப்போம். அந்த நாள் முடிவில், சிறந்த அணி வெற்றி பெறும். மேலும் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று அனைவரும் அறிவார்கள்” என மெஹெதி ஹசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷ் அணியின் புதிய உப தலைவராக அபிஃப் ஹொசைனை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசியக் கிண்ணத் தொடரின் தீர்மானமிக்க 5ஆவது போட்டி நாளை (01) டுபாயில் நடைபெறவுள்ள நிலையில், அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சுப்பர் 4 சுற்றுக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<