மாஸ் யுனிச்செலாவுக்கு வெற்றி தேடித்தந்த இலங்கை முன்னாள் வீரர்கள் சாமர சில்வா, டில்ஷான்

682

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26 ஆவது சிங்கர் பிரீமியர் லீக் ஒருநாள் தொடரின் நான்கு போட்டிகள் இன்று (03) நடைபெற்றன. இதில் அஷான் பிரியஞ்சனின் அதிரடி பந்துவீச்சு மூலம் கொமர்ஷல் கிரெடிட் அணி இலகு வெற்றி பெற்றதோடு கான்ரிச் பினான்ஸ், மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செலா அணிகளும் நெருக்கடி இன்றி வெற்றியீட்டின. டீஜே லங்காவுடனான போட்டியில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் வெற்றியீட்டியது.

ஹேலீஸ் எதிர் கொமர்ஷல் கிரெடிட்

சகலதுறை ஆட்டக்காரரான அஷான் பிரியஞ்சனின் சுழல் பந்து வீச்சு மூலம் ஹேலீஸ் அணியை குறுகிய ஓட்டங்களுக்கு சுருட்டிய கொமர்ஷல் கிரெடிட் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பெற்றது.

டில்ஷானின் மாஸ் யுனிசெலா அணிக்கு இலகு வெற்றி

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஹேலீஸ் அணி விக்கெட்டுகளை மளமளவென்று பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 28.3 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஹேலீஸ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ரொன் சந்திரகுப்தா பெற்ற 36 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டமாகும்.

கொமர்ஷல் கிரெடிட் அணி சார்பாக பந்துவீச்சில் அஷான் பிரியஞ்சன் 15 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். முதல் தர போட்டிகளில் அண்மைக் காலமாக சோபித்து வரும் 29 வயதான அஷான் பிரியஞ்சன் இலங்கை அணிக்காக இதுவரை 23 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருந்தபோதும் அவர் தனது கடைசி ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்கேற்று மூன்று ஆண்டுகள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொமர்ஷல் கிரெடிட் அணி 13.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 98 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. சதுரங்க டி சில்வா ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

ஹேலீஸ் – 96 (28.3) – ரொன் சந்திரகுப்தா 35, லஹிரு சமரகோன் 24, அஷான் பிரியஞ்சன் 6/15, சுராஜ் ரன்திவ் 2/31

கொமர்ஷல் கிரெடிட் – 98/2 (13.5) – சதுரங்க டி சில்வா 50*, அஷான் பிரியஞ்சன் 18

முடிவு – கொமர்ஷல் கிரெடிட் 8 விக்கெட்டுகளால் வெற்றி  


மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செலா எதிர் மாஸ் சிலுயேட்டா

இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான சாமர சில்வாவின் பொறுப்பான துடுப்பாட்ட மற்றும் திலகரத்ன டில்ஷானின் பந்துவீச்சு மூலம் மாஸ் சிலுயேட்டா அணிக்கு எதிரான போட்டியில் மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செலா அணி 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி ஒன்றை பெற்றது.

கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மாஸ் யுனிச்செலா அணித் தலைவர் திலகரத்ன டில்ஷான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்படி துடுப்பாடக் களமிறங்கிய மாஸ் யுனிச்செலா அணி சார்பில் மத்திய வரிசையில் வந்த சாமர சில்வா சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்டங்களை அதிகரித்தார்.

எனினும் அவர் சதத்தை நெருங்கிய நிலையில் 93 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் மூலம் மாஸ் யுனிச்செலா அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.

இலகு வெற்றிகளை பதிவு செய்த ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கான்ரிச் பினான்ஸ் அணிகள்

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மாஸ் சிலுயேட்டா அணியின் விக்கெட்டுகளை டில்ஷான் மற்றும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு ஜயரத்ன மாறி மாறி வீழ்த்தினர். இதனால் மாஸ் சிலுயேட்டா அணி 100 ஓட்டங்களுக்கு  சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

மாஸ் யுனிச்செலா அணி சார்பில் பந்துவீச்சில் டில்ஷான் மற்றும் ஜயரத்ன தலா 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

போட்டியின் சுருக்கம்

மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செலா – 241 (49.4) – சாமர சில்வா 93, ஷெஹான் மதுசங்க 45, குசல் ஜனித் 38, புத்திக சஞ்சீவ 4/46, தனஞ்சய லக்ஷான் 2/42

மாஸ் சிலுயேட்டா – 100 (24.1) – துஷ்மன்த ஹேமன்த 33, லஹிரு ஜயரத்ன 4/25, திலகரத்ன டில்ஷான் 4/38

முடிவு – மாஸ் யுனிச்செலா 141 ஓட்டங்களால் வெற்றி  


டிமோ எதிர் கான்ரிச் பினான்ஸ்

கட்டுநாயக்க சிலாபம் மேரியன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கான்ரிச் பினான்ஸ் அணி தனது அதரடி பந்துவீச்சால் டிமோ அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வென்றது.

டிமோ அணி போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தபோதும் அந்த அணியின் எந்த வீரரும் தமது விக்கெட்டை காத்துக் கொண்டு ஓட்டங்களை சேகரிக்க தவறினர். திக்ஷில டி சில்வா பெற்ற 30 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டமாகும். இதனால் டிமோ அணி 33.5 ஓவர்களில் 99 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

கான்ரிச் பினான்ஸ் அணி சார்பில் பந்துவீச்சில் அலங்கார அசங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு இலங்கை அணிக்காக 2009, 2010 ஆம் ஆண்டுகளில் மூன்றே மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சகலமுறை வீரர் முதுமுதலிகே புஷ்பகுமார மற்றும் மேலும் இரு வீரர்கள் தலா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கான்ரிச் பினான்ஸ் எந்த நெருக்கடியும் இன்றி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 100 ஓட்டங்களை எட்டியது.

போட்டியின் சுருக்கம்

டிமோ – 99 (33.5) – திக்ஷில டி சில்வா 30, ஹஷான் துமிந்து 22, அலங்கார அசங்க 3/35, முத்துமுதலிகே புஷ்பகுமார 2/01, ரொஷான் லக்சிறி 2/15, உதித் மதுஷான் 2/16

கான்ரிச் பினான்ஸ் – 100/3 (18.5) – பதும் நிஸ்ஸங்க 37*, சரங்க ராஜகுரு 26, நிசல தாரக்க 1/06

முடிவு – கான்ரிச் பினான்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி  


ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் எதிர் டீஜே லங்கா

துடுப்பாட்டம், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சோபித்த ஜோன் கீல்ஸ் அணி டீஜே லங்கா அணிக்கு எதிரான போட்டியில் 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வத் லுவிஸ் முறையில் வெற்றியீட்டியது.

விராட் கோஹ்லியின் இணையத்தளத்தை ஊடுருவிய பங்களாதேஷ் ரசிகர்கள்

மொரட்டுவ டி சொய்சா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த ஜோன் கீல்ஸ் அணி 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களை பெற்றது. இலங்கை டெஸ்ட் அணியின் சிறப்பு துடுப்பாட்ட வீரரான ரொஷேன் சில்வா (64) மற்றும் பானுக்க ராஜபக்ஷ (63) அரைச்சதம் பெற்றனர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய டீஜே லங்கா 41 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது சீரற்ற காலநிலையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போட்டியை தொடர முடியாத நிலையில் ஜோன் கீல்ஸ் அணி டக்வத் லுவிஸ் முறையில் வெற்றியை உறுதி செய்து கொண்டது.

ஜோன் கீல்ஸ் அணியின் வலதுகை சுழல் பந்து வீச்சாளர் மதுக்க லியனபத்திரணகே 19 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் – 259/8 (50) – ரொஷேன் சில்வா 64, பானுக்க ராஜபக்ஷ 63, திமுத் கருணாரத்ன 38, மனெல்கர் டி சில்வா 24, குஷான் வீரக்கொடி 3/43, லக்ஷான் சதகன் 2/66

டீஜே லங்கா – 172/9 (41) – மினோத் பானுக்க 42, சச்சித்ர சேரசிங்க 38, சிதார கிம்ஹான் 35, மதுக்க லியனபதிரணகே 5/19, இஷான் ஜயரத்ன 2/25, ஜெப்ரி வன்டர்சே 2/39

முடிவு – ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 61 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை)    

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<