தடுமாறும் டெல்லி அணி : வோர்னரின் அதிரடியில் வீழ்ந்த கொல்கத்தா

340
IPL

கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள பத்தாவது பருவகாலத்திற்கான .பி.எல் தொடரின் 36ஆவது மற்றும் 37ஆவது லீக் போட்டிகள் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ஆலோசகராக அலன் டொனால்ட்

தொடர் தோல்விகளால் தடுமாறும் டெல்லி அணி

மொஹாலியில் இடம்பெற்ற முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் மெக்ஸ்வெல் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் வந்த டெல்லி அணியின் சஞ்சு சாம்சன், பில்லிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரம்ப ஓவரிலேயே டெல்லி அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சந்தீப் ஷர்மா வீசிய அந்த ஓவரின் கடைசிப் பந்தில் பில்லிங்ஸ் ஓட்டங்கள் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து கருண் நாயர் களம் இறங்கினார். 3ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் சஞ்சு சாம்சன் 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 5ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். இந்த மூன்று விக்கெட்டுக்களை சந்தீப் ஷர்மா வீழ்த்தினார்.

ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்த டெல்லி அணியினால் அதிலிருந்து மீண்டு வரமுடியவில்லை. கருண் நாயர் (11), ரிஷப் பந்த் (3), கோரி ஆண்டர்சன் (18), கிறிஸ் மோரிஸ் (2), ரபாடா (11) என அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி டேர்டெவில்ஸ் அணி 17.1 ஓவரில் 67 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

பஞ்சாப் அணி சார்பில் சந்தீப் ஷர்மா 3 விக்கெட்டுகளையும், அக்சார் பட்டேல், வருண் ஆரோன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 68 என்ற இலகுவான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அம்லா மற்றும் குப்டில் ஆகியோர் களம் இறங்கினர்.

அம்லா நிதானமாக விளையாட, மார்ட்டின் கப்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக பஞ்சாப் அணி 7.5 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 68 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மார்ட்டின் குப்டில் 27 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 50 ஓட்டங்கள் எடுத்தும், அம்லா 20 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்திய சந்தீப் ஷர்மா ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 போட்டிகளில் நான்கு வெற்றிகள் மூலம் 5ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

டெல்லி டேர்டேவில்ஸ் 67 (17.1) – கொரி அன்டர்சன் 18(25), சந்திப் சர்மா 20/4(20)

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 68/0 (7.5) – குப்டில் 50(27), அம்லா 16(20)

பின்ஞ்சின் அதிரடியில் மீண்டும் வீழ்ந்தது பெங்களுர் அணி


வோர்னரின் அதிரடியில் வீழ்ந்தது கொல்கத்தா அணி

நேற்றைய மற்றுமொரு போட்டியில் சண்ரைசஸ் ஹைதராபாத் அணி 48 ஓட்டங்களினால் அசத்தல் வெற்றி ஒன்றினைப் பதிவு செய்துள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி ஐதராபாத் அணியின் தலைவர் வோர்னர், தவான் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களம் இறங்கினார்கள்.

தவான் ஒரு புறம் நிதானமாக விளையாட, மறுபுறம் வோர்னர் ருத்ரதாண்டவம் ஆடினார். 2ஆவது ஓவரில் ஒரு சிக்சுடன் 10 ஓட்டங்கள் குவித்த வோர்னர், கிறிஸ் வோக்ஸ் வீசிய 3ஆவது ஓவரில் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரி மூலம் 11 ஓட்டங்கள் சேர்த்தார். யூசுப் பதான் வீசிய 4ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 17 ஓட்டங்கள் சேர்த்தார்.

ஆறாவது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் தவான் கொடுத்த ஸ்டம்பிங் வாய்ப்பை உத்தப்பா சரியாக பயன்படுத்தவில்லை. இந்த ஓவரில் ஐதராபாத் அணி 12 ஓட்டங்கள் சேர்க்க, பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 79 ஓட்டங்கள் குவித்தது.

அதிரடி காட்டிய வோர்னர் 43 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய தவான் 30 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அப்போது ஐதராபாத் அணி 13 ஓவரில் 139 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். வோர்னர் 59 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 126 ஓட்டங்கள் சேர்த்தார்.

கேன் வில்லியம்சனும் அதிரடியாக விளையாட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களைக் குவித்தது.

பின்னர் 210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுணில் நரைன் மற்றும் கம்பீர் ஆகியோர் களம் இறங்கினர்.

ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் நரைன் ஆட்டமிழந்தார். அந்த அணியின் தலைவர் கம்பீர் 11 ஓட்டங்களுக்கு அரங்கு திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய உத்தப்பா அதிரடியாகவும், பொறுப்புடனும் செயல்பட்டு ஆடினார். அவர் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் 7ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர், மழை நின்றதும் கொல்கத்தா அணியினர் துடுப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

வெற்றி இலக்கு அதிகமாக இருந்தாலும் அதிரடி வீரர்கள் சீக்கிரமே ஆட்டமிழந்ததால் பின்வரிசை வீரர்கள் ஓட்டங்களை எடுக்க மிகவும் சிரமப்பட்டனர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணியினால் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

ஐதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், முகம்மது சிராஜ், கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால், 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிரடியாக சதமடித்த அணித் தலைவர் வோர்னர் ஆட்ட நாயகனாக தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

சண்ரைசஸ் ஹைதராபாத் 209/3 (20) – டேவிட் வோர்னர் 126(59), கெய்ன் வில்லியம்சன் 40(25)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 161/7(20) – ரொபின் உத்தப்பா 53(29), மனேஷ் பாண்டே 39(29), புவனேஷ் குமார் 29/2(4)