பாகிஸ்தான் தொடருக்கான நியூசிலாந்து T20I குழாம் அறிவிப்பு

82

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் பங்கெடுக்கும் 13 பேர் கொண்ட நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

>> ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை ஒருநாள் குழாம் அறிவிப்பு

அறிவிக்கப்பட்டிருக்கும் நியூசிலாந்து T20I குழாத்தில் மிக முக்கிய உள்ளடக்கமாக வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்ரி அமைகின்றார். நியூசிலாந்து அணியினை நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் மேட் ஹென்ரி பிரதிநிதித்துவம் செய்த போதும் தசை உபாதை காரணமாக தொடரில் அவரினால் முழுமையாக ஆட முடியாத நிலை உருவாகியிருந்தது. இதனால் மேட் ஹென்ரி  பாதியிலேயே குறிப்பிட்ட உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகியிருந்தார்.

இந்த நிலையில் மேட் ஹென்ரி தற்போது பூரண உடற்தகுதியினைப் பெற்றிருப்பதோடு இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தேசிய அணிக்காக ஆடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. மேட் ஹென்ரி நாளை (05) உடற்தகுதி பரிசோதனைகளை  முகம் கொடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை நியூசிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்டவீரரான கேன் வில்லியம்சனும் பாகிஸ்தானுக்கு எதிரான T20I குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். கேன் வில்லியம்சன் பங்களாதேஷிற்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த T20I தொடருக்கான குழாத்தில் உள்வாங்கப்பட்ட போதும் அவர் குறிப்பிட்ட தொடரில் பணிச்சுமை கருதி ஆடியிருக்கவில்லை. கேன் வில்லியம்சனுக்கு பாகிஸ்தான் T20I தொடரில் மூன்றாவது போட்டியில் மாத்திரம் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. வில்லியம்சன் இல்லாத நிலையில் நியூசிலாந்து T20I அணியானது மிச்சல் சான்ட்னர் மூலம் வழிநடாத்தப்படவிருக்கின்றது.

>> இலங்கை தொடருக்கான ஜிம்பாப்வே குழாம் அறிவிப்பு

இதேநேரம் பங்களாதேஷ் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த வீரர்களான டெவோன் கொன்வேய், லோக்கி பெர்குஸன் ஆகிய வீரர்களும் பாகிஸ்தான் T20I தொடரில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

அதேவேளை உபாதையில் இருந்து மீண்டு வருகின்ற வீரர்களான கைல் ஜேமிசன், மைக்கல் பிரஸ்வெல் ஆகியோருக்கும் ட்ரென்ட் போல், ஜேம்ஸ் நீஷம் ஆகிய வீரர்களுக்கும் பாகிஸ்தான் T20I தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் பங்கெடுக்கும் 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் ஜனவரி மாதம் 12ஆம் திகதி (ஒக்லாண்டில்) ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து T20 அணிக்குழாம்

கேன் வில்லியம்சன் – தலைவர் (மூன்றாவது போட்டி ஓய்வு), பின் அலன், மார்க் சாப்மன், ஜோஷ் கிளார்க்ஸன் (மூன்றாவது போட்டி மாத்திரம்), டெவோன் கொன்வேய், லோக்கி பெர்குஸன் (முதல் இரண்டு போட்டிகளும் ஓய்வு) , மேட் ஹென்ரி, அடம் மில்னே, டேரைல் மிச்சல், கிளன் பிலிப்ஸ், மிச்சல் சான்ட்னர், பென் சோர்ஸ் (இறுதி மூன்று போட்டிகளும் ஓய்வு), டிம் செய்பார்ட், இஸ் சோதி, டிம் சௌத்தி

>  மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<