இந்த பருவகால FA கிண்ணத்திற்காக தமது முதல் போட்டியை எதிர்கொண்ட விமானப்படை விளையாட்டுக் கழக அணியினர் மூதூர் ரியலைன்ஸ் விளையாட்டுக் கழகத்தை 13-0 என்ற அபார கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டு அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

மூதூர் கால்பந்து லீக்கின் ரியலைன்ஸ் அணியினர் முன்னைய சுற்றில் கிண்ணியா லீக்கின் பயனியர் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டு FA கிண்ணத்தின் 64 அணிகளைக் கொண்ட சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தது.  

ஜாவா லேனின் அதிரடியில் வீழ்ந்த சிறைச்சாலை அணி 

அந்த வகையில் விமானப்படை மற்றும் ரியலைன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி களனிய கால்பந்து மைதானத்தில் இடம்பெற்றது.

இன்றைய போட்டிக்கு டில்ஷான் பெர்ணான்டோவின் தலைமையின் கீழ் களமிறங்கிய விமானப்படை அணிக்கு ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து அடுத்தடுத்து கோல்கள் பெறப்பட்டுக்கொண்டே இருந்தன.

போட்டி ஆரம்பமாகி மூன்றாவது நிமிடத்திலேயே குமார லன்கேசர மூலமாக முதல் கோலைப் பெற்ற விமானப்படை வீரர்கள் தொடர்ந்தும் தமது கால்களிலேயே பந்தை வைத்து முழு ஆதிக்கம் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து 9ஆவது நிமிடத்தில் தேசிய அணி வீரர் கவிது இஷான் மூலம் அடுத்த கொலைப் பெற்ற விமானப்படை, அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து கோல்களை குவித்துக்கொண்டிருந்தது.

டி.கே துமின்த 12ஆம் மற்றும் 21ஆம் நிமிடங்களில் கோல்களைப் பெற, அடுத்த 5 நிமிடங்களில் நிபுன பண்டாரவும் தன் பங்கிற்கு ஒரு கோலைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 11 நிமிடங்கள் கோல் பெறாமல் இருந்த அவர்கள் 37ஆவது நிமிடத்தில் கெலும் பெரேரா மூலம் அடுத்த கோலைப் பெற்றது. அந்த கோலின் பின்னர் ஆட்டம் கவிது இஷானின் தொடர் கோல்களுடன் சென்றது.

போட்டியின் 44ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்த கவிது, அதற்கு இரண்டு நிமிடங்களின் பின்னர் அடுத்த கோலையும் பெற்றக்கொண்டு, தனது ஹட்ரிக்கை பதிவு செய்தார்.

சம்பியன்ஸ் லீக்கில் விளையாடும் முக்கிய அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் விமானப்படையின் அதிரடித் தாக்குதலுக்கு மூதூர் தரப்பினரால் எந்த வகையிலும் ஈடு கொடுக்க முடியாமல் இருந்தது. இதன் காரணமாக முதல் பாதி நிறைவின்போதே விமானப்படையின் வெற்றி உறுதியாகியிருந்தது.

முதல் பாதி: விமானப்படை விளையாட்டுக் கழகம் 08 – 00 ரியலைன்ஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆரம்பமாகியதில் இருந்து அதிரடி காண்பித்த கவிந்து இஷான், எதிரணியின் மத்திய களம் மற்றும் பின்கள வீரர்களுக்கு தனது வேகத்தின் மூலம் பெரும் அச்சுறுத்தல் விடுத்தார். அவரது நுட்பம் கலந்த வேகத்தை ரியலைன்ஸ் அணி வீரர்களால் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது.

இதன் காரணமாக அவர், 50ஆம், 51ஆம் நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்களைப் பெற்றுக்கொண்டார். அதன் பின்னரும் அவர் மேற்கொண்ட சில முயற்சிகள் கோல் கம்பத்தில் பட்டு திசை திரும்பின. இன்னும் சிலவற்றை ரியலைன்ஸ் கோல் காப்பாளர் தடுத்தார்.

மீண்டும் 67ஆம் மற்றும் 68ஆம் நிமிடங்களில் இரு கோல்களைப் பெற்ற கவிந்து இன்றைய போட்டியில் தனக்கென 7 கோல்களைக் குவித்தார்.

அதனுடன் கோல் வேட்டையை நிறுத்தாத அவ்வணியின் துமின்த 72ஆவது நிமிடத்திலும் ஒரு கோலைப் பெற, ஆட்டத்தில் 13 கோல்கள் பெறப்பட்டன.  

ராணுவ மகளிர் அணியின் சம்பியன் கனவுகளை சிதறடித்த விமானப்டை

எனினும் போட்டியில் 75 நிமிடங்கள் கடந்த நிலையில், ரியலைன்ஸ் அணி வீரர்கள் சிலர் மைதானத்தில் இருந்து வெளியேறினர். இதன் காரணமாக போட்டியை நடத்துவதற்கு ஒரு அணியில் இருக்க வேண்டிய வீரர்களை விட குறைந்த வீரர்கள் மைதானத்தில் இருந்தமையினால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியாது என நடுவர் டிலான் பெரேரா மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் அபார வெற்றியை பெற்ற விமானப்படை அணி அடுத்த சுற்றான 32 அணிகள் மோதும் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது. அடுத்த சுற்றில் இவர்கள் சிவில் பாதுகாப்பு விளையாட்டுக் கழக அணியை எதிர்கொள்ளவுள்ளனர்.

முழு நேரம்: விமானப்படை விளையாட்டுக் கழகம் 13 – 00 ரியலைன்ஸ் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன்- கவிது இஷான் (விமானப்படை விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – குமார லன்கேசர 3’, கவிது இஷான் 9’, 44, 45+1’, 50’, 51’, 67’ & 68’, டி.கே துமின்த 12’, 21’ & 72’, நிபுன பண்டா 26’, கெலும் பெரேரா 37’