நெருக்கடியின்றி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து

228
Image Courtesy - Getty Images

சுவீடன் அணியை நெருக்கடியின்றி 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளின் பின் உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஹரி மகுயிரே மற்றும் டெல் அலி தலையால் முட்டி இங்கிலாந்துக்கு கோல்கள் பெற்றுக் கொடுத்ததோடு, இங்கிலாந்து அணியின் கோல்காப்பாளர் ஜோர்டன் பிக்போர்ட் சுவீடனின் கோல் வாய்ப்புகளை அபாரமாக தடுத்தார்.

இதன்படி 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறும் ஸ்வீடனின் எதிர்பார்ப்பு பறிபோனதோடு இங்கிலாந்து அணி இரண்டாவது முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

பிரேசிலை வீழ்த்திய பெல்ஜியம் அரையிறுதியில் பிரான்ஸுடன் பலப்பரீட்சை

இங்கிலாந்து அணி எதிர்வரும் புதன்கிழமை (11) நடைபெறவிருக்கும் இரண்டாவது அரையிறுதியில் போட்டியை நடத்தும் ரஷ்யா அல்லது குரோஷியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் லிஸ்னிக்கி அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சமரா அரங்கில் சனிக்கிழமை (7) நடைபெற்ற காலிறுதிப் போட்டியின் முதல் 15 நிமிடங்கள் மந்தமாகவே நீடித்தது. சுவீடன் வீரர்கள் அடிக்கடி இங்கிலாந்து கோல் எல்லையை ஆக்கிரமித்தபோதும் அது கோல் ஒன்றை பெறும் அளவுக்கு சவால் விடுவதாக இருக்கவில்லை. மறுபுறம் நேர்த்தியாக ஆடிய இங்கிலாந்து வாய்ப்பு கிட்டும் வரை பொறுமையான ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் 30 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு முதல் கோனர் கிக் வாய்ப்பு கிடைத்தபோது ஹரி மகுயிரே அதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். ஆஷ்லி யங் அடித்த அந்த கோனர் கிக்கை மகுயிரே தலையால் முட்டி வலைக்குள் செலுத்தினார்.

மகுயிரே இங்கிலாந்து அணிக்காக பெறும் முதல் கோல் இதுவென்பதோடு அதனை உலகக் கிண்ண நொக் அவுட் போட்டியில் பெறும் இரண்டாவது இங்கிலாந்து வீரர் அவராவார். இதற்கு முன்னர் 2002 இல் டென்மார்க்கிற்கு எதிரான நொக் அவுட் போட்டியில் ரியோ பெர்டினன்ட் இங்கிலாந்துக்காக தனது முதல் கோலை பெற்றிருந்தார்.

முதல் பாதி: இங்கிலாந்து 1 – 0 சுவீடன்

சுவீடன் வீரர் மார்கஸ் பேர்க் தலையால் முட்டி கோல் பெறும் முயற்சியோடு ஆரம்பமான இரண்டாவது பாதியின் 54 ஆவது நிமிடத்தில் வைத்து ஜோர்டன் ஹென்டர்சன் மேலால் உயர்த்தி அடித்த பந்தை ரஹீம் ஸ்டர்லிங் சுவீடன் வலையை நோக்கி திருப்பியபோதும் அதனை சுவீடன் கோல்காப்பாளர் ரொபின் ஓல்சன் அபாரமாக தடுத்தார்.

எனினும் நான்கு நிமிடங்கள் கழித்து ஜேஸ் லன்கார்ட் மேலால் உதைத்த பந்தை அலி தலையால் முட்டி கோலாக மாற்றியதன் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற முடிந்தது.

உலகக் கிண்ணத்தில் முதல் அணியாக பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இதன் மூலம் 22 வயதான டெல் அலி உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்துக்காக கோல் பெற்ற இரண்டாவது இளவயது வீரர் என பதிவானார். அவர் 1998 இல் ருமேனியாவுக்கு எதிரான தனது 18 வயதில் கோல் பெற்ற மைக்கல் ஓவேனுக்கு மாத்திரமே இரண்டாவதாகிறார்.

இந்த கோலுடன் இங்கிலாந்து இம்முறை உலகக் கிண்ணத்தில் மொத்தம் 11 கோல்களை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 1966 ஆம் ஆண்டு அந்த அணி உலகக் கிண்ணத்தை வென்ற போட்டியிலேயே இத்தனை கோல்களை பெற்றது.

எவ்வாறாயினும் சுவீடன் அணியின் மூன்று கோல்கள் பெறும் முயற்சிகளை இங்கிலாந்து கோல்காப்பாளர் பிக்போர்ட் அபாரமாக தடுத்தமை குறிப்பிடத்தக்கது. மார்கஸ் பேர்க் தலையால் முட்டிய பந்து வலைக்குள் செல்லாமல் தட்டிவிட்ட அவர், தொடர்ந்து விக்டர் கிளசனின் கோல் முயற்சியையும் தடுத்தார். கடைசியாக பெர்க் உயர்த்தி அடித்த பந்து கோல் கம்பத்தின் மேல் பகுதியால் வெளியேறும்படி தட்டிவிட்டார்.

இங்கிலாந்து அணி கொலம்பியாவுக்கு எதிரான 16 அணிகள் சுற்றில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெறுவதற்கு அதன் 24 வயது கோல்காப்பாளரின் சிறப்பான ஆட்டமே காரணமாக இருந்தது.

இங்கிலாந்து அணி உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது இது மூன்றாவது முறையாகும். அந்த அணி தனது சொந்த நாட்டில் நடந்த 1966 உலகக் கிண்ணத்திலேயே அரையிறுதியையும் தாண்டி கிண்ணத்தை வென்றதோடு 1990 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியிடம் பெனால்டியில் தோற்றது.

எவ்வாறாயினும் இங்கிலாந்து அணி இம்முறை உலகக் கிண்ண நொக் அவுட் போட்டிகளில் அதிக பலம் கொண்ட அணிகளை சந்திக்காதது அந்த அணிக்கு அதிக சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அரையிறுதியில் கூட அந்த அணி பிஃபா தரவரிசையில் (குரோஷியா) 20 அல்லது (ரஷ்யா) 70 ஆவது இடத்தில் இருக்கும் அணியையே எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

முழு நேரம்: இங்கிலாந்து 2 – 0 சுவீடன்

கோல் பெற்றவர்கள்

இங்கிலாந்து – ஹரி மகுயிரே 30′, டெல் அலி 58′

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க