மீண்டும் அணியில் இணைந்த சகிப்: முதன்முறையாக மொர்டசா நீக்கம்

West Indies tour of Bangladesh 2021

170

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தமாத இறுதியில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான, 24 பேர்கொண்ட பங்களாதேஷ் முதற்கட்ட குழாத்திலிருந்து, முன்னாள் தலைவரான மஷ்ரபீ மொர்டசா நீக்கப்பட்டுள்ளதுடன், சகிப் அல் ஹசன் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷ் அணிசார்பாக அதிகூடிய ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள மஷ்ரபீ மொர்டசா, நீண்டகாலமாக தலைவராக செயற்பட்டும் வந்தார். இந்தநிலையில், இவரின் நீக்கம் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.

>>இலங்கை வந்துள்ள மொயீன் அலிக்கு கொவிட்-19 தொற்று! 

மஷ்ரபீ மொர்டசா பங்களாதேஷ் அணிக்காக கடந்த 2001ஆம் ஆண்டு அறிமுகமாகியதிலிருந்து, முதற்தடவையாக ஒருநாள் குழாத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர், உபாதை காரணமாக மாத்திரமே ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்துவந்தார்.

மொர்டசாவின் நீக்கம் குறித்து கருத்து வெளியிட்ட தலைமை தேர்வாளர் மின்னாஜுல் அபிதீன், “நாம் அவரை மதிக்கின்றோம். அவர் நாட்டுக்காக அளப்பரிய விடயங்களை செய்துள்ளார். நான், இதுதொடர்பில் அவரிடம் தெளிவாக கலந்துரையாடினேன். இது புரிந்துக்கொள்ளாமையால், எடுக்கப்பட்ட முடிவு அல்ல. நாம் யதார்த்தத்தை சிந்தித்து எடுத்த முடிவு.

அணியின் அனைத்து உறுப்பினர்களையும் வைத்து, நீண்ட கலந்துரையாடலுக்கு பின்னர் நாம் எடுத்த முடிவு இது. நாம், இதனை முழுமையாக விட்டுவிடவில்லை. உடற்தகுதி நிபுணர் மற்றும் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் என அனைவரையும் வைத்து இந்த தீர்மானத்தை எடுத்தோம். அவருக்கான மாற்று வீரர் யார்? என்பது தொடர்பிலும் சிந்தித்துள்ளோம். நாம் புதிதாக ஆரம்பிக்க எண்ணியுள்ளோம். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும்” என்றார்.

மஷ்ரபீ மொர்டசா ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள அதேநேரம், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான குழாத்தில், முன்னணி சகலதுறை வீரர் சகீப் அல் ஹசன் இணைக்கப்பட்டுள்ளார். சூதாட்ட தரகர் நெருங்கியமையை வெளிப்படுத்த தவறியமையால், ஒருவருட தடைக்கு முகங்கொடுத்திருந்த சகீப் அல் ஹசன், மீண்டும் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், பெப்ரவரி 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரானது, கடந்த வருடம் மார்ச் மாதத்தின் பின்னர், பங்களாதேஷில் நடைபெறவுள்ள முதல் சர்வதேச தொடராக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்காளாதேஷ் முதற்கட்ட ஒருநாள் குழாம்

தமிம் இக்பால் (தலைவர்), மொமினுல் ஹக், டஸ்கின் அஹ்மட், கஹ்லீட் அஹ்மட், சகிப் அல் ஹசன், ஹசன் மஹ்மூட், நஜ்முல் ஹுசைன் சென்டோ, முஷ்தபிசூர் ரஹ்மான், முஷ்பிகுர் ரஹீம், மெஹிடி ஹசன் மிராஸ், மொஹமட் மிதுன், நூருல் ஹசன், யசீர் அலி, ஷட்மான் இஸ்லாம், சபீக் ஹசன், நவீம் ஹசன், அபு ஜயட், எபடொட் ஹுசைன்

பங்காளாதேஷ் முதற்கட்ட டெஸ்ட் குழாம்

மொமினுல் ஹக் (தலைவர்), டஸ்கின் அஹ்மட், தமிம் அக்பால், கஹ்லீட் அஹ்மட், சகிப் அல் ஹசன், ஹசன் மஹ்மூட், நஜ்முல் ஹுசைன் சென்டோ, முஷ்தபிசூர் ரஹ்மான், முஷ்பிகுர் ரஹீம், மெஹிடி ஹசன் மிராஸ், மொஹமட் மிதுன், தைஜுல் இஸ்லாம், லிடன் டாஸ், நூருல் ஹசன், யசீர் அலி, ஷட்மன் இஸ்லாம், சயீப் ஹசன், நயீம் ஹசன், அபு ஜயட், எபடொட் ஹுசைன்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<