இந்த மாத இறுதியில் பாகிஸ்தானின் லாஹூர் நகரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கெதிரான T-20 போட்டியில் இருந்து உபுல் தரங்க விலகுவதாக அறிவித்துள்ளார்.  

இலங்கை அணித் தலைவரின் இந்த முடிவானது அவருக்கு பாகிஸ்தானுக்கு எதிரான T-20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கையை வழிநடாத்தும் வாய்ப்பினையும் இல்லாமல் செய்துள்ளது. ஏனெனில், இலங்கை கிரிக்கெட் வாரியம் மூன்று போட்டிகளிலும் விளையாட சம்மதம் தெரிவிக்கும் ஒரு இலங்கை குழாமே இத்தொடருக்காக அறிவிக்கப்படும் என முன்னர் குறிப்பிட்டிருந்தது.

தனுஷ்க குணதிலக்க மீதான போட்டித் தடையில் மாற்றம்

ஒழுக்க விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இலங்கை…

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடிவரும் இலங்கை குழாத்தில் காணப்படும் சகல துறை வீரர் திசர பெரேரா மற்றும் ஏனைய இரண்டு வீரர்கள் மாத்திரமே பாகிஸ்தானுடன் நடைபெறவுள்ள T-20 போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். தரங்க இலங்கை அணியில் இல்லாது போகின்றமையினால் அவரது பொறுப்பினை அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா பெற்று இலங்கை அணியினை தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தனது காயத்தில் இருந்து மீண்டு பூரண சுகத்தைப் பெறும் இறுதித் தருவாயில் உள்ள  குசல் பெரேரா, தன்னுடைய காயம் தற்போது எவ்வாறு உள்ளது என்பதை MRI பரிசோதனை செய்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் நல்ல முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் இலங்கையினை அவர் தலைமை தாங்கலாம்.  

இலங்கை அணிக்காக T-20 போட்டிகளில் வழமையாக விளையாடும் வீரர்களான தில்ஷான் முனவீர, அஷான் பிரியன்ஞன் மற்றும் இசுரு உதான ஆகிய வீரர்களும் இலங்கை கிரிக்கெட் வாரியம் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர். அதோடு, ஏனைய வீரர்களுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.

இலங்கை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் 40 வீரர்கள் கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால அவர்களிடம், லாஹூரில் நடைபெறும் போட்டியில் விளையாட விரும்பமின்மையினை கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தனர். தற்போது தங்கள் முடிவுகளை சில வீரர்கள் மாற்றியிருப்பதாக தெரிய வந்திருக்கின்ற போதிலும் லசித் மாலிங்க போன்ற முக்கிய சில வீரர்கள் தமது எதிர்ப்பை தொடர்ந்தும் காட்டி வருவதாக கூறப்படுகின்றது.

பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணிக்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு

தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்ட பாகிஸ்தானில்…

இலங்கை அணியின் ஒரு நாள் குழாத்தில் தற்போது இடம்பெறாது போயிருப்பினும், மாலிங்கவை T-20 தொடரில் உள்வாங்க பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டிருப்பதாக இலங்கை அணித் தேர்வுக் குழாவின் தலைவர் கிரேம் லப்ரோய் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வாளர்கள் லாஹூரில் விளையாட விருப்பம் தெரிவிக்காத வீரர்களை முதல் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்போவதில்லை என்கிற முடிவை கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது. எனினும் அதனை மாலிங்க வன்மையாக கண்டித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் மற்றும் மத்தியதர வரிசை வீரர் சாமர கபுகெதர ஆகியோர் 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்ட இலங்கை அணியின் பஸ் வண்டியில் பயணம் செய்திருந்தனர். இந்த இரண்டு வீரர்களில் லக்மால் பாகிஸ்தான் செல்ல மறுப்புத் தெரிவிக்கின்ற அதேவேளையில் சாமர கபுகெதர விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார் என அறியவருகின்றது.  

நடுநிலையான இடமொன்றில் கடந்த எட்டு வருடங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் பாகிஸ்தான், தமது  தாயகத்தில் சர்வதேச கிரிக்கெட்டை மீளக்கொண்டு வரும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த முயற்சிகளில் ஒன்றாக கடந்த மாதம் உலக பதினொருவர் அணியினை தமது நாட்டுக்கு வரவழைத்து மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரில் பாகிஸ்தான் விளையாடியிருந்தது.

அதோடு மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க ஆகிய நாடுகளையும் பாகிஸ்தான் தமது நாட்டுக்கு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் அழைத்துவர முயற்சி செய்து வருகின்றது. அதோடு பாகிஸ்தான் அரசாங்கமானது தமது நாட்டுக்கு வரும் இலங்கை வீரர்களுக்கு அந்நாட்டு தலைவர்களுக்கு நிகரான பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி செய்துள்ளது.

தரங்கவின் போராட்டம் வீண்; இரண்டாவது ஒரு நாள் போட்டியும் பாகிஸ்தான் வசம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று…

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர அவர்கள் Cricbuzz செய்தி இணையத்துக்கு பாகிஸ்தானில் நடைபெறும் போட்டி பற்றி கருத்து தெரிவித்திருந்தபொழுது, இலங்கை அணியின் பயணத்தின் முன்பாக உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து புலனாய்வு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளனர் எனக் கூறியிருந்தார்.

அதோடு பாகிஸ்தானுக்கு இலங்கை பயணமாவது உறுதி எனவும் குறிப்பிட்ட ஜயசேகர கிரிக்கெட் ரீதியாகவும், அரசியல் சுற்றுவட்டாரத்திற்குள்ளும் பாகிஸ்தானும் இலங்கையும் நெருங்கிய நண்பர்கள் எனவும்  சுட்டிக் காட்டியிருந்தார்.

இன்னும், பாகிஸ்தானின் தலைமை பயிற்றுவிப்பாளரான மிக் ஆத்தர் முன்னேற்றகரமாக மாறியிருக்கும் பாகிஸ்தானின் பாதுகாப்பு பற்றி ஞாயிற்றுக்கிழமை இரவு விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து இலங்கை அணியின் ஆதரவு குழாமும் பாகிஸ்தான் செல்ல சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த ஆதரவுக்குழாம் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் ஹசான் திலகரத்ன, வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் ருமேஷ் ரத்னாயக்க, இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க மற்றும் தலைமை பயிற்சியாளர் நிக் போத்தஸ் ஆகியோரை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.