யூனியன் கல்லூரியை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது மானிப்பாய் இந்துக் கல்லூரி

715

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையில் முதல் முறையாக இடம்பெற்ற நீலங்களின் சமரில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்திய மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 84 ஓட்டங்களினால் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இந்தப் போட்டி தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் வெகு விமர்சையான ஆரம்ப நிகழ்வுகளுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

இரண்டாவது முறையாகவும் இடம்பெறவுள்ள கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்

அதன் பின்னர் இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியின் தலைவர் சுஜீபன் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

அதன்படி களமிறங்கிய மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியின் முன் வரிசை வீரர்கள் சிறந்த முறையில் பிரகாசிக்கத் தவறினர். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு அவ்வணி தள்ளப்பட்டது.

எனினும் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அனோசன் மற்றும் நிரோஜன் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்பதற்காக சிறந்த முறையில் தமக்கிடையே 89 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர். அரைச் சதம் கடந்த அனோசன் வெறும் 32 பந்துகளை எதிர்கொண்டு, 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்களாக 58 ஓட்டங்களை குவித்தார். நிரோஜன் 24 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் பின் வரிசை வீரராக வந்த கனிஷ்டன் மிகவும் அபாரமாக ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை விரைவாக உயர்த்தினார். எதிரணியின் பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக இருந்த இவர், 78 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 103 ஓட்டங்களைப் பெற்றார்.

இவருக்கு பங்களிப்பு வழங்கிய ஏனைய பின்வரிசை வீரர்களான சுலக்ஷன் 23 ஓட்டங்களையும், துசிந்தன் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். எனவே, அவ்வணி தமது முதல் இன்னிங்சிற்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ஓட்டங்களைப் பெற்றுகொண்டது.

பந்து வீச்சில் யூனியன் கல்லூரி சார்பாக வகீசன் 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், மதீசன் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அதிக பட்சமாகக் கைப்பற்றினர்.

பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த யூனியன் கல்லூரி வீரர்கள், மானிப்பாய் தரப்பினரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அவ்வணியின் முன்வரிசை வீர்ர்கள் உட்பட அனைத்து வீர்ர்களும் மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து செல்ல, தனி ஒருவராக இருந்து போராடிய திவ்யனாத் 36 ஓட்டங்களை அதிக பட்சமாகப் பெற்றார்.

இலங்கைக்காக சர்வதேச மட்டத்தில் கால் பதிக்கும் அனித்தா

இதன் காரணமாக 31 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த யூனியன் கல்லூரி 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சைப் பொருத்தவரை, துடுப்பாட்டத்தில் சதம் கடந்த கனிஷ்டன் 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அணித் தலைவர் சுஜீபன் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் காரணமாக யூனியன் கல்லூரி பலோவ் ஓன் முறையில் மீண்டும் துடுப்பாட வேண்டிய நிலைக்கு உள்ளாகியது. இரண்டாவது இன்னிங்சிலும் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தமையினால் யூனியன் கல்லூரி வீரர்களால் ஓட்டங்களைப் பெற முடியாமல் போனது.

அவ்வணியின் முன் வரிசை வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரங்கு திரும்ப, லவன்ராஜ் மாத்திரம் தனித்து நின்று நீண்ட நேரம் களத்தில் இருந்து அரைச் சதம் கடந்தார். 66 பந்துகளை எதிர்கொண்ட அவர் நிதானமாக ஆடி 11 பவுண்டரிகள் அடங்களாக 52 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன் காரணமாக யூனியன் கல்லூரி வீரர்கள் 140 ஓட்டங்களை மாத்திரமே இரண்டாவது இன்னிங்சுக்காகப் பெற்று, இன்னிங்ஸ் மற்றும் 84 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினர்.

பந்து வீச்சில் துல்லியமாக செயற்பட்ட விக்னேஷ்வரன் 46 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளைப் பதம் பார்த்து இரண்டாவது இன்னிங்சில் அணிக்கு பெரிதும் பங்களிப்புச் செய்தார்.

போட்டியின் சுருக்கம்

மானிப்பாய் இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 337/10 – கனிஷ்டன் 103, அனோசன் 58, துசிந்தன் 46, வகீசன் 56/4, மதீசன் 58/3

யூனியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 113/10 – திவ்யனாத் 36, கனிஷ்டன் 38/4, சுஜீபன் 17/3

யூனியன் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 140/10 – லவன்ராஜ் 52, விக்னேஷ்வரன் 46/ 7

போட்டியின் முடிவு – மானிப்பாய் இந்துக் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 84 ஓட்டங்களால் வெற்றி