சிங்கர் கிண்ண தொடரிலிருந்து காலிறுதியுடன் வெளியேறும் யாழ். மத்திய கல்லூரி

686
Limited Over Encounter

19 வயதின் கீழான டிவிஷன் – III பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது  இடம்பெற்றுவரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட “சிங்கர் கிண்ண” கிரிக்கெட் தொடரின் காலிறுதி போட்டியொன்று இன்று (18) இப்பாகமுவவில் முடிவடைந்தது.

இந்த காலிறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினை வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 148 ஓட்டங்களால் அதிரடியாக வீழ்த்தியிருப்பதுடன்,  இவ் வெற்றியோடு லைசியம் பாடசாலை சிங்கர் கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினையும் பெற்றிருக்கின்றது.

காலிறுதிக்குள் நுழைந்தது யாழ் மத்திய கல்லூரி அணி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் பிரிவு 3 (டிவிஷன் – III) பாடசாலைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட…

அணிக்கு 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் போட்டியாக இடம்பெற்ற இந்த தீர்மானமிக்க காலிறுதி ஆட்டம் இப்பாகமுவ மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகியிருந்தது.  

ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வென்ற லைசியம் சர்வதேச பாடசாலையின் தலைவர் இமான்த பெர்னாந்து முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தேர்வு செய்து கொண்டார்.

இதன் பின்னர், பசால் ஹேசன் மற்றும் சந்திர யாசஸ்வின் ஆகியோரோடு லைசியம் பாடசாலை தமது துடுப்பாட்டத்தினை தொடங்கியது. லைசியம் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் 20 ஓட்டங்களையேனும் தாண்டாது ஏமாற்றம் தந்தனர். எனினும், மூன்றாம் இலக்கத்தில் ஆடிய சபீக் இப்தாரி பெறுமதியான அரைச்சதம் ஒன்றுடன் தனது தரப்பினை வலுப்படுத்தினார்.

இதேவேளை, இப்தாரிக்கு மத்திய வரிசை வீரர்களில் ஒருவரான டில்சான் ஜயவர்த்தன கைகொடுத்து 38 ஓட்டங்களினை பெற்றுத்தந்தார். பின்னர், டில்சான் ஜயவர்த்தன லைசியம் பாடசாலையின் நான்காம் விக்கெட்டாக இயலரசனின் பந்துவீச்சுக்கு இரையாகி ஆட்டமிழந்தார்.

சிறிது நேரத்தில் மீண்டும் அசத்திய இயலரசனினால் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சபீக் இப்தாரியின் விக்கெட்டும் வீழ்த்தப்பட்டது. பொறுமையான ஆட்டத்தினை காட்டிய இப்தாரி 89 பந்துகளினை சந்தித்து 5 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 58 ஓட்டங்களினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர், களம் வந்த லைசியம் கல்லூரியின் தலைவர் இமான்த பெர்னாந்து அதிரடியாக ஆடி ஆட்டமிழக்காமல் 43 பந்துகளுக்கு 46 ஓட்டங்களினைப் பெற்றுத்தர 50 ஓவர்கள் நிறைவில் லைசியம் சர்வதேச பாடசாலை 6 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்கள் குவித்திருந்தது.

யாழ். மத்திய கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக K. இயலரசன் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், S. மதுசன் மற்றும் S. துஷாந்தன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 238 ஓட்டங்களினை 50 ஓவர்களில் பெற பதிலுக்கு ஆடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி ஆரம்பத்தில் இருந்து தடுமாற்றத்தினை காண்பித்திருந்தது.

ஆரம்ப துடுப்பட்ட வீரர்களில் ஒருவரான வியாஸ்காந்த் வெறும் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார்.  முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களாக களம் வந்த S. நிஷான், K. இயலரசன், S. மதுசன் ஆகியோரும் சொதப்பலான ஆட்டத்தினைக் காட்டியிருந்தனர். அதோடு, எதிரணியின் பந்துவீச்சினை ஓரளவு தடுத்து ஆடிய யாழ். மத்திய கல்லூரியின் ஏனைய ஆரம்ப வீரர் A. ஜெயதர்சனின் துடுப்பாட்ட இன்னிங்சும் 21 ஓட்டங்களுடன் முடிந்தது.

மத்திய வரிசையிலும் தொடர்ந்தும் இந்நிலைமை தொடர, முடிவில் 26.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த யாழ். மத்திய கல்லூரி அணி 89 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று போட்டியில் படுதோல்வியடைந்ததுடன், சிங்கர் கிண்ண தொடரிலிருந்தும் இந்த காலிறுதிப் போட்டியோடு வெளியேறியது.

யாழ். மத்திய கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அவ்வணித்தலைவர் S. தசோபன் இறுதிவரை ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களினைப் பெற்று அதிகபட்ச ஓட்டங்களினைப் பதிவு செய்திருந்தார்.

மறுமுனையில் பந்துவீச்சில் லைசியம் கல்லூரி சார்பாக அவ்வணித்தலைவர் இமான்த பெர்னாந்து வெறும் 39 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், ஜீவிதன் மஹேஷ்வரன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினையும் அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பினையும் உறுதி செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

லைசியம் சர்வதேச பாடசாலை – 237/6 (50) சபீக் இப்தாரி 58, இமான்த பெர்னாந்து 46, டில்சான் ஜயவர்த்தன 38, K. இயலரசன் 2/50

யாழ். மத்திய கல்லூரி – 89 (26.2) S. தசோபன் 24*, இமான்த பெர்னாந்து 5/35, ஜீவிதன் மஹேஷ்வரன் 3/13

முடிவு – லைசியம் சர்வதேச பாடசாலை 148 ஓட்டங்களால் வெற்றி