இலங்கை அணிக்கு எதிராக மலேசியா கோல் மழை

75

மலேசிய அணிக்கு எதிராக கோலாலம்பூர் நகரின் தேசிய அரங்கில் நடைபெற்ற நட்புறவுக் கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி 6-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

2020 பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கான தனது மூன்றாவது தகுதிகாண் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்வதற்கான ஏற்பாடாகவே தென் கொரியா செல்லும் வழியில் சனிக்கிழமை (5) மலேசிய அணியை இலங்கை எதிர்கொண்டது. 

நட்பு ரீதியிலான போட்டிக்காக மலேசியா செல்லும் இலங்கை அணி

இலங்கை கால்பந்தாட்ட அணியானது…………

கோல்காப்பாளராக மொஹமட் லுத்பியின் இடத்தை சுஜான் பெரேரா பெறுவார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் வட கொரியாவுக்கு எதிராக விளையாடிய அதே ஆரம்ப பதினொருவர் இந்தப் போட்டியில் களமிறங்கினர்.  

போட்டியை ஆரம்பித்த இலங்கை அணி தொடக்கத்திலேயே பின்னடைவை சந்திக்க 17 நிமிடங்களுக்குள் மலேசியா 3 கோல்களை புகுத்தி முன்னிலை பெற்றது. 

பந்தை நேர்த்தியாக பரிமாற்றிய மலேசிய வீரர்கள் 10ஆவது நிமிடத்தில் ஷபீக் அஹமட் மூலம் முதல் கோலை புகுத்தினர். நான்கு நிமிடங்களின் பின்னர் கோணர் கிக் ஒன்றில் பந்து தனது கால்களுக்கு வர ஷஹ்ருல் சாத் அதனை நேராக வலைக்குள் செலுத்தினார். இலங்கை பின்கள வீரர்களால் அதனை முறியடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் 17 ஆவது நிமிடத்தில் நொர்ஷருல் இத்லான் ரைட் விங் வீரரிடம் இருந்து வந்த பந்தை கோலாக மாற்ற மலேசியா 3-0 என முன்னிலை பெற்றது. 

அனுபவமற்ற கோல்காப்பாளருடன் இலங்கை அணியின் பின்களம் பலவீனமாக செயற்பட்டதை மலேசிய வீரர்கள் முழுமையாக தமக்கு சாதகமாக்கிக் கொண்டனர்.  

மைதானம் எங்கும் சிதறியபடி விளையாடிய இலங்கை வீரர்களின் ஆட்டத்தில் எந்த நேர்த்தியான திட்டத்தையும் காண முடியவில்லை. மறுபுறம் ஒரு தொழில்முறை அணியாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய மலேசியா கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களிலும் கோல் புகுத்தியது. 

இலங்கை வீரர்கள் பந்தை பரிமாற்றி எதிரணிக்கு சற்றேனும் சவால் கொடுப்பதற்கு போட்டியின் 40 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. மதுஷான் டி சில்வாவுடன் இணைந்து நன்றாக விளையாடிய திலிப் பீரிஸ் முதல் பாதியின் கடைசி நிமிடங்களில் கோல் ஒன்றை பெற வாய்ப்பு இருந்தபோதும் அது தவறியது. அவர் உதைத்த பந்தை மலேசிய கோல்காப்பாளர் சிறப்பாக தடுத்தார்.

முதல் பாதி: மலேசியா 3 – 0 இலங்கை

மலேசியா தனது தாக்குதல் ஆட்டத்தை அதிகரித்த நிலையிலேயே இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமானது. இதன் மூலம் மலேசியா 51 ஆவது நிமிடத்தில் தனது நான்காவது கோலை பெற்றது. அக்யார் ரஷீட் அந்த கோலை பெற்றார்.

57 ஆவது நிமிடத்தில் தாக்குதல் ஆட்டத்தை பலப்படுத்தும் வகையில் அமான் பைசருக்காக மொஹமட் ஆகிப் களமிறங்கினார். போட்டியில் சோபிக்கத் தவறிய பைசர் மத்திய களத்தில் தனது பங்களிப்பைச் செய்யவும் தவறினார்.

4 கோல்கள் விட்டுக்கொடுக்கப்பட்ட நிலையில் 65 ஆவது நிமிடத்தில் பயிற்சியாளர் நிசாம் பகீர் அலி பின்களத்தில் மனரம் பெரேராவுக்கு பதில் அதிக அனுபவம் கொண்ட சரித்த ரத்னாயக்கவை மாற்றினார். போட்டியில் சற்று திறமையை வெளிப்படுத்தி வந்த சசங்க டில்ஹாரவுக்கு மாற்று வீரராக 70 ஆவது நிமிடத்தில் மதுஷன் டி சில்வா களமிறங்கினார். 

மலேசிய முன்கள வீரர்களுக்கு இலங்கையின் மத்திய களம் மற்றும் பின்களத்தில் அதிக நெருக்கடி இல்லாத போது அந்த அணி தனது கோல் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடிந்தது. பந்தை இலகுவாக முன்னோக்கி எடுத்து வந்த ஷபீக் அஹமட் போட்டியில் தனது இரண்டாவது கோலை 76 ஆவது நிமிடத்தில் புகுத்தினார்.  

மறுபுறம் மைதானத்தில் தனது பக்கம் அதிகம் நிலைகொண்ட இலங்கை வீரர்கள் எதிரணிக்கு மேலும் கோல்களை விட்டுக்கொடுப்பதை தவிர்ப்பதற்கே போராட வேண்டி இருந்தது. போட்டியின் கடைசி ஒருசில நிமிடங்களில் திலிப் பீரிசுக்கு பதில் எஸ்.எம். நித்ராசன் களமிறங்கினார்.

கடைசியாக மொஹமட் லுத்பி 85 ஆவது நிமிடத்தில், ஷபீக் தனது ஹெட்ரிக் கோல் பெறுவதை தடுத்தார். எனினும் 87 ஆவது நிமிடத்தில் அஹமட் ஷபீக் தனது ஹெட்ரிக் கோலை பெற்றார். நீண்ட தூரத்தில் இருந்து அவர் உதைத்த பந்து இலங்கை கோல்காப்பளருக்கு பிடிக்க முடியாமல் வலைக்குள் சென்றது. 

மலேசிய அணி தனது முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்த நிலையிலேயே இந்த போட்டியில் களமிறங்கி இருந்தது. இதற்கு முன் கடைசியாக இலங்கையை சந்தித்தபோது 3 கோல்கள் பெற்ற முஹமது சும்ரேஹ்வுக்கும் ஒய்வு அளிக்கப்பட்டிருந்தது.   

தென் கொரியாவை இன்னும் 5 நாட்கள் இடைவெளியில் எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் இலங்கை வீரர்கள் தமது பின்களத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவது அவசியமாகும். 

முழு நேரம்: மலேசியா 6 – 0 இலங்கை

கோல் பெற்றவர்கள்

மலேசியா – ஷபீக் அஹமட் 10’,75’,87’, சஹருல் சாத் 14’, நொர்ஷருல் இத்லான் 17’, அக்யார் ரஷீத் 51’ 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<