ஆப்கானிஸ்தான் அணியின் கன்னி டெஸ்ட் போட்டிக்கான திகதி அறிவிப்பு

90

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கடந்த வருடம் டெஸ்ட் வரம் பெற்றுக்கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தாம் பங்குபற்றவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பிரபல இந்திய அணியை சந்திக்கவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜுன் மாதம் 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் போட்டி பெங்களூரின் சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை நேற்று(16) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.  

டெஸ்ட் அரங்கில் கால்பதிக்கும் ஆப்கானிஸ்தான் முதலில் சந்திக்கும் அணி இந்தியா!

இலங்கை அணி எந்த திசையில் பயணிக்கப்போகிறது..

முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பிசிசிஐயின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இந்திய அணியின் எதிர்கால சுற்றுப் பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய கிரிக்கெட் சபைகளின் இணக்கத்துக்கு அமைய, இந்த வருடம் முடிவதற்கு முன் இரு அணிகளும் டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் அறிவிப்புகள் வெளியானது. எனினும் குறித்த போட்டிக்கான திகதிகள் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இரு நாட்டு கிரிக்கெட் சபை அதிகாரிகளின் பங்குபற்றலுடன் டெல்லியில் இன்று(16) நடைபெற்ற விசேட சந்திப்பின் பிறகு டெஸ்ட் போட்டி நடைபெறுகின்ற திகதி அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஒருபோதும் ஜுன் மாதத்தில் எந்தவொரு டெஸ்ட் போட்டியும் இந்தியாவில் நடைபெற்றதில்லை. அத்துடன், குறித்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 3 நாள் பயிற்சிப் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் சபையின் தற்காலிக பொதுச் செயலாளர் அமிதாப் சௌதிரி கருத்து வெளியிடுகையில்,

“இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவு நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இதன்படி, அவ்வணியின் கன்னி டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். எனவே, பொதுவாக ஜுன் மாதம் அதிக மழை கிடைக்கின்ற காலப்பகுதியாக இருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியை அக்காலப்பகுதியில் நடத்துவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நாம் தீர்மானித்தோம். அதன்படி, இந்தியாவின் முதல்தர மைதானங்களில் ஒன்றான பெங்களூர் சின்னச்சுவாமி மைதானத்தில் போட்டியை நடத்துவதற்கும் இறுதியில் தீர்மானம் எடுத்தோம்” என்றார்.

அண்மைக்காலமாக ஒரு நாள் மற்றும் T-20 அரங்கில் உலகின் டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற பிரபல அணிகளுக்கு சவாலளிக்கும் வகையில் விளையாடி வந்த ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு கடந்த வருடம் ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதனையடுத்து பாகிஸ்தான் அணியுடன், எதிர்வரும் மே மாதம் தமது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதாக அயர்லாந்து கிரிக்கெட் சபை முன்னதாக அறிவித்திருந்தது.

ஐ.சி.சியின் விதிமுறைகளை மீறிய கோஹ்லிக்கு அபராதம்

தென்னாபிரிக்க அணியுடன் தற்போது நடைபெற்று..

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் நிலவி வருகின்ற தீவிரவாதத் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்கின்ற சர்வதேச போட்டிகளை நடாத்துவதற்கு பொதுவான மைதானமாக இந்தியாவின் கிரேட்டர் நொய்டா மைதானத்தை வழங்குவதற்கு பிசிசிஐ நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி, குறித்த மைதானத்தில் அயர்லாந்து அணியுடனான ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளில் அவ்வணி விளையாடியிருந்தது.

அதனையடுத்து கடந்த வருடம் நடைபெற்ற .பி.எல் T-20 தொடரிலும், ஆப்கானிஸ்தான் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முதற்தடவையாக மொஹமட் நபி மற்றும் ராஷித் கான் ஆகிய வீரர்களுக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வருடமும் .பி.எல் ஏலத்தில் 13 ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

இவ்வாறு அந்நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு முன்நின்று உதவிசெய்த பிசிசிஐ, அவ்வணி பங்கேற்கவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை நடத்த முன்வந்துள்ளமை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பையும், நன்மதிப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.