நீர்கொழும்பு, பாணந்துறை அணிகளுக்காக சதமடித்து அசத்திய இளம் வீரர்கள்

20

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜேர் எமர்ஜிங் லீக் (Major Emerging League) இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஏ பிரிவுக்காக நடைபெற்ற பாணந்துறை கிரிக்கெட் கழகத்துக்கும், நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கும் இடையில் இன்று (15) நிறைவுக்கு வந்த போட்டி சமநிலையடைந்தது.

சச்சித் பத்திரன, கமிந்து மெண்டிஸ் ஆகியோருடன் சதம் குவித்த இளம் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற ….

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய லசித் குரூஸ்புள்ளே, நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக சதமடித்து அசத்தியதுடன், இளம் வீரரான நுவனிந்து பெர்னாண்டோ, பாணந்துறை விளையாட்டுக் கழகத்துக்காக சதமொன்றைப் பெற்றுக் கொடுத்தார்.

இதேநேரம், தேசிய அணி வீரரான ஷெஹான் ஜயசூரிய மற்றும் அமித ஷெஷான் ஆகியோர் தத்தமது கழகங்கள் சார்பாக தலா 5 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

நேற்று (14) பாணந்துறை நகர சபை மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாணந்துறை விளையாட்டுக் கழகம், விஷ்வ சதுரங்க மற்றும் தரூஷ பெர்னாண்டோ ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களைக் குவித்தது.

அவ்வணிக்காக விஷ; சதுரங்க 99 ஒட்டங்களைப் பெற்று சதமடிக்கும் வாய்ப்பை ஒரு ஓட்டத்தினால் தவறவிட, தரூஷ பெர்னாண்டோ 55 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் நீர்கொழும்பு கழக வீரர் ஷெஹான் ஜயசூரிய 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம், லசித் குரூஸ்புள்ளே சதம் அடித்து பெற்றுக் கொண்ட 119 ஓட்டங்கள், சந்தகென் பத்திரன ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 65 ஓட்டங்கள் என்பவற்றின் உதவியோடு முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றது.

புனித பேதுரு கல்லூரிக்காக சகல துறைகளிலும் அசத்திய சந்துஷ்

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதின் கீழ் பாடசாலை (டிவிஷன்-I)….

பந்துவீச்சில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்தின் அமித கௌஷல்ய 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

தொடர்ந்து 30 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய பாணந்துறை விளையாட்டுக் கழகம், 5 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி வீரரான நுவனிந்து பெர்னாண்டோ ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜேர் எமர்ஜிங் லீக் தொடரில் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது காலிறுதியில் எஸ்.எஸ்.சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 245/10 (62.5) – விஷ்வ சதுரங்க 99, தரூஷ பெர்னாண்டோ 55, திமிர ஜயசிங்க 25, நுவனிந்து பெர்னாண்டோ 22, சரண நாணயக்கார 20, ஷெஹான் ஜயசூரிய 5/48, சந்தகென் பத்திரன 3/87

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 275/10 (64.4): லசித் குரூஸ்புள்ளே 119, சந்தகென் பத்திரன 65*, ஷெஹான் ஜயசூரிய 32, அமித கௌஷல்ய 5/55, சவிந்து பீரிஸ் 3/51, தரூஷ பெர்னாண்டோ 2/81

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 218/5 (41): மொஹமட் சில்மி 38, நுவனிந்து பெர்னாண்டோ 102*, விஷ்வ சதுரங்க 23, சரண நாணயக்கார 26*, நிஷேன் சில்வா 21, டிமோன் பெர்னாண்டோ 2/33, சந்தகென் பத்திரன 2/35

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.