விராட் கோலியின் அபார சதத்தோடு றோயல் செலஞ்சர்ஸ் வெற்றி

88
Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 65ஆவது லீக் போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

அதேவேளை இந்த வெற்றியுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்தப் பருவத்திற்கான IPL தொடரில் தம்முடைய 7ஆவது வெற்றியினைப் பதிவு செய்து, IPL புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தினைப் பெற்றிருப்பதோடு அவ்வணி பிளே ஒப் சுற்றுக்கான தமது வாய்ப்பினையும் தக்க வைத்திருக்கின்றது.

>> உள்ளூர் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய வழிகாட்டுதல்கள்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையிலான IPL போட்டியானது நேற்று (18) ஹைதரபாத் நகரில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வழங்கியது.

அதன்படி சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியினர் போட்டியில் முதலில் துடுப்பாடி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்கள் எடுத்தனர்.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க வீரரான ஹெய்ன்ரிச் கிளாஸன் தன்னுடைய கன்னி IPL சதத்தோடு 51 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 104 ஓட்டங்கள் பெற்றார்.

மறுமுனையில் றோயல் செலஞ்சர்ஸ் அணி பந்துவீச்சில் மைக்கல் பிரஸ்வெல் 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 187 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது விராட் கோலி மற்றும் அணித் தலைவர் பெப் டு பிளேசிஸ் ஆகியோரது துடுப்பாட்டங்களோடு போட்டியின் வெற்றி இலக்கினை 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களுடன் அடைந்து கொண்டது.

>> ஐசிசி தரவரிசையில் விராட் கோஹ்லியை முந்திய அயர்லாந்து வீரர்

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அபாரமாக செயற்பட்டிருந்த விராட் கோலி தன்னுடைய 6ஆவது IPL சதத்தோடு 63 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் டு பிளேசிஸ் 47 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் புவ்னேஸ்வர் குமார் மற்றும் T. நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி தெரிவாகியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – 186/5 (20) ஹெய்ன்ரிச் கிளாஸன் 104(51), மைக்கல் பிரஸ்வெல் 13/2(2)

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – 187/2 (19.2) விராட் கோலி 100(63)*, பெப் டு பிளேசிஸ் 71(47)

முடிவு – றோயல் செலஞ்சர்ஸ் 8 விக்கெட்டுக்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<