சாமிக கருணாரத்னவின் அதிரடியில் NCC கழகத்துக்கு வெற்றி

Major Clubs Limited Over Tournament 2022

171

சாமிக கருணாரத்னவின் சகலதுறை ஆட்டத்தின் உதவியால் Ace Capital கழகத்துக்கு எதிரான முதல்தர கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் NCC கழகம் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 37 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் குழு A இல் தொடர் வெற்றிகளை ஈட்டி முன்னணி கழகங்களுக்கு அதிர்ச்சியளித்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ள Ace Capital கிரிக்கெட் கழகத்தை NCC கழகம் வீழ்த்தியது.

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் பிரதான கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் தொடரில் இன்று (22) நடைபெற்ற போட்டியில் குழு A இல் முதலிடத்தில் உள்ள Ace Capital கிரிக்கெட் கழகம் மற்றும் அதே குழுவில் 9 ஆவது இடத்தில் உள்ள NCC கிரிக்கெட் கழகமும் மோதின.

NCC கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற Ace Capital கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

சீரற்ற காலநிலை காரணமாக 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய NCC கழகம், 38.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களைக் குவித்தது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் சாமிக கருணாரத்ன 50 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுக்க, Ace Capital சார்பாக பந்துவீச்சில் லசித் க்ரூஸ்புள்ளே 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து 161 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய Ace Capital கிரிக்கெட் கழகம் 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இறுதியில் 37 ஓட்டங்களால் வெற்றியீட்டிய NCC கழகம், இம்முறை முதல்தர ஒருநாள் தொடரில் 5 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.

Ace Capital கிரிக்கெட் கழகத்தின் துடுப்பாட்டத்தில் ஷெஹான் பெர்னாண்டோ 27 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுக்க, NCC கழகம் சார்பில் பந்துவீச்சில் அசேல் சிகேரா 3 விக்கெட்டுகளையும், அஷைன் டேனியல், சச்சிந்து கொலம்பகே மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

அத்துடன், துடுப்பாட்டத்தில் அரைச் சதம் அடித்து NCC கழகத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த சாமிக கருணாரத்ன, 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் – 160 (38.3) – சாமிக கருணாரத்ன 50, அஹான் விக்ரமசிங்க 27, லஹிரு உதார 22, லசித் க்ரூஸ்புள்ளே 3/24, அஹான் டில்ஹார 1/5

Ace Capital கிரிக்கெட் கழகம் – 123 (34.1) – ஷெஹான் பெர்னாண்டோ 27, டி பாஸ்கரன் 21, அசேல் சிகேரா 3/21, சச்சிந்து கொலம்பகே 2/16, அஷைன் டேனியல் 2/19, லசித் எம்புலல்தெனிய 2/20,

முடிவு – NCC கழகம் 37 ஓட்டங்களால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<