BCCI யின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஹேமங் அமின்

193
BCCI

இந்திய கிரிக்கெட் சபையின்  இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக, இந்தியன் ப்ரீமியர் லீக்கின் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக பணியாற்றிவந்த ஹேமங் அமின் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஹேமங் அமின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமையை இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா நேற்று (13) உத்தியோகபூர்வமான மின்னஞ்சல் மூலமாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்டுவந்த ராஹுல் ஜொஹ்ரி குறித்த பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதுடன், அதனை இந்திய கிரிக்கெட் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன், இனிவரும் காலங்களில் கிரிக்கெட் சபையுடன் அவர் நீடிக்கமாட்டார் என குறித்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், ராஹுல் ஜொஹ்ரியின் குறித்த பதவி வெற்றிடத்துக்கு, இந்தியன் ப்ரீமியர் லீக்கின் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக செயற்பட்டு வரும் ஹேமங் அமின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெய் ஷா தன்னுடைய உத்தியோகபூர்வ மின்னஞ்சலில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் சபையை பொருத்தவரை, அதிக பதவி வெற்றிடங்கள் காணப்படுவதுடன், அதனை நிவர்த்திசெய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற கடினமான நேரத்தில் பதவியினை ஏற்றுக்கொண்டுள்ள ஹேமங் அமின் குறித்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தமுறை பதவி வெற்றிடங்களுக்கான நபர்களை தெரிவுசெய்வதற்கு, ஆலோசனை முகவர் நிலையம் ஒன்றுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் சபை பதவிகளை வழங்கிய போதும், இம்முறை இந்த வழியில் செல்லாமல், தாங்களாக முன்வந்து பதவி வெற்றிடங்களை நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தற்போது இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஹேமங் அமின் நியமிக்கப்பட்டுள்ள போதும், எதிர்வரும் காலங்களுக்காக முழுநேர பிரதம நிறைவேற்று அதிகாரியொருவரை தெரிவுசெய்யும் பணிகளில் இந்திய கிரிக்கெட் சபை ஈடுபட்டு வருகின்றது. 

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<