வாக்குமூலம் எதனையும் வழங்காமல் திரும்பிச் சென்ற மஹேல

1186
Getty

விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவுக்கு இன்று (3) காலை பிரசன்னமாகிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, வாக்குமூலம் எதனையும் பதிவு செய்யாமல் திரும்பிச் சென்றுள்ளார்.  

ஆட்ட நிர்ணய சதியின் உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் – சங்கக்கார

கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய – இலங்கை அணிகள் இடையிலான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார். குறித்த குற்றச்சாட்டினை அடுத்து இது தொடர்பான உண்மைத்தன்மையினை அறிய தற்போது விசாரணைகள் நடைபெறுகின்றன. 

இந்த விசாரணைகளின் ஒரு அங்கமாக நேற்று (2) இலங்கையின் முன்னாள் தலைவரும், கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணியினை வழிநடாத்தியவருமான குமார் சங்கக்காரவிடம் சுமார் 9 மணித்தியாலயங்கள், விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவினால் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.   

இதன் பின்னர், இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக இன்று (3) மஹேல ஜயவர்தன குறித்த விசாரணைப் பிரிவினால் அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அவர் இன்று குறித்த விசாரணைப் பிரிவிற்கு வந்து வாக்குமூலம் வழங்காமல் திரும்பிச் சென்றுள்ளார். 

முரளியிடம் உள்ள பன்முகத்தன்மை வோர்னிடம் இருக்கவில்லை – மஹேல ஜயவர்தன

இதேநேரம், விளையாட்டு அமைச்சின் விசாரணைப் பிரிவானது மஹேலவிடம் இருந்து வாக்குமூலம் பெறுவதற்கு பிறிதொரு திகதியினை அறிவிக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றது. 

எனினும், சில ஊடகங்கள் மஹேல இன்று காலை இடம்பெறவிருந்த விசாரணைகளுக்கு சொந்தக் காரணங்கள் கருதி வருகை தரமாட்டார் என செய்திகள் வெளியிட்டிருந்தன.   

எனினும், இந்த விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட மஹேல ஜயவர்தன, ”இந்த விசாரணைகளுக்கு இன்றைய தினம் வர வேண்டாம், பிரிதொரு தினத்தை உங்களுக்கு அறிவிப்போம் என்று எனக்கு நேற்று இரவு 11.30 மணியளவில் தெரிவிக்கப்பட்டது. எனினும், நான் எனது சொந்த காரணங்களுக்காக இன்றைய விசாரணைக்கு வருவதில்லை என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனவே, குறித்த செய்தி உண்மையில்லை என்பதனை உறுதிப்படுத்தவே நான் இன்று இங்கு வந்தேன்” எனத் தெரிவித்தார். 

இது தொடர்பில் தெளிவுபடுத்திய மஹேல ஜயவர்தன, எதுவும் ஊடகங்கள் குறிப்பிட்டபடி நடைபெறவில்லை என சுட்டிக் காட்டியிருந்ததோடு, விசாரணைகளுக்கான பூரண ஒத்துழைப்பு தன்னிடம் இருந்து வரும் எனவும் குறிப்பிட்டார்.   

மேலும் கருத்து வெளியிட்ட அவர் தன்னால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத செய்திகள் எதனையும் வெளியிட வேண்டாம் என ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததோடு, கிரிக்கெட் விளையாட்டுக்கான ஒரு சிறந்த அடித்தளத்தை இந்த நாட்டில் உருவாக்க வேண்டிய பொறுப்பு தன்னிடம் இருப்பதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

”கிரிக்கெட்டானது (மிகவும்) மதிக்கப்படும் விளையாட்டுக்களில் ஒன்றாக இருக்கின்றது. இந்த விளையாட்டினை (இந்த) நாட்டில் சரியான முறைமை ஒன்றுடன் எதிர்காலத்தில் விளையாடுவதற்கான ஒரு சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது.” என்றார். 

செய்தி மூலம் – Newswire.lk 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<