அறிமுக டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

India Tour of West Indies 2023

82

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பல்வேறு சாதனைகளைக் குவித்துள்ளார்.  

இந்தியாமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை 12ஆம் திகதி டோமினிக்காவில் ஆரம்பமாகியது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 150 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பாக அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

அதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸ்ஸை ஆரம்பித்த இந்திய அணியானது நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 312 ஓட்டங்கள் குவித்து 162 ஓட்டங்களுடன் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா தனது 10ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்து 103 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதன்மூலம், முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி எதிரணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை கடந்து இந்திய அணி அபார சாதனை படைத்தது. 1932ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான 92 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா இந்த சாதனையை படைத்துள்ளது. 

அத்துடன், மேற்கிந்திய தீவுகள் மண்ணில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியின் ஆரம்ப ஜோடி 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து சாதனை படைத்துள்ளது.   

மறுபுறத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 215 பந்துகளைச் சந்தித்து 11 பெளண்டறிகளுடன் சதம் விளாசினார். இதன்மூலம் அறிமுக போட்டியில் சதம் அடித்த 17ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதுமாத்திரமின்றி, குறித்த சதத்தின் மூலம் பல சாதனைகளையும் அவர் முறியடித்துள்ளார் 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அறிமுகப் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்தார். இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக அறிமுகமான ரோஹித் சர்மா 2013ஆம் ஆண்டும், ப்ரித்வி ஷா 2018 ஆம் ஆண்டும் சதம் அடித்து இருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் இந்திய மண்ணில் சதம் அடித்த போதிலும், தற்போது வெளிநாட்டு மண்ணில் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அறிமுகமாகி சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் ஜெய்ஸ்வாலுக்கு சொந்தமானது. 

அதேபோல, டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி குறைந்த வயதில் சதம் அடித்த இந்திய வீரராக ப்ரித்வி ஷா (18), அப்பாஸ் அலி (20), குண்டப்பா விஸ்வநாத் (20) ஆகியோருக்கு அடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்து குறைந்த வயதில் (21 வயது 196 நாட்கள்) அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

மேலும் வெளிநாட்டு மண்ணில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் அப்பாஸ் அலி, சுரேந்தர் அமர்நாத், பிரவீன் ஆம்ரே, சவுரவ் கங்குலி, விரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு அடுத்து ஏழாவது இந்திய வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைந்து கொண்டார்.   

மேலும், கடந்த 13 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கடைசியாக சுரேஷ் ரெய்னா 2010இல் இலங்கையில் சதமடித்திருந்தார். 

அத்துடன், ஷிகர் தவான் (2013) மற்றும் பிருத்வி ஷா (2018) ஆகியோருக்குப் பிறகு தனது அறிமுக டெஸ்டில் சதம் அடித்த மூன்றாவது இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். அதே போன்று 92 ஆண்டு கால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டில் அறிமுகப் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையும் ஜெய்ஸ்வால் பெற்றார் 

இதேவேளை, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜெய்ஸ்வால் 143 ஓட்டங்களுடன் களத்தில் உள்ள நிலையில், மூன்றாவது நாளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டைச் சதம் அடித்தால், அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<