ஏலத்தில் விலைபோன வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா?

Indian Premier League 2022

1444

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) நாளைய தினம் (26) மும்பையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகின்றது.

எட்டு அணிகளிலிருந்து 10 அணிகளாக மீண்டுமொருமுறை உருவெடுத்திருக்கும் IPL தொடரின் மீதான ஈடுபாடு ரசிகர்களிடம் அதிரகரித்துக்கொண்டே செல்கின்றதே தவிர, கொஞ்சமும் குறைந்தப்பாடில்லை.

இலங்கை வரும் அவுஸ்திரேலிய அணி ; போட்டி அட்டவணை வெளியானது!

அப்படி இந்திய ரசிகர்களை மாத்திரமின்றி, சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கும் IPL தொடரின் மீது, இலங்கை ரசிகர்களுக்கும் அலாதிப் பிரியம்.

முன்னாள் ஜாம்பவான்களான சனத் ஜயசூரியவின் சிக்ஸர்கள் தொடங்கி, மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் லசித் மாலிங்க ஆகியோரின் அற்புதமான ஆட்டங்களை IPL தொடரின் மூலம் கண்டுகளித்ததை எவராலும் மறக்கமுடியாது.

அவ்வாறு இலங்கை வீரர்கள் பிரகாசித்த உலகின் முன்னணி லீக் கிரிக்கெட் மேடையில், இலங்கை சார்பாக லசித் மாலிங்க மாத்திரமே தொடர்ந்தும் தனது இடத்தை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தக்கவைத்திருந்தார். இலங்கை கிரிக்கெட் 2015ம் ஆண்டுக்கு பின்னர் சரிவை சந்தித்துக்கொண்டிருக்க ஒரு சில வீரர்களுக்கு IPL வாய்ப்பு கிடைத்தாலும், அவர்களால் போட்டிகளில் விளையாட முடியவில்லை. மேலதிக வீரர்களாக இருந்தே நாடு திரும்பினர்.

லசித் மாலிங்கவுக்காக மாத்திரமே IPL தொடரை பார்த்த இலங்கை ரசிகர்கள் ஏராளம். ஆனால் 2021ம் ஆண்டிலிருந்து இலங்கையின் இளம் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க தொடங்கியுள்ளனர். அவர்களின் இந்த உருவாக்கத்தின் பலமாக நீண்டதொரு இடைவேளைக்கு பின்னர் இலங்கையைச் சேர்ந்த 5 வீரர்கள் இம்முறை IPL தொடருக்கான வெவ்வேறு அணிகளில் இடங்களை பிடித்துள்ளனர்.

புதிய வேகப்புயலாகவும், பந்துவீச்சின் நேர்த்தியை காட்டிவரும் துஷ்மந்த சமீர கே.எல்.ராஹூல் தலைமையிலான லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்காகவும், கூக்லி பந்துகளால் எதிரணியை தினறடிக்கவும், அதிரடி துடுப்பாட்டத்தால் பந்துவீச்சாளர்களை மிரட்டவும் தொடங்கியிருக்கும் வனிந்து ஹஸரங்கவை பெப் டு பிளெசிஸ் தலைமையிலான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளும் வாங்கியிருக்கின்றன.

இவர்களை தவிர்த்து இலங்கை அணியை பொருத்தவரை சிக்ஸர்களை இலகுவாக விளாசக்கூடியவர் என வர்ணிக்கப்படும் பானுக ராஜபக்ஷ பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும், மாய சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காகவும், சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் வாங்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை வீரர்கள் ஏலத்தில் விலைபோயிருந்தாலும், போட்டிகளில் விளையாடுவார்களா? அல்லது அவர்களுக்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா? என்ற கேள்விகள் ஒவ்வொரு இலங்கை ரசிர்களின் மனதில் உதிக்கும் முக்கியமான ஒரு கேள்வியாக மாறியிருக்கின்றது. எனவே, எம்மால் முடிந்த விடயங்களை வைத்து இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பிருக்கிறதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

மஹீஷ் தீக்ஷன – சென்னை சுபர் கிங்ஸ்

சென்னை சுபர் கிங்ஸ் அணியை பொருத்தவரை மஹீஷ் தீக்ஷனவுக்கு உறுதியான ஒரு இடம் கிடைக்குமா? என்ற கேள்விகள் இருந்தாலும் முதல் போட்டியில் விளையாடுவதற்கான அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.

சென்னை அணியின் சுழல் பந்துவீச்சு கட்டமைப்பை பார்க்கும் போது, கடந்தகாலங்களில் அதிகமான கவனத்தை ஈர்த்திருந்தவர் மஹீஷ் தீக்ஷன. அதேநேரம், வீசா பிரச்சினைகள் காரணமாக மொயீன் அலி முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்பதால், நிச்சயமாக மஹீஷ் தீக்ஷனவுக்கு முதல் போட்டியில் வாய்ப்பிருக்கிறது. மொயீன் அலி விளையாடினாலும், மிச்சல் சென்ட்னர் மாத்திரமே வெளிநாட்டு சுழல் பந்துவீச்சாளராக உள்ளார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பதினொருவரில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களாக அடம் மில்ன் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் களமிறங்க வாய்ப்பிருப்பதுடன், துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்துவதற்கு டெவோன் கொன்வே அல்லது மொயீன் அலி களமிறங்குவர். மீதமுள்ள ஒரு வெளிநாட்டு வீரருக்கான இடத்தில் டுவைன் பிராவோ ஏற்கனவே அணியில் இருப்பதால், கிரிஸ் ஜோர்டன் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை.

மஹீஷ் தீக்ஷனவை பவர்-பிளே ஓவர்களிலும் பயன்படுத்த முடியும் என்ற சொகுசு சென்னை அணிக்கு இருப்பதால், நிச்சயமாக முதல் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு மஹீஷ் தீக்ஷனவுக்கு இருப்பதுடன், தொடர்ச்சியான போட்டிகளிலும் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.

வனிந்து ஹஸரங்க – றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்

வனிந்து ஹஸரங்க றோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக 10.75 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறார். பெங்களூர் அணியின் முதன்மை சுழல் பந்துவீச்சாளராக இருந்த யுஸ்வேந்திர சஹாலை இழந்துவிட்ட பெங்களூர் அணி, கட்டாயமாக வனிந்து ஹஸரங்கவை கொண்டு களமிறங்கும்.

மும்பை ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகத்தன்மை கொண்டிருந்தாலும், வனிந்து ஹஸரங்கவுக்கு தொடர்ந்தும் வாய்ப்புகள் கொடுக்கப்படும். ஒருசிலவேளை ஹஸரங்க பிரகாசிக்க தவறினால், சுழல் பந்துவீச்சாளர் கரன் ஷர்மாவை அணிக்குள் அழைத்து, பின் அலன் போன்ற துடுப்பாட்ட வரரை அணிக்குள் இணைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ளன.

துஷ்மந்த சமீர – லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ்

லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளராக துஷ்மந்த சமீர மாத்திரமே உள்ளார். லக்னோவ் அணி மார்க் வூட்டை முதன்மை பந்துவீச்சாளராக இணைத்திருந்தாலும் உபாதை காரணமாக அவர் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

சமீரவுக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பாக மாறியுள்ளதுடன், அவரின் திறமையை IPL தொடரில் வெளிப்படுத்துவதற்கு நல்லதொரு களமாகவும் இந்த IPL தொடர் மாறியுள்ளது. மார்க் வூட்டுக்கு பதிலாக அவுஸ்திரேலியாவின் அன்ரு டை அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், முதல் போட்டியிலிருந்து துஷ்மந்த சமீர விளையாடுவார் என்ற உறுதியான தகவல்கள் லக்னோவ் அணியின் பக்கத்திலிருந்து வந்துக்கொண்டிருக்கின்றன. எனவே, சமீரவின் வேகத்தை இம்முறை IPL தொடரில் காண்பதற்கான வாய்ப்புகள் இலங்கை ரசிகர்களுக்கு அதிகம்.

பானுக ராஜபக்ஷ – பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்களுக்கான இடமானது தொடருக்கு முன்னதாகவே கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. துடுப்பாட்ட வரிசையில் ஜொனி பெயார்ஸ்டோவ் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர், சகலதுறை வீரர்கள் வரிசையில் ஓடியன் ஸ்மித் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் காகிஸோ ரபாடா ஆகியோர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், பானுக ராஜபக்ஷவுக்கு முதலிரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கான டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகின்றது. இந்த போட்டி எதிர்வரும் 28ம் திகதி நிறைவுக்கு வரும் நிலையில் அதன் பின்னர், ஜொனி பெயார்ஸ்டோ அணியுடன் இணைந்துக்கொள்வார். எனவே, இந்த இடைவெளியில் அவருக்கான மாற்று வீரராக பானுக ராஜபக்ஷ மாத்திரமே உள்ளார்.

எனவே, முதலிரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு பானுக ராஜபக்ஷவுக்கு வாய்ப்பிருப்பதுடன், இந்த போட்டிகளில் தன்னுடைய பிரகாசிப்பை நிரூபித்தால் தொடர்ந்துவரும் போட்டிகளிலும் பானுகவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

சாமிக்க கருணாரத்ன – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இம்முறை IPL தொடரில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்களை ஒப்பிடும்போது சாமிக்க கருணாரத்னவுக்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்களில், பெட் கம்மின்ஸ் முதல் மூன்று போட்டிகளிலும் விளயைாடமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. அவர் வெளியேறினாலும் அன்ரே ரசல், சுனில் நரைன் ஆகிய சகலதுறை வீரர்கள் ஏற்கனவே அணியுடன் உள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளராக டிம் சௌதி இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சகலதுறை மற்றும் வேகப்பந்துவீச்சுத்துறை சமனிலையடையும் பட்சத்தில் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரராக மொஹமட் நபி இணைக்கப்படலாம், இல்லாவிடின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக செம் பில்லிங்ஸ் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே, வீரர்களின் உபாதை மற்றும் அணியின் திட்டங்களுக்கு அமைய சாமிக்க கருணாரத்ன விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைந்த அளவில் மாத்திரமே உள்ளன.

இறுதியாக…

இந்த IPL தொடரில் ஒட்டுமொத்தமாக 5 இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு அவர்களுக்கு மாத்திரமானதல்ல. எதிர்காலத்தில் IPL தொடரில் விளையாடவேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கும் அனைத்து இலங்கை வீரர்களுக்குமானது.

இந்த தொடரில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சாதித்தால் மாத்திரமே எதிர்வரும் இலங்கை வீரர்களுக்கு IPL இல் வாய்ப்புகள் கிடைக்கும். அதுமாத்திரமின்றி, T20 கிரிக்கெட்டில் இலங்கை அணி மீண்டும் முன்னேறுகின்றது என்பதை காட்டுவதற்கு இதுவொரு மிகச்சிறந்த களமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<