ஜிம்பாப்வே வீரர்கள் இருவருக்கு போட்டித் தடை

Zimbabwe Cricket

140

தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஜிம்பாப்வே அணியின் சகலதுறை வீரர்களான வெஸ்லி மதவெரே மற்றும் பிராண்டன் மவுடா ஆகிய இருவருக்கும் நான்கு மாத கால தடை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.

கடந்தாண்டு வெஸ்லி மதவெரே மற்றும் பிராண்டன் மவுடா ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த 2 வீரர்களுக்கான தண்டனையை ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை நேற்று (25) அறிவித்துள்ளது.

அதன்படி வெஸ்லி மதவெரே மற்றும் பிராண்டன் மவுடா ஆகிய இருவருக்கும் நான்கு மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்படுவதாகவும், 2024 ஜனவரி மாதம் முதல் மூன்று மாதங்கள் சம்பளத்திலிருந்து 50 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்படுவதாகும், மேலும் அவர்களுக்கு இறுதியான எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

அத்துடன், இருவரும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் மருத்துவர்கள் அடங்கிய மறுவாழ்வு மையத்திற்கு செல்லவேண்டும் என்று ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் உட்கொள்வதை ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை ஒருபோதும் அனுமதிக்காது. போதைப்பொருள் உட்கொள்வது ஒரு கடுமையான குற்றமாகும். ஆனால் இரு வீரர்களின் அத்துமீறலால் இது ஒட்டுமொத்த ஜிம்பாப்பே கிரிக்கெட் சபைக்கும், கிரிக்கெட் விளையாட்டிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஒழுக்காற்றல் குழு கருதியது.

இருப்பினும், வீரர்களின் கருத்துகளை நாங்கள் கேட்டறிந்துள்ளோம். அவர்கள் செய்த தவறுக்காக கவலை தெரிவித்ததுடன், ஏற்கெனவே அப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக மறுவாழ்வு மையத்தை அனுகி சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் 23 வயதான வெஸ்லி மதவெரே. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியதுடன், இதுவரை 2 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 60 T20i போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளையும், 1700க்கும் மேற்பட்ட ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

அதேபோல, 26 வயதான பிராண்டன் மவுடா ஜிம்பாப்வே அணிக்காக 4 டெஸ்ட், 12 ஒருநாள் மற்றும் 10 T20i போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதேவேளை, குறித்த 2 வீரர்களைத் தவிர, போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு ஜிம்பாப்வே அணி வீரர் கெவின் கசுசாவிற்கும் தற்காலிக் போட்டித் தடை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை கடந்த வாரம் நடவடிக்கை எடுத்திருந்தது. குறித்த வீரர் ஜிம்பாப்வே அணிக்காக 7 போட்டிகளில் ஆடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<