ஐ.பி.எல். வரலாற்று சாதனையை முறியடித்த அல்ஷாரி ஜோசப்

185
IPLT20.COM
 

ஐ.பி.எல். தொடரில் நேற்று (06) நடைபெற்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அபார பந்து வீச்சை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் அல்ஷாரி ஜோசப், ஐ.பி.எல்.வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சு பிரதியை பதிவு செய்துள்ளார்.

பெங்களூரில் சிக்ஸர் மழை பொழிந்த என்ரே ரசல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான…

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாற்றமாக துடுப்பெடுத்தடியது. எனினும், இறுதியில் கிரன் பொல்லார்ட்டின் அதிரடியின் (46 ஓட்டங்கள் 26 பந்துகள்) உதவியுடன் மும்பை அணி 136/7 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர், தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்றிருந்த ஹைதராபாத் அணி, டேவிட் வோர்னர் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் ஆகிய முன்னணி துடுப்பாட்ட வீரர்களுடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. கடந்த போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இவர்கள், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

இந்தப் போட்டியில் மாலிங்கவுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்கிய அல்ஷாரி ஜோசப் ஹைதரபாத் அணியை முழுமையாக கட்டுப்படுத்தினார். தனது முதலாவது ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய இவர், முதல் பந்திலேயே டேவிட் வோர்னரை ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து அபாரத்தை வெளிப்படுத்திய இவர், 3.4 ஓவர்கள் வீசி 12 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த பந்து வீச்சு பிரதியை தன்வசப்படுத்தினார்.

இதற்கு முன்னர், ஐ.பி.எல். தொடரின் முதல் பருவகாலத்தில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடிய சொஹைல் தன்வீர், 14 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியமையே சாதனையாக இருந்தது. குறித்த சாதனை மாத்திரமின்றி இவரது ஐ.பி.எல். அறிமுகத்தில், மேலும் பல சாதனைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தது.

அத்துடன், அல்ஷாரி ஜோசப்பின் அபார பந்து வீச்சு தாக்கு பிடிக்க முடியாத ஹைதராபாத் அணி, வெறும் 96 ஓட்டங்களுக்கு சுருண்டு, ஐ.பி.எல். வரலாற்றில் தங்களுடைய குறைந்த ஓட்ட எண்ணிக்கையையும் பதிவு செய்திருந்தது.

அல்ஷாரி ஜோசப்பின் ஐ.பி.எல். அறிமுகத்தின் சாதனைகள்

  • ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த பந்து வீச்சு பிரதி. (இதற்கு முன்னர் சொஹைல் தன்வீர் 2008ம் ஆண்டு சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 14 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.)
  • ஐ.பி.எல். அறிமுக போட்டியில் சிறந்த பந்து வீச்சு பிரதி (2017ம் ஆண்டு குஜராத் லையன்ஸ் அணிக்காக விளையாடிய என்ரு டை, ரைஸிங் பூனே சுப்பர் ஜயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 17 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்)
  • ஐ.பி.எல். வரலாற்றில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் குறைந்த ஓட்ட எண்ணிக்கை. (இதற்கு முன்னர் 2015ம் ஆண்டு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 113 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது)
  • மொஹமட் நபி விளையாடிய 8 ஐ.பி.எல். போட்டிகளில், 40 இற்கும் அதிகமான ஓட்டங்களால் அவர் விளையாடிய அணி தோல்வியுற்ற முதல் சந்தர்ப்பம்.
  • ஐ.பி.எல். அறிமுக போட்டியில், முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்திய 7வது வீரர் என்ற பெருமையை பெற்ற அல்ஷாரி ஜோசப்.
  • ஐ.பி.எல். வரலாற்றில் தன்னுடைய முதல் பந்து ஓவரை, ஓட்டமற்ற ஓவராக வீசியதுடன், விக்கெட்டினையும் கைப்பற்றிய இரண்டாவது வீரராக அல்ஷாரி ஜோசப். (இதற்கு முன்னர் பெட் கம்மின்ஸ் மாத்திரமே இந்த சாதனையை படைத்துள்ளார்)

மெதிவ்ஸின் அரைச்சதம் வீண்; மாலிங்கவின் அணிக்கு இரண்டாவது வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில், எதிர்வரும் மே மாதம்…

இதேவேளை, இந்தப் போட்டியில் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளை பெற்றுள்ளதுடன், தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்துவந்த சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

போட்டி சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் – 136/7 (20), கிரன் பொல்லார்ட் 46 (26),குயிண்டன் டி கொக் 19 (18), சித்தார்த் கௌல் 34/2

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – 96/10 (17.4), தீபக் ஹூடா 20 (24), ஜொனி பெயார்ஸ்டோவ் 16 (10), அல்ஷாரி ஜோசப் 12/6

முடிவு – மும்பை இந்தியன்ஸ் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<