பின்தொடை காயத்தால் மெதிவ்ஸ் மீண்டும் அணியில் இருந்து விலகல்

719

நேற்று நிறைவடைந்த இந்தியாவுடனான இரண்டாவது T20 போட்டியில் இந்திய இன்னிங்ஸின் 12ஆவது ஓவரில் தனது 3ஆவது ஓவரை விசிக்கொண்டிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் பின்தொடை பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக பாதியில் ஓய்வறைக்குத் திரும்பினார்.

அவர் இலங்கை இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடவும் வராத நிலையில் இந்தோரில் இடம்பெற்ற குறித்த போட்டியில் இலங்கை 88 ஓட்டங்களால் மோசமான தோல்வியை எதிர்கொண்டது.

‘அஞ்செலோ தொடரின் கடைசி போட்டியில் ஆட மாட்டார். அவர் சுமார் இரண்டு வாரங்கள் போட்டிகளில் இருந்து விலகி இருப்பார் என உடற்பயிற்சி நிபுணர் நிர்மலன் தனபாலசிங்கம் குறிப்பிட்டார்’ என்று இலங்கை அணி முகாமையாளர் அசங்க குருசிங்க Cricbuzz செய்தி இணையதளத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

சர்மாவின் அதிரடி சதத்தோடு T-20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா

நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது…

மெதிவ்ஸ் தொடைப் பிடிப்பு, கெண்டைக் கால் மற்றும் கணுக்கால் காயங்களால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வருகிறார். இந்த ஆண்டு ஜனவரியில் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின்போது காயத்தால் அவர் முன்கூட்டியே நாடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து ஐந்து மாதங்கள் போட்டியில் ஆடாத அவர் இங்கிலாந்தில் நடந்த சம்பியன்ஸ் கிண்ண தொடரிலேயே மீண்டும் அணிக்குத் திரும்பினார். அப்போது அவர் சிறப்பு துடுப்பாட்ட வீரராக மாத்திரமே போட்டிகளில் பங்கேற்றார்.

கடந்த செப்டெம்பரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐக்கிய அரபு இராச்சிய சுற்றுப் பயணத்தை ஒட்டி இடம்பெற்ற பயிற்சியின்போது மெதிவ்ஸின் கெண்டைக் கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எட்டு வாரங்கள் போட்டிகளில் இருந்து வெளியேறிய அவர் இந்திய சுற்றுப்பயணத்திலேயே மீண்டும் அணியில் இணைந்தார்.

தற்போதைய இந்திய பயணத்தில் மெதிவ்ஸ் இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக உள்ளார். அவர் டெல்லியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் சதம் பெற்றதோடு மொஹாலியில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் சதம் ஒன்றை குவித்தார்.