Machhindra அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்ற புளூ ஸ்டார்

AFC Cup 2022

355

ஆசிய கால்பந்து சம்மேளன (AFC) கிண்ணத்திற்கான பூர்வாங்க தகுதிகாண் சுற்றில் நேபாளத்தின் Machhindra கால்பந்து கழகத்தை எதிர்கொண்ட இலங்கையின் புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

நேபாளத்தின் டஷாரத் அரங்கில் செவ்வாய்க்கிழமை (5) ஆரம்பமான இந்தப் போட்டியின் 15ஆவது நிமிடத்தில் புளூ ஸ்டார் அணிக்கு செனால் சந்தேஷ் பெற்றுக் கொடுத்த பெனால்டி வாய்ப்பை, அவ்வணி வீரர் ஜெர்ரி பெற்றார். ஜெர்ரி உதைந்த பந்தை Machhindra கோல் காப்பாளர் தடுத்தார்.

எனினும், 25ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் புளூ ஸ்டார் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கை, பசால் மிக வேகமாக முன்னோக்கி அனுப்ப, அதனை இஹ்சான் கோலாக்கி, புளூ ஸ்டார் அணியை முன்னிலைப்படுத்தினார்.

அடுத்த 3 நிமிடங்களில் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து பந்தைப் பெற்ற செனால், அதனை முன்னோக்கி எடுத்துச் சென்று, தடுப்பு வீரர் வருவதற்குள் கோல் நோக்கி உதைந்து, இரண்டு கோல்களால் அணியை முன்னிலைப்படுத்தினார்.

முதல் பாதியில் Machhindra வீரர்கள் கோலுக்கு எடுத்த பல முயற்சிகளை புளூ ஸ்டார் கோல் காப்பாளர் கவீஷ் சிறந்த முறையில் தடுத்தார்.

எனவே, முதல் பாதியில் இரண்டு கோல்களால் புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் முன்னிலை பெற்றது.

முதல் பாதி: Machhindra FC 0 – 2 புளூ ஸ்டார் வி.க

இரண்டாம் பாதியில் புளூ ஸ்டார் வீரர்கள் தடுப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள, நேபாள வீரர்கள் கோலுக்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்தனர். எனினும், புளூ ஸ்டார் அணியின் தடுப்பாட்டம் சிறந்த முறையில் இருந்தது. இதனால் போட்டியின் 90 நிமிடங்கள் வரையில் சொந்த மைதான தரப்பினருக்கு கோல்கள் எதனையும் பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனினும், போட்டியின் உபாதையீடு நேரத்தில், அதாவது இறுதி நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து உயர்த்தி உள்ளனுப்பப்பட்ட பந்தை நெபாள் தேசிய அணி வீரரும் Machhindra அணியின் தலைவருமான சுஜால் ஷ்ரேஷ்டா ஹெடர் மூலம் அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

எனவே, போட்டி நிறைவில் 2-1 என வெற்றி பெற்ற புளூ ஸ்டார் வீரர்கள் தொடரின் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளனர்.

அடுத்த சுற்றில் புளூ ஸ்டார் அணியினர் இந்தியாவின் மோகன் பகான் அணியினரை சந்திக்கவுள்ளனர்.

முழு நேரம்: Machhindra FC 1 – 2 புளூ ஸ்டார் வி.க

கோல் பெற்றவர்கள்

Machhindra FC – சுஜால் ஷ்ரேஷ்டா 90+4’

புளூ ஸ்டார் வி.க – மொஹமட் இஹ்ஸான் 25’, செனால் சந்தேஷ் 28’

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<