லிவர்பூலின் 30 ஆண்டு கனவு நிறைவேறியது

253

பட்டாசு சத்தத்தோடு ஆரம்பமான கொண்டாட்டங்கள், கரகோசங்கள், வெற்றி கோசங்கள் என்று வியாழக்கிழமை (25) இரவு முழுவதும் நீடித்தது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் லிவர்பூல் கழகம் இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கை வெல்வதென்பது சாதாரண நிகழ்வாக இல்லை. 

லிவர்பூல் நகர மக்களுக்கு அன்று இரவு தூக்கமில்லை. கொரோனா வைரஸ் தொற்றுக்கான கட்டுப்பாடுகளையும் யாரும் மதித்ததாக தெரியவில்லை. திரண்ட கூட்டங்களில் சமூக இடைவெளி மருந்துக்கும் இல்லை. ஒருசிலர் மாத்திரமே முகக் கவசம் அணிந்திருந்தார்கள். லிவர்பூல் நகர மையம், ஆன்பீல்ட் அரங்குக்கு வெளியே பெரும் கூட்டம் திரண்டது.    

புதிய வீரர்களுடன் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை கால்பந்து அணி

லிவர்பூல் அணி கடந்த புதனன்று நடைபெற்ற கிரிஸ்டல் பெலஸ் அணிக்கு எதிரான போட்டியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றபோது அது சம்பியனாவது உறுதியாகிவிட்டது. அதாவது லிவர்பூல் எஞ்சி இருக்கும் ஏழு போட்டிகளில் இரண்டு புள்ளிகளை பெற்றால் ப்ரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்து சம்பியனாகி விடும் என்பது உறுதியானது.

ப்ரீமியர் லீக் வெற்றியைக் கொண்டாடும் லிவர்பூல் நகர்

ஆனால் இரண்டாவது இடத்தில் இருக்கும் மன்செஸ்டர் சிட்டி அணி கடந்த வியாழக்கிழமை நடந்த செல்சிக்கு எதிரான போட்டியில் தோற்றாலும் கூட லிவர்பூல் சம்பியனாகிவிடும் என்ற நிலையிலேயே லண்டனில் நடந்த போட்டியில் சிட்டி 2-1 என தோற்றுவிடவே லிவர்பூல் சம்பியனானது. 

செல்சிசிட்டிக்கு எதிரான போட்டியை, லிவர்பூல் வீரர்களான கோல் காப்பாளர் அலிசன், பின்கள வீரர் விர்ஜில் வான் டிஜ்க் மற்றும் மத்திய கள வீரர் அலெக்ஸ் ஒக்ஸ்லான்டே உட்பட லிவர்பூல் வீரர்கள் பலரும் ஒன்றாக இணைந்து பார்வையிட்டதோடு செல்சி வென்றபோது பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

நம்ப முடியவில்லை, எனக்கு பேசுவதற்கு வார்த்தையில்லை. இது சாத்தியமானது என்று நான் நினைத்ததை விடவும் இது அதிகம். இந்தக் கழகத்துடன் சம்பியனாக மாறுவது வியக்கத்தக்கது என்று லிவர்பூல் மேலாடையை அணிந்துகொண்டு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த அந்தக் கழகத்தின் முகாமையாளர் க்ளொப் குறிப்பிட்டார்

பார்சிலோனாவுக்கு 6.7 மில். யூரோக்களை செலுத்த நெய்மா உத்தரவு

லிவர்பூல் அணி ப்ரீமியர் லீக்கை வெல்வது இது 19 ஆவது தடவையாக இருந்தாலும் 1989-90 பருவத்திற்கு பின்னர் பட்டத்தை வெல்வது இது முதல் முறை. அதாவது 30 ஆண்டு வரட்சிக்குப் பின்னர் இங்கிலாந்தின் உச்ச லீக் கிண்ணத்தை வென்றிருக்கிறது.  

எனினும் இந்தப் பருவத்தில் லிவர்பூல் அணி ஒரு தனிக்காட்டு ராஜாவாகவே ஆடியது. அது ப்ரீமியர் லீக்கை வெல்லும் என்று இந்தப் பருவம் ஆரம்பித்த விரைவிலேயே புரிந்துவிட்டது. அது சம்பியனாகும் தருணம் பற்றிய ஏக்கம் பல மாதங்கள் நீடித்தது. கடந்த நவம்பரில் சிட்டி அணியை தோற்கடித்தபோது அதனை நெருங்கி வந்தது. பொக்சின் டே போட்டியில் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியபோது இதுவே சந்தர்ப்பம் என்று ஏக்கத்துடன் பார்த்த ரசிகர்கள் அதிகம். ஜனவரியில் மன்செஸ்டர் யுனைடட்டிற்கு எதிரான போட்டியை மொஹமட் சலாஹ் வென்று கொடுத்தபோது இனி கிண்ணம் சர்வ நிச்சயம் என கொண்டாடியவர்கள் பலர்.    

லிவர்பூல் முகாமையாளர் க்ளொப்  (PA)

இடையே வந்த கொரோனா வைரஸ் தொற்று லிவர்பூலின் அந்தக் கனவு வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது. கடந்த மார்ச் மாதம் வைரஸ் தொற்றுக் காரணமாக ப்ரீமியர் லீக் போட்டிகள் நிறுத்தப்படும்போது லிவர்பூல் 25 புள்ளிகள் இடைவெளியுடன் வெற்றிக் கிண்ணத்தை தொடும் தூரத்தில் இருந்தது

எவ்வாறாயினும் மூன்று மாதங்கள் கழித்து கடந்த ஜூன் 17 ஆம் திகதி ப்ரீமியர் லீக் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது லிவர்பூல் அளவுக்கு யாருக்கும் மகிழ்ச்சி தந்திருக்காது. மீண்டும் ஆரம்பமான ப்ரீமியர் லீக்கில் எவர்டனுக்கு எதிரான ஆட்டத்தை கோலின்றி சமன் செய்த லிவர்பூல் பெலஸ் அணியை துவம்சம் செய்தது சம்பியனாவதற்கு போதுமாக இருந்தது

மொஹமட் சலாஹ் மற்றும் சாடியோ மானேவுக்கு இந்த பருவம் சிறப்பாக இருந்தது. இவர்கள் முறையே 17 மற்றும் 15 லீக் கோல்களை பெற்றனர். ட்ரென்ட் அலக்சாண்டர் ஆர்னோல்ட் மற்றும் அன்டி ரொபட்சன் இடையே 20 கோல் உதவிகள் பெறப்பட்டன. ஆனால் எதிரணிக்கு எப்போதும் சவாலாக இருந்த சலாஹ், மானே மற்றும் ரொபர்டோ பர்மினோ மேலும் 21 கோல் உதவிகளை பெற்றனர்.  

கோல்காப்பாளர் அலிசன் இந்தப் பருவத்தில் அதிகபட்சமாக 12 போட்டிகளில் எதிரணிக்கு கோல் விட்டுக்கொடுக்கவில்லை. முகாமையாளருக்கான ஏழு மாதந்த விருதுகளில் க்ளொப்ஸ் ஐந்தை வென்றதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.  

மொஹமட் சலாஹ் மற்றும் சாடியோ மானே (www.thisisanfield.com )

இந்த கிண்ணத்தை வென்றதற்கு அப்பால் இந்தத் தொடரில் லிவர்பூல் பல சாதனைகளையும் முறியடித்தது. அந்த அணி ஒக்டோபர் தொடக்கம் பெப்ரவரி 29 வரை தொடர்ச்சியாக 18 போட்டிகளில் வென்று சாதனையை சமன் செய்தது. இந்தப் பருவத்தில் சொந்த மைதானத்தில் அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளது. அது 44 போட்டிகளில் தோல்வியுறாத அணியாக இருந்து சாதனை படைத்தது.  

அதுமட்டுமல்ல ஒரு பருவத்தில் 100 புள்ளிகளை பெற்ற சாதனையை முறியடிப்பதற்கு லிவர்பூலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. இதுவரை அந்த அணி 31 போட்டிகளில் 28 வெற்றிகளுடன் 86 புள்ளிகளை பெற்றுள்ளது.    

அதேபோன்று ஒரு பருவத்தில் அதிக போட்டிகளில் வெற்றி (சாதனை – 32 வெற்றிகள்), சொந்த மண்ணில் அதிக வெற்றி (18), வெளி மைதானத்தில் அதிக வெற்றி (16) மற்றும் மிகப்பெரிய இடைவெளியுடன் சம்பியன் பட்டம் (19 புள்ளிகள்) என்று பல சாதனைகளை முறியடிப்பதற்கு லிவர்பூல் அணிக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது.    

இந்த பருவகால புள்ளிப் பட்டியல் (31 வாரங்களின் பின்)

அதிக போட்டிகள் எஞ்சி இருக்க சம்பியன் பட்டம் வெல்லப்பட்ட சாதனையும் இந்தப் பருவத்திலேயே பதிவாகி இருக்கிறது. லிவர்பூல் அணிக்கு இன்னும் ஏழு போட்டிகள் எஞ்சியுள்ளன.   

1970 மற்றும் 1980கள் என்பது லிவர்பூல் வெற்றி மேல் வெற்றிகளை அள்ளிய காலம். அதுவும் 1972-73 மற்றும் 1990-91க்கு இடைப்பட்ட பருவங்களில் அந்த அணி ஒரே ஒரு தடவைதான் ப்ரீமியர் லீக்கில் முதலாவது அல்லது இரண்டாவது இடத்திற்கு வர தவறியிருக்கிறது.  

இறுதியாக 1989/90 இல் ப்ரீமியர் லீக் கிண்ணம் வென்ற லிவர்பூல் அணி(www.thisisanfield.com )

ஆனால் கடந்த 30 ஆண்டுகள் என்பது கசப்பானது. லிவர்பூல் இந்தக் காலத்தில் மூன்று FA கிண்ணங்கள், நான்கு லீக் கிண்ணங்கள், ஒரு Uefa கிண்ணம், இருமுறை சம்பியன்ஸ் லீக்குகளை வென்றபோதும் ப்ரிமியர் லீக் மாத்திரம் கைகூடவே இல்லை.  

1990களின் நடுப்பகுதியில் உற்சாகமான இளம் அணியை கொண்டிருந்தபோது அது வலுவான அணிகளை வீழ்த்தும் அளவுக்கு வலுப்பெற்றிருக்கவில்லை. 2002 இல் கெரார்ட் ஹுலியர்ஸின் பயிற்சியின் கீழ் லிவர்பூல் ஆர்சனலிடம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ரபாயேல் பெனிடஸின் அணியும் 2009 சிறப்பாக செயற்பட்டபோது மன்செஸ்டர் யுனைடட் இடம் பின்தங்கியது

2014இல் உத்வேகமான, ஆனால் குறைபாடுகளைக் கொண்ட அணியாக களமிறங்கிய லிவர்பூல் அதிகம் சாதித்தபோதும் மன்செஸ்டர் சிட்டியிடம் சம்பியன் பட்டத்தை இழந்தது

PSG ஐ விட்டு வெளியேறும் கவானி, தியாகோ சில்வா

2015 ஒக்டோபரில் க்ளொப்சின் வருகைக்கு பின்னர் லிவர்பூலில் தெளிவாக மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. செல்வந்த அணியாக சாதனை விலைக்கு கோல் காப்பளரை வாங்கியது என்று க்ளொப்சின் உத்தியால் லிவர்பூல் அணியின் பின்களம் பலம்பெற்றது

2017இல் மொஹமட் சலாஹ், சாடியோ மானே வருகை, அதேபோன்று அன்டி ரொபர்ட்சனுடனான ஒப்பந்தம் அணிக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக இருந்தது. இதன் விளைவாக கடந்த மூன்று ப்ரீமியர் லீக் பருவங்களிலும் லிவர்பூல் ஒரு வலுவான அணியாகவே செயற்பட்டது.  

குறிப்பாக கடந்த ஆண்டில் அந்த அணி சம்பியனாவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தபோது மன்செஸ்டர் சிட்டியிடம் பின்னடைவை சந்தித்தது. அதாவது அந்தப் பருவத்தில் வெறுமனே ஒரு போட்டியில் தோற்ற நிலையிலேயே லிவர்பூல் அணியால் கிண்ணத்தை வெல்ல முடியாமல்போனது வரலாற்றில் நிகழாத துரதஷ்ட சம்பவம்.   

எனவே லிவர்பூலின் 30 ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த வெற்றியாகவே இந்த வெற்றி கருதப்படுகிறது. என்றாலும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக அதனை முழுமையாக கொண்டாடும் சந்தர்ப்பம் அந்த அணிக்கு கிடைக்கவில்லை என்பது கவலையே

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க