பெனால்டியில் வென்று காலிறுதிக்கு சென்ற இங்கிலாந்து சுவீடனுடன் பலப்பரீட்சை

156
FIFA World Cup

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 16 அணிகள் மோதும் சுற்றின் பரபரப்பான கடைசி நொக் அவுட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் கொலம்பியாவை வென்று சுவீடனுடனான காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மொஸ்கோவில் ரஷ்ய நேரப்படி செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற போட்டியின் கடைசி நிமிடத்தில் கொலம்பியா பதில் கோல் திருப்பியதால் ஆட்டம் 1-1 என சமநிலைக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து நடந்த மேலதிக நேரத்தில் வெற்றி கோல் பெறப்படாததால் போட்டி பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது.

இறுதி நேரத்தில் எழுச்சி பெற்ற பெல்ஜியம் பிரேசிலுடனான காலிறுதிக்கு முன்னேற்றம்

பிஃபா உலகக் கிண்ண நொக் அவுட் போட்டியில் அபாரமான..

இதில் இரு அணிகளும் முதல் இரு பெனால்டிகளையும் உதைத்த நிலையில் மூன்றாவது ஸ்பொட் கிக்கை இங்கிலாந்து வீரர் ஜோர்டன் அன்டர்சன் தவறவிட இங்கிலாந்து பக்கத்தில் நெருக்கடி ஏற்பட்டது.

எனினும் கொலம்பியா அடித்த கடைசி இரண்டு பெனால்டி ஷூட் அவுட்களையும் இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜோர்டன் பிக்போர்ட் தடுத்ததால் இங்கலாந்து அணிக்கு 4-3 என்ற கோல் கணக்கில் வெல்ல முடிந்தது.

குறிப்பாக இங்கிலாந்து அணி உலகக் கிண்ண நொக் அவுட் போட்டி ஒன்றை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெல்வது இதுவே முதல்முறையாகும். உலகக் கிண்ண வரலாற்றில் இங்கிலாந்து இதற்கு முன்னர் மூன்று முறை பெனால்டி ஷூட் அவட்டில் பங்கேற்றபோதும் அந்த அணியால் ஒரு போட்டியிலும் வெற்றி பெற முடியவில்லை.

அந்த அணி பிரதான போட்டி தொடர் ஒன்றில் பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெறுவது இதுவே இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் அந்த அணி 1996 யூரோ கிண்ணத்தில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி இருந்தது.    

எவ்வாறாயினும் பலம்மிக்க அணியாக களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்த போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தியபோதும் கொலம்பியா கோல் பெற விடாமல் கடுமையாக போராடியதோடு அந்த அணியும் அடிக்கடி எதிரணி கோல் எல்லையை ஆக்கிரமிப்பதை காண முடிந்தது.

முதல் பாதி: இங்கிலாந்து 0 – 0 கொலம்பியா  

முதல்பாதியுடன் ஒப்பிடுகையில் இரண்டாவது பாதி ஆட்டம் அதிக ஆக்ரோசம் கொண்டதாகவும் இரு அணிகளும் அடிக்கடி முட்டி மோதுவதில் ஈடுபடுவதுமாக இருந்ததால் நடுவருக்கு வேலை அதிகமாக இருந்தது.

இலங்கை தேசிய கால்பந்து அணியின் இறுதிக் குழாம் அறிவிப்பு

இலங்கை தேசிய கால்பந்து அணி எதிர்வரும் காலங்களில்…

எனினும் 54 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த கோணர் கிக்கின்போது அணித்தலைவர் ஹெரி கேனை பெனால்டி பகுதிக்குள் வைத்து பார்லொஸ் சென்சேஸ் கீழே வீழ்த்தியதால் ஸ்பொட் கிக் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட கேன் வலைக்குள் பந்தை செலுத்தி இங்கிலாந்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.

ஹெரி கேன் இம்முறை உலகக் கிண்ணத்தில் புகுத்தும் ஆறாவது கோல் இதுவாகும். இதன்மூலம் அவர் அதிக கோல்கள் பெற்று தங்கப் பாதணியை வெல்லும் போட்டியில் உறுதியான முன்னிலையில் உள்ளார்.  

அதேபோன்று 24 வயதுடைய கேன் தனது முதல் மூன்று உலகக் கிண்ண போட்டிகளிலும் தோன்றியே இந்த கோல்களை பெற்றுள்ளார். உலகக் கிண்ண வரலாற்றில் தனது முதல் மூன்று போட்டிகளிலும் அவரை விடவும் அதிகமாக மூன்றே மூன்று வீரர்கள் மாத்திரமே கோல் பெற்றுள்ளனர். ஹங்கேரியின் சான்டோர் கொக்சிஸ் (ஒன்பது), ஜெர்மனியின் கெர்ட் முல்லர் (ஏழு) மற்றும் ஆர்ஜன்டீனாவின் கில்லர்மோ ஸ்டெபில் (ஏழு) ஆகியோரே அவர்களாவர்.

ஹெரி கேனின் இந்த கோலை அடுத்து போட்டி பரபரப்பை எட்டியதோடு வீரர்கள் அடிக்கடி ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டனர். இதனால் ஆறு கொலம்பிய விரர்கள் மற்றும் இரண்டு இங்கிலாந்து விரர்கள் என எட்டுப்பேர் மஞ்சள் அட்டை பெற்றனர்.

போட்டியின் சமநிலை கோலை பெறுவதற்கு கொலம்பியா கடைசி நேரத்தில் அதிக தீவிரம் காட்டியது. இந்நிலையில் போட்டியின் முழு நேரம் முடிவதற்கு 4 நிமிடங்கள் இருக்கும்போது கொலம்பியாவுக்கு ஆட்டத்தின் முதல் முறையாக கோனர் கிக் ஒன்று கிடைத்தது. அந்த பொன்னான சந்தர்ப்பத்தை தவற விடாத கொலம்பிய வீரர் யெர்ரி மினா தலையால் முட்டி பதில் கோல் போட்டார்.  

6 அடி 5 அங்குலம் கொண்ட வீரரான மினா இம்முறை உலகக் கிண்ணத்தில் மூன்று கோல்களை போட்டதோடு அந்த மூன்று கொல்களையும் தலையால் முட்டியே வலைக்குள் செலுத்தினார்.

2002 இல் மிரோஸ்லெவ் க்ளொசுக்கு அடுத்து ஒற்றை உலகக் கிண்ண தொடரில் தலையால் முட்டி அதிக கோல் பெற்றவராக மினா உள்ளார். எனினும் க்ளோஸ் இவ்வாறு ஐந்து கோல்களை பெற்றார்.  

அத்துடன் கொலம்பிய அணியின் பின்கள வீரராக இருந்தே அவர் அதிக கோல்களை பெற்றுள்ளார். பின்கள வீரர் ஒருவர் ஒற்றை உலகக் கிண்ணத்தில் அதிக கோல் பெற்ற ஜெர்மனியின் போல் பிரைட்னரில் 1974 ஆம் ஆண்டு சாதனையை யெர்ரி மினா சமன் செய்துள்ளார்.

இந்நிலையில் முதல் முழு நேரம் முடிந்த பின் நடந்த அரை மணி மேலதிக நேரத்தில் இரு அணிகளும் கோல் பெற தீவிரமாக போராடியபோதும் பந்து வலைக்குள் புகவில்லை. பின்னர் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக இடம்பெற்ற பெனால்டி ஷூட் அவுட்டில் வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறை உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மறுபுறம் கடந்த 2014இல் உலகக் கிண்ண காலிறுதி வரை வந்த கொலம்பியா அதற்கு முன்னர் மூன்று தடவை நொக் அவுட் சுற்றுவரை முன்னெறி வெளியேறியுள்ளது.

இதன்படி உலகக் கிண்ண காலிறுதியில் பலப்பரீட்சை நடத்தும் எட்டு அணிகளும் தற்போது தேர்வாகியுள்ளன. சுவீடனுடனான இங்கிலாந்தின் காலிறுதிப் போட்டி வரும் சனிக்கிழமை (07) சமரா அரங்கில் நடைபெறவுள்ளது.             

முழு நேரம்: இங்கிலாந்த 1 – 1 கொலம்பியா

கோல் பெற்றவர்கள்

  • இங்கிலாந்து ஹெரி கேன் 54′ (பெனால்டி)
  • கொலம்பிய யெர்ரி மினா 90’+3  

பெனால்டி ஷூட் அவுட்: இங்கிலாந்து 4 – 3 கொலம்பியா


சுவீஸை வீழ்த்தி சுவீடன் காலிறுதிக்கு முன்னேற்றம்

Image Courtesy – AP

சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி சுவீடன் அணி 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறை உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

முதல் பாதி ஆட்டம் இழுபறியோடு கோலின்றி முடிந்த நிலையில் போட்டியின் ஒரு மணி நேரம் கடந்த பின்னர் எமில் போர்ஸ்பேர்க் (Emil FORSBERG) போட்ட கோல் மூலம் சுவீடன் அணி வெற்றியை உறுதி செய்து கொண்டது. இதன்படி சுவீடன் அணி 24 ஆண்டுகளுக்கு பின்னர் தனது முதல் உலகக் கிண்ண காலிறுதியில் இங்கிலாந்து அல்லது கொலம்பிய அணியை எதிர்கொள்ளும்.

இறுதி நேரத்தில் எழுச்சி பெற்ற பெல்ஜியம் பிரேசிலுடனான காலிறுதிக்கு முன்னேற்றம்

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் 16 அணிகள் சுற்றின் கடைசி தினமான செவ்வாய்க்கிழமை (03) சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற இந்த போட்டியை பார்வையிட 64,042 ரசிகர்கள் அரங்கில் கூடினர். இதன் மூலம் 2018 உலகக் கிண்ணத்தை பார்வையிட வந்த ரசிகர்களின் எண்ணிக்கை 40 மில்லியனை எட்டியது.

இந்நிலையில் போட்டியின் எட்டாவது நிமிடத்தில் சுவீடன் வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு கோல் பெறும் வாய்ப்புகளை பறிகொடுத்தனர். தொடர்ந்து 24 ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டிவன் சுபார் கோலை நோக்கி தலையால் முட்டி அருமையான வாய்ப்பொன்றை பெற்றபோதும் அந்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியால் சென்றது.

அதேபோன்று 28 ஆவது நிமிடத்தில் சுவீடன் வீரர் மார்கஸ் பேர்க் உதைத்த பந்து கோல்காப்பாளரின் கையில்பட்டு கம்பத்தில் பட்டும்படாமலும் வெளியேறியது. பின்னர் 38 ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ப்ளேரிம் ட்செமைலிக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அவர் வெளியால் உதைத்து தவறவிட்டார்.   

எவ்வாறாயினும் 41 ஆவது நிமிடத்தில் சுவீடன் வீரர் அல்பின் எக்டாலுக்கு பொன்னான வாய்ப்பொன்று கிட்டியது. மிகையேல் லஸ்டிங் பரிமாற்றிய பந்தை அவர் நெருங்கிய தூரத்தில் இருந்து உதைத்தபோதும் அது வலைக்கு மேலால் சென்றது.    

முதல் பாதி ஆடத்தில் இரு அணிகளுக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தபோதும் சுவிட்சர்லாந்தே பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்திருந்தது. சுவிட்சர்லாந்து அதிக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் சுவீடன் சரியான இடத்தில் நின்று அவைகளை தடுத்தது.

முதல் பாதி: சுவீடன் 0 – 0 சுவிட்சர்லாந்து

கோலின்றி ஒரு மணி நேரம் வரை நீடித்த போட்டியில் கடைசியில் 66 ஆவது நிமிடத்தில் சுவீடன் அணி கோலொன்றைப் பெற்று முடிவுக்கு கொண்டுவந்தது. பெனால்டி எல்லைக்கு வெளிப்புறத்தில் இருந்து பந்தை பரிமாற்றிக் கொண்டிருந்த எமில் போர்ஸ்பேர்க் பந்தை பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து மின்னல் வேகத்தில் உதைக்க அந்த பந்து சுவிட்சர்லாந்து பின்கள வீரர் மனுவேல் அகன்ஜியிடம் இருந்து சற்று திசை திரும்பி வலைக்குள் புகுந்தது.

இலங்கை தேசிய கால்பந்து அணியின் இறுதிக் குழாம் அறிவிப்பு

2002 ஆம் அண்டு செனகலுக்கு எதிராக ஹென்ரிக் லெர்சன் கோல் அடித்த பின் சுவீடன் அணி உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில் பெறும் முதல் கோல் இதுவாக இருந்தது.

போட்டியின் கடைசி நிமிடங்கள் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் சுவிட்சர்லாந்தின் பதில் கோல் போடும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. போட்டியின் 64 சதவீதமான நேரம் பந்தை தன்வசம் வைத்திருந்தபோதும் சுவிஸ் அணியால் முன்னிலை பெற முடியவில்லை. குறிப்பாக சுவிட்சர்லாந்து 18 தடவைகள் கோலை நோக்கி உதைத்தபோதும் வெறும் நான்கு பந்துகளே இலக்கு சரியாக இருந்தது. ஐந்து பந்துகள் வலை தவறி வெளியேறியதோடு 9 தடவைகள் சுவீடன் பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டது.   

போட்டி முடியும் நிமிடங்களில் சுவீடனுக்கு நடுவர் பெனால்டி ஒன்று வழங்கியபோதும் வீடியோ நடுவர் உதவி தொழில்நுட்பம் மூலம் அந்த வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது. தவறிழைத்த சுவிட்சர்லாந்து வீரர் மைக்கல் லங்கிற்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. எவ்வாறாயினும் அது போட்டியில் பெரிய தாக்கம் செலுத்தவில்லை.   

சுவிட்சர்லாந்து அணியால் மற்றுமொரு உலகக் கிண்ண நொக் அவுட் போட்டியில் வெற்றிபெற முடியாமல் போனது. அந்த அணி விளையாடிய ஏழு நொக் அவுட் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து வெளியேறியதோடு கடைசியாக விளையாடிய (1994, 2006, 2014 மற்றும் 2018) நான்கு நொக் அவுட் போட்டிகளிலும் இந்த நிலைமையை சந்தித்துள்ளது.

அதிலும் சுவிட்சர்லாந்து அணி உலகக் கிண்ண நொக் அவுட் போட்டிகளில் கோல் ஒன்றை பெறுவதற்கு கூட தடுமாறி வருகிறது. கடைசியாக 64 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரிய அணிக்கு எதிரான நொக் அவுட் போட்டியிலேயே அந்த அணி கோல் புகுத்தியது. அதிலும் அந்த போட்டியில் சுவிஸ் அணி 5 கோல்களை போட ஆஸ்திரியா 7 கோல்களை புகுத்தி போட்டியை வென்றது.  

பல்வேறு சாதனைகளுக்கு காரணமாகியிருக்கும் பின்ச்சின் அதிரடி சதம்

மறுபறம் 1958 ஆம் ஆண்டுக்கு பின்னரே சுவீடன் அணி அடுத்தடுத்து இரண்டு உலகக் கிண்ண போட்டிகளில் வென்றுள்ளது. தனது சொந்த நாட்டில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உலகக் கிண்ண போட்டியில் சுவீடன் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி பிரேசிலிடம் தோல்வியை சந்தித்தது.  

முழு நேரம்: சுவீடன் 1 – 0 சுவிட்சர்லாந்து

கோல் பெற்றவர்கள்

  • சுவீடன் – எமில் போர்ஸ்பேர்க்; 66′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<